Published:Updated:

விசாரணை : இவர்களுக்காகவும் பேசுங்கள்!

Vikatan Correspondent
விசாரணை : இவர்களுக்காகவும் பேசுங்கள்!
விசாரணை : இவர்களுக்காகவும் பேசுங்கள்!
விசாரணை : இவர்களுக்காகவும் பேசுங்கள்!

ந்த கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும் உங்களில் பெரும்பாலானோர் நிச்சயம் விசாரணை படத்தை பார்த்து இருப்பீர்கள். இன்னும் பார்க்கவில்லை என்கிறீர்களா.. பார்த்து விடுங்கள்.

இந்த அதிகார அமைப்பு முறை தன்னை தற்காத்து கொள்ள எந்த எல்லைக்கும் செல்லும் என நிஜ சம்பவங்களை அடுக்கி,  நம்முடன் பேசும் அரசியல் படம். ஒவ்வொரு என்கவுண்டருக்கு பின்னும் உள்ள உருமாறாத உண்மையை உரையாடிய படம். போகிற போக்கில் இடஒதுக்கீடு குறித்த அதிகாரிகளின் மனநிலையை நமக்கு வெள்ளி திரையில் காட்டிய படம் என படம் குறித்து நிறைய பேசலாம். ஆனால், இது படம் குறித்த கட்டுரை அல்ல.

சமூக கட்டமைப்பின் மேல் அடுக்கில் இருக்கும் என் நண்பர்கள் சிலர்,  எங்காவது என்கவுன்டர் நடந்தால் கொண்டாடுவார்கள், அரசமைப்பு யாரையாவது தூக்கிலிடும்போது அதை ஆதரித்து முகநூலில் ஸ்டேட்டஸ் இடுவார்கள்.

“ச்சும்மா... இதையெல்லாம் எதிர்க்காதீங்க சார்... பின்னே எப்படி சார் சமூகத்துல குற்றம் குறையும்...” என தட்டை பார்வையில் விவாதத்தை தொடங்குவார்கள்.

அன்று அந்த விவாதமும் அப்படிதான் துவங்கியது, “காடு அழியுது... சூழல் கெடுதுன்னு பக்கம் பக்கமா எழுதுறீங்க... ஆனா அதே நேரம் மரத்தை வெட்டி, காட்டை கொள்ளை அடிச்ச இருபது பேர சுட்டு கொன்னா... அதுக்கு எதிரா குதிக்கிறீங்க... என்ன மாதிரியான டிசைன் சார் நீங்க...? வேற என்ன அரசு செய்யணும்னு எதிர்பார்க்குறீங்க...?” - சேஷாசலம் காட்டில் இருபது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதனை ஆதரித்த நண்பர்களின் கருத்து அது.

அவர்களின் பார்வையில்,  குற்றம் செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரணம் இருக்க வேண்டும். அப்போதுதான் குற்றம் குறையும். ஆனால் நிஜம்,  நாம் விரும்புவது போல் ஒரு நாளும் இருப்பதில்லை. மரண தண்டனை உள்ள நாட்டில் குற்றம் குறைந்து இருக்கிறது என்பதற்கான எந்த தரவுகளும் இல்லை.

சரி கட்டுரைக்கு வருவோம். இதுவும் ஆந்திராவிற்கு சென்று மீண்டும் வீட்டிற்கு திரும்பாத ‘பாண்டி’களின் கதை. (பாண்டி - விசாரணை படத்தின் முதன்மை கதாபாத்திரத்தின் பெயர்). சித்தேரி - தருமபுரி மாவட்டத்தின் ஒரு எல்லையில் இருக்கும் மரங்கள் நிறைந்த அழகிய மலைப்பகுதி. விவசாயம் ஒழுங்காக நடந்திருந்து, அதற்கான உரிய விலையும் கிடைத்து இருந்தால், ஒருவேளை அண்ணாமலைக்கு ஆந்திராவுக்கு வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டு இருக்காது.

விசாரணை : இவர்களுக்காகவும் பேசுங்கள்!

ஹோ.. இன்னும் உங்களுக்கு அண்ணாமலையப் பற்றி சொல்லவில்லை அல்லவா. அண்ணாமலை, சித்தேரி மலை அடிவாரத்தில் உள்ள வள்ளிமதுரை கிராமத்தை சேர்ந்தவர். அவர் மரம் வெட்டும் கூலி. ஆம். இதில் மறைத்து பேச எதுவும் இல்லை. அவர்களின் வறுமையை பயன்படுத்தி கொண்ட ஏஜெண்ட்டுகள் அவருக்கு பணத்தாசை காட்டி அழைத்து சென்றார்கள். சென்று மூன்று வருடமாக ஆகிவிட்டது. இன்னும் அவர் திரும்பவில்லை. அவர் திரும்புவார் என்ற எந்த நம்பிக்கையும் அவர்கள் குடும்பத்தினரிடம் இல்லை.

அண்ணாமலையின் மனைவி கமலாவை தொடர்பு கொண்ட போது, “2013 ஜனவரி மாசம் போனவரு... போகும் போது ஆந்திராவுல கூலி வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு போனாரு. ஆனா என்ன வேலைன்னு சொல்லலை... கொஞ்சம் நாளுக்கு பிறகுதான் தெரிஞ்சுச்சு, மரம் வெட்ட போயிருக்காருன்னு... ஆனா இன்னும் வரலை சார்... ஆந்திராவுல உள்ள எல்லா ஜெயிலையும் பார்த்தாச்சு... எங்கேயும் இல்லை... செத்து இருப்பாரோன்னு பயமா இருக்கு...” என்று வெடித்து அழுகிறார்.

விசாரணை : இவர்களுக்காகவும் பேசுங்கள்!

இது அண்ணாமலையின் நிலை மட்டும் அல்ல. 2012-ல் ஆந்திராவுக்கு சென்ற வெங்கட்ராமனும் இன்னும் ஊர் திரும்பவில்லை. மூன்று குழந்தைகளுடன் இருக்கும் அவர் மனைவி அழகி, “ இங்கிருந்து ஐம்பது பேருக்கு மேல போனாங்க சார். என் புருஷன் வெங்கட்ராமனும் அதுல ஒருத்தரு... ஆனா எல்லாரும் வந்துட்டாங்க, என் புருஷன் மட்டும் இன்னும் வரல... என் புருஷனை அழைச்சிட்டு போன மூர்த்திகிட்ட கேட்டா... அவரு விபத்துல இறந்துட்டாருன்னு சொல்றாரு... நான் இந்த மூணு பிள்ளைகளை எப்படி வளர்க்க போறேன்னு தெரியல சார்...”

இவர்கள் அனைவரும் பழங்குடிகள். கடுமையான உழைப்பாளிகள். மரங்கள் பற்றிய இவர்களது மரபறிவே இவர்களை இந்த வேலையில் அமர்த்த காரணம்.

“நாங்கள் அனைவரும் தெரியாமல் செல்கிறோம் என்று ஏமாற்ற விரும்பவில்லை. மரம் வெட்டப் போகிறோம் என தெரிந்தே செல்கிறோம். ஒரு முறை சென்றால் பத்தாயிரம் கிடைக்கும். அதையும் சில நேரம் எங்களை அழைத்து செல்லும் இடைத்தரகர்கள் ஏமாற்றிவிடுவார்கள். இதில் இருக்கும் ஆபத்தும் நன்கு தெரியும். ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை” என்கிறார் சித்தேரி மலை கலசபாடியை சேர்ந்த முன்னாள் மரம் வெட்டும் கூலி.

‘இதில் இருக்கும் ஆபத்தும் நன்கு தெரியும்’, இந்த வாக்கியத்தில் பொதிந்துள்ள அர்த்தம் உங்களுக்கு புரிகிறதா...? அரசு எங்களை கைவிட்டுவிட்டது, எங்கள் வாழ்வாதாரத்திற்கான எந்த வாய்ப்பையும் இந்த அரசு தரவில்லை ( இந்த அரசு என்றால் அதிமுக மட்டும் அல்ல இதுநாள் வரை ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளும்தான்) என்பதுதான் அது. சரி... வேறு ஏதாவது கூலி வேலைக்கு செல்லலாமே... சென்று இருக்கிறார்கள். கொத்தடிமைகளாக. ஆந்திரா, கேரளாவில் இருக்கும் செங்கல் சூளைகளில் இருப்பவர்கள் இவர்கள்தான். மேலும், பல இடங்களில் பழங்குடிகள் என்பதற்காக இவர்களுக்கு வேலையும் மறுக்கப்படுகிறது.

மரம் வெட்டியவர்களை மட்டும் ஆந்திர அரசு கைது செய்யவில்லை. எதற்காக கைது செய்து இருக்கிறார்கள் என்று தெரியாமலையே பல நூறு பேர் ஆந்திர சிறையில் இருக்கிறார்கள். பி.காம் பட்டதாரியான  பிரபு என்பவரை சென்னையில் வைத்து ஆந்திர போலீஸ் கைது செய்திருக்கிறது. அது போல், உடல் நிலை சரியில்லாமல் வள்ளிமதுரையில் வீட்டில் படுத்திருந்த சிவராஜ்,  2014 பிப்ரவரி நள்ளிரவு வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கிறார்.

விசாரணை : இவர்களுக்காகவும் பேசுங்கள்!

எந்த விசாரணையும் இல்லாமல் ஆந்திரா சிறைகளில்,  1000த்திற்கும் மேற்பட்ட பழங்குடிகள் சட்ட உதவிகள் எதுவுமின்றி இருக்கிறார்கள், என்கிறார் அனைத்திந்திய மக்கள் மன்றத்திற்கான மாநில ஒருங்கிணைப்பாளர் அ.சந்திரமோகன்.

“இவர்கள் குற்றமற்றவர்கள் என நான் கூறவில்லை... இவர்களில் பலர் மரம் வெட்டும் செயலில் ஈடுபட்டுருக்கலாம். ஆனால், அதற்கு உரிய விசாரணை நடத்தாமல், ஆந்திர அரசு தமிழர்கள் என்றால் சமூக விரோதிகள் என்ற பொது கருத்தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டுவிட்டது” என்கிறார்.

மேலும், “2013- ம் ஆண்டு திருப்பதி வனப்பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு ஆந்திர வன அதிகாரிகள் இறந்தார்கள். அதற்கு பின்னால் சமூக விரோதிகளை ஒடுக்குகிறோம் என்ற பெயரில், வரைமுறை இல்லமால் தமிழர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இப்போது ஆந்திர பொது புத்தி,  தமிழர்களை விடுவிப்பதற்கு எதிராக இருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது” என்கிறார் அழுத்தமாக.

விசாரணை : இவர்களுக்காகவும் பேசுங்கள்!

சிறையில் இருக்கும் அனைவரும் புனிதர்கள் என நான் இந்த கட்டுரையில் நிறுவ முயலவில்லை. குற்றம் செய்தவர்களும் இருக்கலாம். நிச்சயம் அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை. ஆனால், எந்த முறையான விசாரணையும் இல்லாமல், பல ஆண்டுகளாக ஒரு பெரும் பழங்குடி கூட்டம் சிறையில் வாடுவது என்பது நமது சட்ட நடைமுறைகளின்படி சரிதானா?

விசாரணை படம் பார்த்துவிட்டு,  நீங்கள் முகநூலில் ஸ்டேட்டஸ் இட்டவராக இருந்தால், சிறையில் வாடும் அந்த ஆயிரக்கணக்கான பழங்குடிகளுக்காகவும் நீங்கள் பேசியே ஆக வேண்டும். அதுவே நாம் அந்த உன்னத படைப்பிற்கு செய்யும் நியாயமாக இருக்கும்!

- மு. நியாஸ் அகமது