Published:Updated:

மேலே உப்பு... கீழே மணல்... கடத்தல் மாஃபியாக்களின் பலே மோசடி!

மேலே உப்பு... கீழே மணல்... கடத்தல் மாஃபியாக்களின் பலே மோசடி!
மேலே உப்பு... கீழே மணல்... கடத்தல் மாஃபியாக்களின் பலே மோசடி!
மேலே உப்பு... கீழே மணல்... கடத்தல் மாஃபியாக்களின் பலே மோசடி!

ஈரோடு: உப்பு மூட்டைகளுக்கு நடுவே மணலை மறைத்து நுாதனமாக மணல் கடத்தும் கும்பலை வளைத்துப்பிடித்தது ஈரோடு காவல்துறை.

எத்தனுக்கு எத்தன் என்பார்கள். திமுக, அதிமுக என எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முந்தைய ஆட்சியின் சில செயல்பாடுகளை நிறுத்திவிடுவர் என்பது தமிழகம் அறிந்த செய்தி. ஆனால் இதில் விதிவிலக்கு மணல் திருட்டு. கடிவாளம் போட முடியாத இந்த திருட்டு 2 ஆட்சியிலும் கனஜோராக நடக்கும். மணல் திருட்டை கட்டுப்படுத்த,  மாநில அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் தங்கு தடையின்றி பல்வேறு வழிகளிலும் நடக்கிறது. ஈரோட்டில் நூதனமாக நடந்த மணல் திருட்டை கண்டுபிடித்து, இப்படியும் கடத்துவார்களா என அதிர்ந்து கிடக்கிறது காவல்துறை.

நாமக்கல் மாவட்டத்திலிருந்து கிளம்பிய ஐம்பது டன் எடையுடன் கூடிய  மூன்று லாரிகள்,  இன்று காலை கர்நாடகாவை நோக்கி பயணிப்பதாக ஒரு ரகசிய தகவல் ஈரோடு காவல்துறையினருக்கு கிடைத்தது. இதனையடுத்து ஆசனூர் எனும் ஊரில்  அந்த லாரிகளை மடக்கிப்பிடித்தனர் போலீஸார்.

பதினான்கு டயர்களை கொண்ட அந்த லாரிகள் அனைத்துமே கன்டெயினர்களுக்கு இணையாக இருக்கவே அவற்றை சோதனையிட்டனர். உப்பு மூட்டைகள் இருப்பதாக டிரைவர்கள் தெரிவிக்க,  சந்தேகம் அடைந்த காவல்துறையினர் லாரிகளை முழுமையாக சோதனையிட்டபோதுதான் அதிர்ச்சியான காட்சியை கண்டனர். மேலே உப்பு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த லாரியின் மத்திய பகுதியில்,  காய்ந்த மணலை கொட்டி, அதன்மேல் தார்பாலின் போட்டு பக்காவாக மூடப்பட்டு இருந்தது. அதற்கான பில்லும் லாரியிலேயே இருந்திருக்கிறது.

மேலே உப்பு... கீழே மணல்... கடத்தல் மாஃபியாக்களின் பலே மோசடி!

இந்த உப்பு மூட்டைகளை சுற்றி மேலும் ஒரு தார்பாலின் போட்டு மூடி கயிறு போட்டிருக்கிறார்கள். இந்த லாரிகள், நாமக்கல்லில் இருந்து ஈரோடு மாவட்டம் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு சென்றதாக விசாரணையில் தெரியவர,  லாரிகளை ஓட்டிச்சென்ற பிரபாகரன், அண்ணாதுரை  ஆகிய இரண்டு டிரைவர்களையும் கைது செய்திருக்கிறது காவல்துறை. லாரியின் உரிமையாளர்களான பாலசிங்கம், ராஜசிங்கம் ஆகிய இருவரும் தலைமறைவாகியிருக்கிறார்கள்.
 
லாரி டிரைவர்களிடம் நடத்திய விசாரணையில், முப்பதாயிரம் செலவில் அனுப்பப்படும் இந்த மணல் கர்நாடகாவில், ஒரு லட்ச ரூபாய் வரை விற்கப்படுவதாக தெரியவந்தது. தினமும் வெவ்வேறு பாதைகளில் கர்நாடகத்திற்கு இப்படி நுாதனமாக மணல் கடத்தப்படுவதாகவும் அவர்கள் தகவலை கக்கியிருக்கிறார்கள்.

இதையடுத்து ஈரோடு மாவட்டத்திலிருக்கும் அனைத்து செக்போஸ்ட்களும் அலர்ட் செய்யப்பட்டிருக்கிறது.

- வீ.மாணிக்கவாசகம்