Published:Updated:

உலகை திரும்பி பார்க்க வைக்கப்போகும் மும்பை தாராவி!

விகடன் விமர்சனக்குழு
உலகை திரும்பி பார்க்க வைக்கப்போகும் மும்பை தாராவி!
உலகை திரும்பி பார்க்க வைக்கப்போகும் மும்பை தாராவி!

“ஸ்லம்டாக் மில்லியனர்” படத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த மும்பையின் குடிசை பகுதியான தாராவியில்,  உலகின் முதல்  “குடிசை குடியிருப்பு அருங்காட்சியகம்” ஒன்று தொடங்கப்பட உள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மும்பையின் தாராவி பகுதியில் கிடைக்கும் பொருட்களை கொண்டு உருவாக்கப்படவுள்ள இந்த அருங்காட்சியகம், பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டு இரண்டு மாதங்கள் பார்வைக்கு வைக்கபடவுள்ளதாம்.

மண்பானை வகைகள் தொடங்கி,  இங்கு மறுசுழற்சி செய்யும் பொருட்கள் வரை அனைத்தும் இடம்பெற உள்ள இந்த கண்காட்சி,  இங்கு வாழும் மக்களின் வாழ்கையை பிரதிபலிக்குமாறு அமைக்கப்பட உள்ளது. “டிசைன் மியூசியம் தாராவி” என்கிற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இந்த முயற்சி,  குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களின் வித்தியாசமான திறமைகளையும்,  அவர்களது கலை திறன்களையும் வெளிக் கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்படுகிறதாம்.

உலகை திரும்பி பார்க்க வைக்கப்போகும் மும்பை தாராவி!

தாராவி பகுதியில் வசிக்கும் பல லட்சக் கணக்கான மக்களில் பெரும்பாலானோர், மும்பையின் தொழிற்சாலைகள் மற்றும் இதர இடங்களில் வேலை செய்பவர்களாக உள்ளனர். ஏழ்மையிலும், சுகாதாரமற்ற சூழ்நிலையிலும் வாழும் இந்த மக்களையும், இந்த பகுதியையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட "ஸ்லாம் டாக் மில்லியனர்" படத்துக்கு பிறகு வெளிநாட்டு பயணிகளின் கவனத்தை அதிகமாக
 ஈர்த்து வருகிறது தாராவி.

இங்கு கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு பயன்படும் விதம்,  இங்கிலாந்து இளவரசர் சார்லசின் பாராட்டைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

- கோ. இராகவிஜயா

(மாணவப் பத்திரிக்கையாளர்)