வெளியிடப்பட்ட நேரம்: 10:21 (14/01/2016)

கடைசி தொடர்பு:13:02 (14/01/2016)

ஈ-போகி; சுத்தம் சுகம் மட்டுமல்ல, சீஸ் பீட்ஸாவும் தரும்!

ன்று போகி. சென்னைவாசிகள் அலுவலகம் செல்லும் வழியில், வழக்கத்தை விட இன்று சாலைகள் புகைமூட்டமாக இருந்ததை பார்த்திருப்பார்கள்.

நெருக்கமாக வாழத்தொடங்கியதும், எரிக்க கூடாத பொருட்களை இன்று எரித்ததும் இதற்கு காரணமாக இருக்கலாம். முன்பு நம் வீட்டில் இருந்த பெரும்பாலான பொருட்கள் எரிக்க கூடியவையாக இருந்திருக்க கூடும். ஆனால் இன்று?

லாசார திருவிழாக்கள் தேவைதான். ஆனால், வாழ்க்கைமுறையே முற்றிலுமாக மாறிவிட்ட நிலையில், அந்தந்த கொண்டாட்டங்களுக்கான காரணத்தை சற்றேனும் யோசிக்க வேண்டியது அவசியமில்லையா?

போகி தேவையில்லை என சொல்லவில்லை. ஆனால், போகியின் நோக்கம் பழையன கழிவது என்றுதான் சொல்கிறோம். இன்று நம் வீட்டில் அதிகமாக சேர்ந்திருக்கும் குப்பை எது? ஈ-வேஸ்ட் என்றழைக்கப்பட்டும் மின்கழிவுகள்தான். பழைய நோக்கியா 3310 மொபைல் இல்லாத வீடுகள் இருக்கலாம். ஆனால் அதன் சார்ஜர்கள் இன்னமும் பல வீட்டில் அட்டைப்பெட்டியில் பத்திரமாக இருக்கின்றன.

HDMI கேபிள்கள் சாதாரணமாகி விட்ட நிலையில், மஞ்சள்-சிவப்பு-வெள்ளை நிற TV AV கேபிள்கள் பாம்பை போல வீட்டின் பல மூலைகளில் சுற்றி வாழ்கின்றன. எதற்கென்றே தெரியாத அடாப்டர்கள் எத்தனை எத்தனை? புழக்கடையில் அம்மிக்கல் இல்லாத வீட்டிலும், மொட்டை மாடியில் CRT மானிட்டர் ஒன்று இருக்கிறதுதானே? இதை எல்லாம் தூக்கிப்போட மனம் வருவதில்லை. ஏன்?

ஏனென்றால், இன்னமும் நம் வீட்டை சுத்தமாக வைத்திருப்பவர் நம் அம்மாதான். அவருக்கு எது தேவை, எது தேவையில்லை என்பது தெரியாது. திடீரென ஒருநாள்,  “அம்மா..சின்ன USB சார்ஜர் பாத்தியா..?” என்றால் அவர் நோக்கியா சார்ஜரில் இருந்து ரக வாரியாக கொண்டு வந்துதான் தருவார். அதை பயன்படுத்தும் இளைஞர்கள் எப்போதாவது தேவையற்ற பொருட்களை பிரித்திருக்கிறோமா?

அரசு நினைத்தால் மின்கழிவுகளுக்கு என்றே ஒரு வாரம் ஒதுக்கலாம். சாலை விதிகளுக்கு தனியாக கொண்டாடுவது போல,  ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் மின்கழிவுகளை வீட்டுக்கே வந்து பெற்றுக்கொள்கிறோம் என அறிவிக்கலாம். நிச்சயம் 50% மின்கழிவுகள் இதன் மூலம் சேகரிக்கப்படலாம். சென்னையில் மட்டுமே ஆண்டுக்கு 30 மெட்ரிக் டன் அளவுக்கு  மின்கழிவுகள் குவிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசு விழிக்கும் வரை மக்கள் தூங்கினால் விடியவே விடியாது. நாமே முன்வந்து நம் வீட்டில் இருக்கும் மின்கழிவுகளை உரிய மின்சுழற்சி நிறுவனத்திடம் சேர்க்கலாம். போகி போனால் போகிறது. இந்த பொங்கல் விடுமுறையில் முதலில் வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை கண்டறிந்து சேகரித்து வையுங்கள். உபயோகப்படக்கூடியவை என்றால் ஆன்லைனில் விற்றுவிடுங்கள்.

சுத்தம் சுகம் மட்டுமல்ல, சீஸ் பீட்ஸாவும் தரும்!

- கார்க்கி பவா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்