சுவிட்ச் ஆன் செய்தால் குழந்தை... ஆஃப் செய்தால் இல்லை! - அடேங்கப்பா கருத்தடை முறை | Revolutionary male birth control easy as flipping a switch

வெளியிடப்பட்ட நேரம்: 12:41 (12/01/2016)

கடைசி தொடர்பு:15:40 (12/01/2016)

சுவிட்ச் ஆன் செய்தால் குழந்தை... ஆஃப் செய்தால் இல்லை! - அடேங்கப்பா கருத்தடை முறை

ருத்தடை மாத்திரைகள், ஆணுறைகள், வாசக்டமி போன்ற கருத்தடை சாதனங்கள், சிகிச்சைகளுக்குப் பதிலாக, ஆண்களுக்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ள  புதிய கருத்தடை சாதனம்தான் இந்த ஸ்பெர்ம் கன்ட்ரோல் ஸ்விட்ச்.

பைமெக் SLV என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த கருவியை வெற்றிகரமாக தயாரித்து,  அதனை முதன்முதலாக தனது உடலிலேயே சோதனை செய்து வெற்றி பெற்றிருக்கிறார் ஜெர்மனை  சேர்ந்த கிளமன்ஸ் பைமெக். கருத்தடை சாதனங்களின் பங்களிப்பில், இது மிகப்பெரிய புரட்சி என்கிறார் பைமெக்.

என்ன செய்கிறது இந்த ஸ்விட்ச் ?

இதன் செயல்பாடுகளைப்பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு, மனிதனின் உடலியல் செயல்பாடுகளை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இனப்பெருக்கத்தின் முக்கிய நிகழ்வாக, விதைப்பையில் இருந்து விந்துவானது வெளியேற்றப்பட்டு, அது பெண்ணின் கரு முட்டையை அடைகிறது. ஆணின் உடலில், விதைப்பையானது, விந்துவை தொடர்ந்து உற்பத்தி செய்து, சேமித்து வைக்கிறது. உடலுறவின் போது, இந்த விதைப்பைகள் தூண்டப்பட்டு, சேமிக்கப்பட்ட விந்து, விந்து நாளங்கள் வழியாக  பயணித்து, புராஸ்டேட் சுரப்பி மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டு, சிறுநீர் குழாய் வழியாக வெளியேறுகிறது. உறவின் போது நடக்கும் அடிப்படை செயல்பாடு இது.

இப்போது, வழக்கத்தில் இருக்கும்  வாசக்டமி என்னும் ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை, விதைப்பைக்கும், சிறுநீர் குழாய்க்கும் இடையே இணைப்பாக இருக்கும் விந்து நாளங்களை துண்டித்து, விந்து வெளியேறுவதை தடுக்கும். இது நிரந்தரமான சிகிச்சை. பின்னர் மீண்டும், அறுவை சிகிச்சை செய்து வாசக்டமி ரிவர்சல் என்னும் சிகிச்சை மூலமாக இணைத்துக்கொள்ளலாம். இதற்கு மாற்றாக, எளிமையான திட்டமாக பைமெக் முன்வைக்கும் திட்டம்தான் இந்த பைமெக் SLV ஸ்விட்ச்.விதைப்பையில் இருந்து, விந்து கொண்டு செல்லும்  விந்து நாளங்களில் இது பொருத்தப்படும். இது ஒரு திறந்து மூடும் வால்வு போன்ற அமைப்பைக் கொண்டிருப்பதால், எளிதாக விந்துவை ஸ்விட்ச் மூலம் கட்டுப்படுத்த முடியுமாம். 1.8 செ.மீ நீளம் கொண்டுள்ள  இந்த பைமெக் SLV யின் எடை வெறும் 2 கிராம்தான். இதனை ஒரு சிறிய அறுவை சிகிச்சை மூலம் பொருத்திவிட்டால் போதும். பின்னர் நிரந்தரமாக இது செயல்படும். இதனை இயக்குவதும் எளிது. இந்த ஸ்விட்சின் முன்புறம் நமது உடலின் வெளிப்புறத்தில் தெரியும், விதைப்பையின் முன்புறம் இருக்கும். எனவே உள்ளிருக்கும் இந்த ஸ்விட்சை, கைகளால் தொட்டுப்பார்த்தே ஆன் செய்யவும், ஆப் செய்யவும் முடியும். இரண்டு விதைப்பைகளில் இருந்து, இரண்டு நாளங்கள் விந்துவை எடுத்து  செல்கின்றன. எனவே இந்த ஸ்விட்சை இரண்டு நாளங்களில் பொருத்த வேண்டும்.


பாதுகாப்பானதா இது?

100 % பாதுகாப்பனதுதான் என்கிறார் பைமெக். இது முழுக்க, முழுக்க பீக் ஆப்டிமா என்னும் பொருளால் தயாரிக்கப்படுகிறது. பீக் ஆப்டிமா என்பது, இது போன்ற இம்ப்ளான்ட் சிகிச்சைகள் செய்யப்படும், பாகங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருள். உடலுக்குள் பொருத்தப்படும் பாகங்கள், செயற்கை  எலும்புகள் போன்றவை எல்லாம் கூட  இதனால் தயாரிக்கப்படுபவையே. இதன் சிறப்பு,  உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தாது என்பதால் உடல் தசைகள் இதனை ஏற்றுக்கொள்ளும். அதே போல, இதனை விலங்குகளிடம் கூட சோதனை செய்யாமல், தன் உடலில் முதல் சோதனை செய்து வெற்றி அடைந்திருக்கிறார் பைமெக். காரணம் பைமெக்,  விலங்குகள் மீது அக்கறை கொண்டவர் என்பதால், இதனை விலங்குகளிடம் சோதனை செய்யாமல் தன்னிடமே நடத்திக்கொண்டுள்ளார். இதனால் பின்விளைவுகள், பக்கவிளைவுகள் என எதுவும் கிடையாது என்பதால் பயப்படாமல் இதனை செய்யலாம் எனக்கூறுகிறார்.

எப்படி உருவானது இந்த யோசனை?

கிளமென்ஸ் பைமெக், ஜெர்மனியில் பிறந்தவர். 1998 ல் தொலைக்காட்சியில், வாசக்டமி அறுவை சிகிச்சை பற்றிய டாக்குமென்டரி ஒன்றை பார்த்திருக்கிறார். அப்போது அது ஒரு நிரந்தரமான சிகிச்சை என்று அதில் கூறப்பட, ஏன் அதனை நாம் ஒரு திறந்து மூடும் ஒரு வால்வு கொண்டு செய்யக்கூடாது என்று யோசித்திருக்கிறார். இதனை பல மருத்துவர்களிடம் எடுத்துக்கூறிய போது, இதனை சீரியசாக எடுத்துக்கொள்ளாமல், நிராகரித்துள்ளனர். ஆனாலும், மனம் தளராமல் இந்த யோசனைக்காக 1999 ல் ஜெர்மனியில் காப்புரிமைக்கு விண்ணப்பித்து, 2000 ல் காப்புரிமையும் பெற்றிருக்கிறார். தற்போது இந்த ஸ்விட்சுக்காக சர்வதேச காப்புரிமையும் பெற்றுவிட்டார்.

காப்புரிமை பெற்ற பின்னர் நிறைய மருத்துவர்கள், நிபுணர்கள் ஆகியோருடன் நிறைய விவாதித்து,  இது தொடர்பான நிறைய தகவல்களைத்தேடி, 2008 ல் முழுவடிவம் கொடுத்திருக்கிறார். ஆனால் இதனை எப்படி பொருத்துவது என்பதெல்லாம் தெரியாது என்பதால், மீண்டும் ஆராய்ச்சி தொடர்ந்திருக்கிறது. பின்னர் இந்த கருவியின் முதல் வடிவத்தை 2008 ல் தயார் செய்து , அதனை தன்னிடமே சோதனை செய்யவும் ஒரு மருத்துவரை தேடி அலைந்திருக்கிறார் பைமெக். ஆனால் பல மருத்துவர்களும், இதனை ஒப்புகொள்ள மறுக்க, பின்னர் சம்மதிக்க வைத்து, 2009 ஜூலை மாதம் தன் உடலில் முதல்முறை பொருத்த, அது வெற்றி என்றாலும், எதிர்பார்த்ததை விட, அதிகமான பக்கவிளைவுகள், பிரச்னைகள் வந்தது.

எனவே, அதனை முழு வெற்றி எனக்கொண்டாட முடியவில்லை. ஆனால் இதில் மேலும் ஆராய்ச்சி செய்ய அதிகம் பணம் தேவைப்படுமே என்பதால், பெரும் நிறுவனங்களின் உதவி தேவைப்பட்டது. ஆனால் யாரும் முன்வராத நிலையில், சுவிட்சர்லாந்தின் தொழிலதிபரான பீட்டர் ஷூனெக்கல் கைகொடுத்திருக்கிறார். புதிய யோசனைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதில் ஆர்வம் கொண்டவராக அவர் இருந்ததால், பொருளுதவி செய்ததோடு, சர்வதேச காப்புரிமைக்காகவும் உதவி செய்திருக்கிறார். பின்னர் ஆராய்ச்சி வேகமெடுக்க, கருவி மெல்ல மெல்ல வளர்ச்சியடைந்தது. கடந்த ஆண்டு ஜெர்மனின் சிறுநீரக மருத்துவர் மெட் ஹேபில் H.W.பாவர் , இந்த குழுவில் இணைய, ஸ்விட்ச் முழுவடிவம் பெற்றிருக்கிறது. தற்போது, இந்த கருவியை தனது உடலில் மீண்டும் சோதனை செய்து நல்ல பலனை தரவே , தனது வாழ்நாள் கனவு வெற்றி அடைந்துவிட்டது என அறிவித்திருக்கிறார் பைமெக். இந்த 2 கிராம் கருவிக்காக, 20 வருடங்கள் உழைத்திருக்கிறார் மனிதர்.
 
எப்போது சந்தைக்கு வரும்?

தற்போது முதல்கட்ட பரிசோதனை மட்டுமே முடிந்திருக்கிறது. இனி விரைவில் 25 தன்னார்வலர்களிடம், சோதனை செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். அதோடு, இதனை பெரிய அளவில் தயாரிக்கவும், மேம்படுத்தவும் இன்னும் அதிகம் பணம் தேவைப்படும் என்பதால், கிரவுட் ஃபண்டிங் என்னும் முறையில் முதலீட்டாளர்களை தேடி வருகிறார். 2016 க்குள் முழு சோதனைகளையும் முடித்து விட்டு, 2018 ல் சந்தைக்கு கொண்டு வர அவர் திட்டமிட்டுள்ளார்.


என்ன சொல்கிறது மருத்துவ உலகம்?

உலகிற்கு மிகவும் புதிய முறையான இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் இப்போதே கிளம்பியிருக்கிறது. இந்த கருவியை ஒரு முறை பொருத்தி விட்டால், பின்னாளில் மீண்டும் நீக்கிவிட்டு, பழைய நிலையை அடைய முடியாது. இந்த அறுவை சிகிச்சைக்கு பின் சில நாட்களுக்கு மருத்துவ கண்காணிப்பும் தேவை என்பது மைனஸ். “இந்த ஸ்விட்சை நாளங்களில் பொருத்தும் போது, தழும்புகள் ஏற்படும். இவை எப்படியும் விந்து செல்வதை தடுக்காமல் விட்டுவிடும். அதே போன்று, நீண்ட நாட்களுக்கு இந்த ஸ்விட்சை பயன்படுத்தாமல் இருந்துவிட்டால், ஒரே பொசிஷனில், லாக் ஆகிவிடும் வாய்ப்பும் இருக்கிறது. அப்படி ஆகிவிட்டால் நிலைமை தகிடுதத்தாதான் “ எனவும் எச்சரிக்கை செய்கின்றனர் நிபுணர்கள்.
 
எவ்வளவு செலவு ஆகும்?

வெறும் 30 நிமிடங்களில் இந்த அறுவை சிகிச்சையை செய்துவிடலாம். இரண்டு வால்வுகளை பொருத்த, தற்போதைய மதிப்புக்கு 5000 டாலர் (இந்திய மதிப்பில் 3.3 லட்சம் ) ஆகும் என அறிவித்துள்ளனர். அதோடு, இன்சூரன்ஸ் திட்டங்களும் இதற்கு அனுமதிப்பதில்லை என்பதால், அவற்றை பயன்படுத்து முடியாது. “நிச்சயம் இது வெற்றிபெறும். வரும்காலங்களில் இன்னும் இது மேம்படுத்தப்படும் என்பதால், இதன் பயன்பாடும், வரவேற்பும் உலகில் இன்னும் அதிகரிக்கும்” என்கிறார் பைமெக்.

இது சாத்தியமானால், இனிமேல் அதுவும் ஒன் கிளிக் புராசஸ்தான் போல..!

 

-ஞா.சுதாகர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்