Published:Updated:

மணமக்கள் நெற்றியிலும் 'அம்மா ஸ்டிக்கர்'... அதிமுகவினர் நடத்திய அடடே திருமணம்!

Vikatan Correspondent
மணமக்கள் நெற்றியிலும் 'அம்மா ஸ்டிக்கர்'...  அதிமுகவினர் நடத்திய அடடே திருமணம்!
மணமக்கள் நெற்றியிலும் 'அம்மா ஸ்டிக்கர்'... அதிமுகவினர் நடத்திய அடடே திருமணம்!

முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு,  உடுமலைப் பேட்டையில் அதிமுக சார்பில் நடைபெற்ற மெகா திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 68 திருமண ஜோடிகளின் நெற்றியிலும் ஜெயலலிதாவின் படம் ஒட்டப்பட்ட (பட்டம்)  கட்டப்பட்டிருந்தது திருமணத்திற்கு வந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியபோதிலும், சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. 

கடந்த டிசம்பர் மாதம் சென்னை உள்பட 4 மாவட்டங்கள் மழை வெள்ளத்தில் மிதந்தது. வாழ்வாதாரத்தை இழந்து தவித்த மக்களுக்கு,  பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரணப் பொருட்கள் வந்தன. அப்படி வந்த நிவாரணப் பொருட்களில், அதிமுகவினர்,  முதல்வர் ஜெயலலிதா படம் போட்ட ஸ்டிக்கர் ஒட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


 

மணமக்கள் நெற்றியிலும் 'அம்மா ஸ்டிக்கர்'...  அதிமுகவினர் நடத்திய அடடே திருமணம்!

தற்போது அதிமுக அரசின் ஆட்சிக்காலம் முடிய இருக்கும் தருவாயில், தங்களுடைய ஐந்தாண்டு ஆட்சியை விளம்பரப்படுத்திக் கொள்ளும் வகையில், எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அதில் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை அச்சிடுவது வாடிக்கையாகி விட்டது.

அந்த வகையில், திருப்பூர் மாவட்டம், உடுமலையில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாளையொட்டி,  68 ஜோடிகளுக்கு தனது தலைமையில் இலவச திருமணம் செய்து வைத்தார் சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன். ஆண்டுதோறும் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி இலவச திருமணத்தை நடத்தி, சீர்வரிசைகளை வழங்குவது வழக்கம்தான். ஆனால் இந்த முறை எங்கு பார்த்தாலும் அம்மா ஸ்டிக்கரை ஒட்டி அதகளப்படுத்தி விட்டனர் அதிமுகவினர்.

திருமண விழாவில் மணமக்களுக்கு 68 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. காமாட்சி விளக்கு, குத்துவிளக்கு, பட்டுசேலை, பட்டு ஜாக்கெட், பட்டு வேட்டி, பட்டு துண்டு, பட்டு சட்டை, கட்டில், மெத்தை, தலையணை செட், பீரோ, பெரிய அண்டா, குக்கர் உள்பட வழங்கப்பட்ட 68 பொருட்களிலும் அம்மா ஸ்டிக்கரை ஒட்டியிருந்தனர். சரி பொருட்களில்தானே என மணமக்கள் பக்கம் திரும்பினால், மணமகன், மணமகளின் நெற்றியிலும் ஜெயலலிதாவின் படம் ( அம்மா ஸ்டிக்கர் )  ஒட்டப்பட்ட 'பட்டம்'   கட்டப்பட்டிருந்தது. மேலும். கையில் கொடுக்கப்பட்ட பூங்கொத்திலும் அம்மா  படத்தையொட்டி விசுவாசத்தை காட்டியிருக்கிறார் பொள்ளாச்சி ஜெயராமன்.

மணமக்கள் நெற்றியிலும் 'அம்மா ஸ்டிக்கர்'...  அதிமுகவினர் நடத்திய அடடே திருமணம்!

மணமக்களின் நெற்றியிலும் ஜெயலலிதாவின் படம் ஒட்டப்பட்ட பட்டம் கட்டப்பட்டிருந்ததை பார்த்த மணமக்களின் உறவினர்கள் சற்று வியப்படைந்தபோதிலும், அவர்கள் கட்சிக்காரர்களால் அழைத்து வரப்பட்டவர்கள் என்பதால், அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 

இந்த விழாவில் மணமக்களை வாழ்த்தி முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய செய்தியை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் வாசித்தார். அதில் ‘அ.தி.மு.க. அரசு தமிழக மக்களுக்கு ஆற்றிவரும் அரும்பணிகளை பலருக்கும் எடுத்து சொல்லி, கழகத்தின் வெற்றிக்கு உங்களது பங்களிப்பை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சீரும் சிறப்புமாக இந்த திருமண விழாவை நடத்திட தாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்திற்கும் எனது பாராட்டுகள். தங்களுடைய கழகப்பணிகள் இத்தகைய ஆக்கப்பூர்வமான வழிகளில் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள். மணமக்கள் வாழ்க பல்லாண்டு’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
 

அதே சமயம் இந்த திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, எதெதற்குதான் ' அம்மா ஸ்டிக்கர்' என்பதற்கு ஒரு வரைமுறை கிடையாதா? என்ற ரீதியில் விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.
இயலாதவர்களுக்கு உதவும் சேவையாக நடக்க வேண்டிய திருமண விழாவை தேர்தல் வேலையாக பார்த்தால் இப்படி எல்லாம் நடக்கும். நல்லவேளை தாலியில் ஜெயலலிதாவின் படத்தை ஒட்டாமல் போனார்களே என்றெல்லாம் பொங்கி தீர்க்கிறார்கள் நெட்டிசன்கள்!


-ச.ஜெ.ரவி