Published:Updated:

நிலம் கொடுக்கும் விவசாயிதான் 'கெயில்' எரிவாயு குழாய்க்கு 24 மணி நேர பாதுகாவலன்!

Vikatan Correspondent
நிலம் கொடுக்கும் விவசாயிதான் 'கெயில்'  எரிவாயு குழாய்க்கு 24 மணி நேர பாதுகாவலன்!
நிலம் கொடுக்கும் விவசாயிதான் 'கெயில்' எரிவாயு குழாய்க்கு 24 மணி நேர பாதுகாவலன்!

ரண்டடி விட்டமுள்ள குழாய்,  66 அடி அகலத்திற்கு நிலத்தின் மேற்பரப்பை ஸ்வாகா செய்து விடுகிறது. இதுதான் கெயில் நிறுவனத்தின் எரி வாயு குழாய் பதிப்புத்திட்டம். இந்த 66 அடி பரப்பளவுள்ள நிலத்தில்,  ஒன்றரை அடிக்கு மேல் வேர் விடக் கூடிய எந்த பயிரையும் பயிர் செய்ய முடியாது. இந்த அகலப்பரப்பில் எந்த மரமும் இருக்க கூடாது; இருந்தாலும் வெட்டி விட வேண்டும்.

நிலம் கொடுக்கும் விவசாயிதான் 'கெயில்'  எரிவாயு குழாய்க்கு 24 மணி நேர பாதுகாவலன்!

புதைக்கப்பட்டுள்ள குழாய் சேதமடையாமல் பாதுகாப்பது நிலத்தை கொடுத்தவரின் பொறுப்பு. அதையும் மீறி குழாய்க்கு சேதம் ஏற்பட்டால், அதற்கான பொறுப்பும் அந்த விவசாயியைதான் சாரும்.  கேரளத்தில் இருந்து கர்நாடகத்திற்கு எரிவாயு கொண்டு செல்ல,  தமிழகத்தில் எரிவாயு குழாய் பதிக்கும் கெயில் திட்டத்துக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. இதன் விளைவாக தமிழக விவசாயிகள், காலம் காலமாக அந்த எரிவாயு குழாய்க்கு 24 மணி நேரமும் மறைமுக பாதுகாவலனாக மாற்றப்பட்டுள்ளனர்.

கெயில் நிறுவனத்தால் பதிக்கப்படும் இந்த  எரிவாயு குழாய்கள்,  தமிழ்நாட்டில் மட்டும்தான் விவசாய நிலங்கள் வழியாகச் செல்கிறது. கேரளத்தில் 510 கிலோ மீட்டர் தொலைவுக்கு நெடுஞ்சாலையை ஒட்டியும் ரயில் பாதைகள் அருகேயும்தான்  குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. விவசாய நிலங்களில் அங்கு எரிவாயு குழாய் பதிக்கப்படவில்லை. கேரளத்துக்கு ஒரு நீதி,  தமிழகத்துக்கு ஒரு நீதி  என்ற கணக்கில்தான் மத்திய அரசின் கெயில் நிறுவனத்தின் செயல்பாடு இந்த விஷயத்தில் இருக்கிறது.

தமிழகத்தின் நிலையை எடுத்துச் சொல்லி, நீதி பெற்றுத் தர வேண்டிய மாநில அரசு மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் அப்போது ஆட்சியிலிருந்து அனுமதி கொடுத்த திமுகவும்,   இப்போது ஆட்சியில் உள்ள அதிமுகவும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குறை கூறிக் கொண்டு இருக்கிறார்கள். கெயிலுக்கு ஆதரவான தீர்ப்புக்கு பின்னரும்,  விவசாயிகள்தான் நம்பிக்கை இழக்காமல் களத்தில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்களே தவிர, எந்த அரசியல் கட்சியும் விவசாயிகளுக்கு ஆதரவாக களம் இறங்கவில்லை

நிலம் கொடுக்கும் விவசாயிதான் 'கெயில்'  எரிவாயு குழாய்க்கு 24 மணி நேர பாதுகாவலன்!

தமிழகத்தை பொறுத்தவரை கொங்கு மண்டலத்தில் அதிமுகதான் பலம் வாய்ந்த கட்சி. கொங்கு மண்டலத்தை சேர்ந்த 4 மாவட்டங்கள் வழியாக இந்த எரிவாயு குழாய் பதிக்கப்படுகிறது. செழிப்பான இந்த மாவட்டங்களில் பல கிராமங்களில் விவசாயிகள் நிலத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படவுள்ளார்கள். ஆனால் கொங்கு மண்டலத்தில் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் எந்தவிதமான போராட்டங்களோ,  ஆர்ப்பாட்டத்திலோ ஈடுபட்டதாகத் தெரியவில்லை.

இந்த திட்டத்துக்கு தமிழகத்தில் அனுமதி கொடுத்தது அப்போதைய திமுக அரசு. முன்னாள் முதல்வர் கருணாநிதி, விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றும் இந்த திட்டத்தை மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கிறார். திட்டத்துக்கு அனுமதி கொடுத்த கட்சியே இந்த விஷயத்தில்  கிளர்ந்தெழ முடியாது. ஏனென்றால், உங்க கட்சிதான் அனுமதி கொடுத்தது என இப்போதைய ஆளும் கட்சி திருப்பியடித்தால் தாங்க முடியாது.  அதனால் இந்த விஷயத்தில் திமுகவினரும் அடக்கியே வாசிக்கின்றனர்.

திட்டத்தை விரைவுபடுத்த கெயில் முடிவு

இந்நிலையில் சுமார் ரூ. 3,300 கோடி திட்டமதிப்பீட்டில் போடப்பட்ட இந்த திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு மற்றும் போராட்டம் காரணமாக,   ரூ.  300 கோடி வரை கெயில் நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வழக்குகள் போடப்பட்டதால், 2 வருடங்கள் தாமதமாக இந்த திட்டம் கிடப்பில் கிடந்தது.  இதனால் இந்த  திட்டத்தை நிறைவேற்ற மேலும் ஆயிரம் கோடி கூடுதலாக செலவாகும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து விட்டதால், கெயில் நிறுவனம் தமிழக விவசாய நிலங்களில் குழாய்களை பதிக்கும் திட்டத்தை முடுக்கி விட முடிவு செய்துள்ளது.