வெளியிடப்பட்ட நேரம்: 14:42 (30/12/2015)

கடைசி தொடர்பு:15:05 (30/12/2015)

'நான் யார்?' விடைகண்ட ரமண மகரிஷி!

நான் யார்...? - இந்தக் கேள்விக்கு விடை தேடிச் செல்கிறவர்கள் மாமனிதர்கள் போற்றும் மகான்களாகி விடுகின்றனர். நான் யார் தெரியுமா? என்று முண்டாசு தட்டி, மீசையை முறுக்கிக் காட்டுகிறவர்களையே சமூகத்தில் பார்த்துப் பார்த்துப் புளித்துப் போய்விட்ட மனிதர்களுக்கு, மாமணிகள் போற்றிய விருதுநகர், திருச்சுழி, வேங்கட ரமணன் (பிற்கால ரமண மகரிஷி) பற்றிய ஒரு சிறு விருந்துதான் இந்தக் கட்டுரை.

நதிமூலம், ரிஷி மூலம் பார்க்கக் கூடாது என்பர் சான்றோர். அப்படித்தான் ஒரு நாள் துறு, துறுவென ஓடியாடிக் கொண்டிருந்த அந்த சிறுவன், ' நீங்கள் எப்போது பிறந்தீர்கள்..?" என மகரிஷி (ரமண மகரிஷிகளை இனி இப்படியே இக்கட்டுரையில் அழைப்போம்) அவர்களைப் பார்த்துக் கேட்டான். 'இந்த மாசம் முப்பதாம் தேதிதான் பிறந்தேன்' என்று மகரிஷி எழுதிக் காட்ட அன்றுதான் அவருடைய பிறந்த நாள் உலகிற்கு தெரிய வந்தது.

விருதுநகர் மாவட்டம் அரசியல் உலகிற்கு ஒரு பெருந்தலைவரை  கொடுத்தது என்றால், ஆன்மிக உலகிற்கு மகத்தான மகரிஷியாம் ரமணரைக் கொடுத்திருக்கிறது. மீசை கூட அரும்பாத பொழுதில் 'நான் யார்?' என்ற கேள்விக்கு பதிலைத்தேடி திருவண்ணாமலை எனப்படும் அருணாச்சல மலையின் அடிவாரத்துக்கு வந்து சேர்ந்தார், வேங்கட ரமணன்.

நாட்கணக்கில், மாதக் கணக்கில், ஆண்டுக் கணக்கில் 'நான் யார்?' என்ற கேள்விக்கான விடையை கண்டுபிடிக்கும் முயற்சியில், தனிமையான சூழலில், கடுந்தவத்தில் அந்த வேங்கடரமணன் மூழ்கிக் கிடந்தார். உடலை மறைத்துக் காட்ட வேண்டிய முழ நீளத்துக்கான  (கௌபீனம்) ஒரே ஒரு துண்டுத் துணியுடன்,  பற்றற்று எளிமையின் வடிவமாக தவத்தில் மூழ்கிய வேங்கடரமணன் உண்டு, உறங்கி பார்த்தவர் ஒருவரும் இலர்.

ஒரு நாள் அந்த 'ஞானம்' அவருக்கு கிடைத்தது. ஆம், அவரைச் சுற்றி கைகூப்பி நின்றபடி சேவை புரிய ஒரு பெருந்திரள் மக்கள் காத்து நின்றனர். வேங்கட ரமணன் அன்றுதான் 'ரமணராக' கண் விழித்தார். ஒளிப் பிரவாகமாய் ஊற்றெடுத்து ஊடுருவிச் சென்ற அந்த விழிகளில் கருணை, அருள், ஆசீர்வாதம் என்று  மானுட வாழ்வியலுக்கு தேவையான நவாம்சங்கள் அத்தனையும் ஒரு சேரக் கிடைத்ததாகவே மக்கள் பரிபூரணமாக நம்பினர். நாளுக்கு நாள் அவரைத் தேடிவரத் தொடங்கியது, மக்கள் கூட்டம்.

"பூக்களோ, பொன்னோ, பொருளோ கொண்டு வந்து என்னிடம் கொடுக்காதீர், அவைகளை வாங்கிக் கொள்ளும்படி என்னை வற்புறுத்தாதீர்" என்று தரைமணலில் எழுதிக் காட்டி,  தன்னுடைய நிலைப்பாட்டை உலகிற்கு அறிவித்தார் கடைசிவரை மவுனத்தைக் கடைப் பிடித்த மகரிஷி.

வெள்ளையும், சிவப்பும் கலந்த நிறத்திலான தேகம் மகரிஷிகளுக்கு இருந்ததால், ஊர் மக்கள் அவரை 'பிராமண சுவாமிகள்' என்று அழைக்க ஆரம்பித்தனர். ஆனால், மகரிஷிகளின் நிழலாய் தொடர்ந்து நின்று அவருக்குப் பணிவிடைகள் செய்து நின்ற காவ்யகண்ட கணபதி முனி என்ற சீடர் தான் அவரை 'ரமண மகரிஷி' என்று ஓர்நாள் உரிமையுடன் அழைத்து விட்டார்.

சீடரின் பெயர் சூட்டல் மகரிஷிகளின் ஆழ்மனதில் அப்படியே லயித்து நிற்க... சீடனைப் பார்த்து மெல்லிதாய் ஓர் புன்னகை பூத்தார். மகான்களின் உள்ளம் ஏற்பு நிலையை இப்படித்தான் வெளிப்படுத்துமோ? ஆம்... அன்று முதல் வேங்கடரமணன், பிராமண சுவாமிகள் எல்லாம் மறைந்து ரமண மகரிஷிகள் என்றானார், அந்த அருணாச்சல மலையின் அடிப்புறத்துக்காரர்.

காலச்சக்கரத்தின் வேகமான சுழற்சியிலும், முற்போக்குச் சிந்தனையிலும், பாரதியின் கவிதா வேள்வியிலும் கனன்று நின்ற சுத்தானந்த பாரதி, ரமணரின் தீவிர சீடரானார். தன்னையறியும் கருத்தில் ஒன்றி 'தன்னையறிய' பஞ்சபூதங்களில் அக்னித் தலமான திருவண்ணாமலையின் தென்புற அடிவாரத்தில் பத்மாசன நிலையிலிருந்த ரமணரிடம் சரணடைந்தார்.

வெகுவிரைவில், 'ரமணவிஜயம்' என்ற பேரில் ஆன்மிக உலகிற்கு பொக்கிஷமான மகரிஷியின் வாழ்க்கை சரிதத்தை எழுதினார். அந்நூல் பிற்காலத்தில் சமஸ்கிருதம், குஜராத்தி, வங்காளம், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று இருபதுக்கும் மேற்பட்ட மொழிவழி நூலாக வெளிவந்தது.

நான் யார்? வாழ்வும் வாக்கும், ஏகான்ம பஞ்சகம், உள்ளது நாற்பது போன்ற நூல்கள் மகரிஷிகள் இயற்றிய நூல்கள்.

எளிமை மட்டுமல்ல, அன்பிலும் மகரிஷி நிறைகுடம்தான்.  ஆசிரமத்தில் இருக்கும் நாய், அணில்களை 'பசங்கள்' என்றே அழைப்பார். யாராவது அவைகளை 'சூ' என்று விரட்டினால், "அந்த உடல்களுக்குள்ளே எந்த எந்த ஆத்மாக்கள் உள்ளதோ... பூர்வகர்மாவின் எந்தெந்த பாகத்தை முடிப்பதற்கு அவைகள் இப்பிறவி எடுத்தனவோ...  பசங்களை (அவைகளை) விரட்டாதீர்கள்... !" என்பார் மகரிஷிகள்.

ரமண மகரிஷிகளின் பிறந்த நாளான இந்நாள் மட்டுமல்ல, வரவுள்ள புத்தாண்டிலும், அடுத்தடுத்த ஒவ்வொரு நாட்களிலும் அன்பால் மலர்ந்து, அன்பால் நிறைவோம்.

ந.பா.சேதுராமன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்