Published:Updated:

சியாச்சினும் தொடரும் சோகமும்!

Vikatan Correspondent
சியாச்சினும் தொடரும் சோகமும்!
சியாச்சினும் தொடரும் சோகமும்!

டல்மட்டத்திலிருந்து 19,600 அடி உயரத்தில் அமைந்துள்ள லடாக்கின் வடக்கு பனி முகட்டில்  புதன்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவால்,  மெட்ராஸ் ரெஜிமென்ட் படைப்பிரிவைச் சேர்ந்த 10 ராணுவ வீரர்கள் இறந்தனர். இவ்வாறு நடப்பது இது முதல் முறையும் இல்லை, கடைசி முறையாகவும் இருக்கப் போவதில்லை.


சியாச்சின் அமைப்பு

காரகொரம் மலைத்தொடரில் அமைந்துள்ள பனிப்பாறைகளில் பெரிய பனிப்பாறை சியாச்சின் பனிப்பாறை தான். NJ9842 என்பது இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் Line Of Control. இந்த NJ9842 க்கு வடக்கிழக்கில் அமைந்துள்ளதே சியாச்சின் பனிப்பாறை. இது 70 கிலோ மீட்டர் நீளமானது. சீனாவில் தொடங்கும் சல்தொரோ ரிட்ஜ் (Saltoro Ridge)க்கு மேற்கிலும்,  காரகொரம் மலைத் தொடருக்கு கிழக்கிலும் அமைந்துள்ளது சியாச்சின் பனிப்பாறை. சல்தொரோ ரிட்ஜில் அமைந்துள்ள முக்கியமான இடங்கள்(Pass) Sia la,Bilafond la,Gyong la. வட மற்றும் தென் துருவங்களை தவிர்த்து ஏனைய பனிபாறைகளில் பெரியது சியாச்சின் பனிப்பாறையே. இதனை உலகின் மூன்றாவது பனிப்பாறை எனவும் அழைப்பர். சியாச்சின் என்பதன் அர்த்தம் ”காட்டு ரோஜாக்களின் இருப்பிடம்”. இந்த இடம் மனிதன் வசிக்க தகுந்ததல்ல.

சியாச்சினும் தொடரும் சோகமும்!



தொடரும் சண்டை

இந்த சியாச்சின் பனிப்பாறையை கைப்பற்ற இந்தியாவும் பாகிஸ்தானும் போராடி வருகிறது.1949 ல் அமைத்த கராச்சி உடன்படிக்கையும்,  1972ல் ஏற்படுத்தப்பட்ட சிம்லா உடன்படிக்கையும் பொருட்டு இந்த சியாச்சின் பனிபாறை யாருக்கு சொந்தம் என கூறப்படவில்லை. வானளவு அமைந்துள்ள இந்த இடத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டையிடாது என ஐ.நா சபை எண்ணியது. ஆனால் ஐ.நா வின் கணிப்பை பொய்யாக்கியது  இந்தியா ராணுவம்.

பாகிஸ்தானின் அத்துமீறல்

1963-ல் பாகிஸ்தான், சீனாவிற்கு ஷாக்ச்கம் பள்ளத்தாக்கின் (Shaksgam Valley) உரிமையை வாரி வழங்கியது.1959-ல் எரிக் ஷிப்டன் என்பவர் தலைமையில் பிலாஃபாண்ட் லா (Bilafond La) வழியாக சியாச்சின் பனிப்பாறையை அடைய,  பிரிட்டிஷ் காரர்களுக்கு பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியது.1962 ல் ஓர் பாகிஸ்தான் ராணுவ வீரரும்,  இரு ஜப்பான் நாட்டாரும் சேர்ந்து சல்தாரோ காங்ரியை அடைந்தனர். இவ்வாறு தொடர்ந்து அனுமதி வழங்கியும்,  வரைபடங்களில் சியாச்சின் பனிப்பாறையை தன் நாட்டுடன் இணைந்து காட்டி, பாகிஸ்தான் உரிமைக் கொண்டாடியது. இதனை அறிந்த இந்திய அரசானது,1977 ல் ரகசியமாக இந்திய ராணுவ துணை தளபதி நரேந்திர குமார் தலைமையில் 70 பேர் கொண்ட மலையேறும் ராணுவக் குழுவை அனுப்பி வைத்தது. 24298 அடி உயரத்தில் அமைந்துள்ள டெரம் கங்கிரி 2 (Teram Kangri 2) வை இக்குழுச் சென்றடைந்தது. இது 1978ல் “The Illustated Weekly Of India” என்னும் இதழில் செய்தியாக வந்தது.

அப்பொழுதுதான் சியாச்சின் பனிப்பாறையில் நடக்கும் Oropolitics வெளிச்சத்திற்கு வந்தது. அரசியல் காரணங்களுக்காக மலையேறுதல் Oropolitics எனப்படும்.1981ல் நரேந்திர குமார் தலைமையிலான குழு மலையடிவாரத்திற்கு வந்தடைந்தது. மலைத்தொடரில் விட்டுவந்த இந்திய நிறுவனமான Gold Flake ரக சிகரெட் பாக்கெட்டுகளை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கண்டறிந்தனர். அன்று முதல் பனிப்பாறையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பனிப்போர் ஆரம்பமானது.

சியாச்சினும் தொடரும் சோகமும்!



ஆப்ரேசன் மெக்டுட்

இத்தியாவின் ரகசிய நடவடிக்கையை மோப்பம் பிடித்த பாகிஸ்தான் ராணுவம், சியாச்சின் பனிப்பாறையை கைப்பற்ற தீர்மானித்தது. அதற்காக தனது ராணுவ வீரர்களுக்கு தேவையான குளிரை சமாளிக்கும் உடைகளை லண்டனில் உள்ள ஓர் நிறுவனத்திடம் பெற முயன்றது. அந்த நிறுவனமே இந்திய ராணுவத்திற்கு பொருட்களை வழங்கும் நிறுவனம். பாகிஸ்தானின் இந்த செயலை அறிந்த இந்தியா, தனது வீரர்களுக்காக 300 பேருக்கான உடைமைகளை பெற்றது. உலகின் அதி உயரத்தில் அமைந்துள்ள இந்த சியாச்சின் பனிப்பாறையை அடையும் வீரச் செயலுக்கு 'ஆப்ரேசன் மெக்தூத்' (Operation Meghdoot) என பெயரிடப்பட்டது.கி.பி. நான்காம் நூற்றாண்டில், காளிதாஸர் இயற்றிய ஓர் சமஸ்கிருத கதையில் வரும் கடவுளின் வான தூதுவனே மெக்தூத். இந்த கடும் போருக்கு தயார் ஆகும் முயற்சியாக,  அண்டார்டிக்கா பனிப் பிரதேசத்தில் இந்திய ராணுவ வீரர்கள்  வாழ பயிற்சி அளிக்கப்பட்டது.

ஏப்ரல் மாதம் 17-ம் நாள் பாகிஸ்தான் ராணுவம்,  சியாச்சின் பனிப்பாறையை அடையும் என ரகசிய செய்தி அறிந்த இந்திய ராணுவமானது சியாச்சின் பனிப்பாறையை ஏப்ரல் 13ம் நாள் கைப்பற்ற தீர்மானித்தது. அதன் படி,   கேப்டன் சஞ்சய் குல்கானி தலைமையிலான படை Bilafond La வை கைப்பற்றியது. மீதி இருந்த இடங்களை கேப்டன் யாதவ் தலைமையிலான படை கைப்பற்றியது. பாகிஸ்தான் படை அவ்விடத்தை அடைந்தபோது ஏமாற்றமே மிஞ்சியது. சல்தொரோ ரிட்ஜில், மேற்கு பகுதியை மட்டுமே பாகிஸ்தானால் கைப்பற்ற முடிந்தது. தனக்குரியது என பாகிஸ்தானால் கூறப்பட்ட 2600 கிலோ மீட்டர் இடம் இந்தியா வசமானது.

சீதோஷ்ண நிலை
 

** குளிர் காலங்களில் காலநிலையானது -50 டிகிரி செல்சியஸ் வரை செல்லும்.


** சராசரியாக 1000 cm  வரை பனிப் பொழிவு இருக்கும்


** இந்த நிலையில் வாழும்போது, பேச்சு தடுமாற்றம் நிகழும்.


** இங்கு முகாமிட்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு ஹெலிகாப்டர் (ALH DHRUV) மூலம்தான் சாப்பாடு மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதற்காகவே தரையிலிருந்து 21, 000 அடி உயரத்தில் சோனம் என்னும் ஹெலிபேட் கட்டப்பட்டுள்ளது. இதுவே உலகின் மிக உயரிய ஹெலிபேட்.


** இந்த பனிப்பாறையில் இருந்து உருகும் பனியே லடாக்கில் உருவாகும் நுப்ரா நதியின் நீராதாரம். இதுவரை மேற்கொண்டுள்ள ஆய்வின்படி சியாச்சின் பனிப்பாறை பாதி அளவு உருகியுள்ளது.


** சியாச்சின் பனிப்பாறைக்காக நாள் ஒன்றுக்கு இந்திய அரசு 6.8 கோடி ரூபாய் செலவு செய்கிறது.


** இங்கு உயிரை பணயம் வைத்து நம்மை காக்கும் ராணுவ வீரர்களுக்கு 14000 ரூபாய்  மாத அலவன்ஸாகவும்,  அதிகாரிகளுக்கு 21000 ரூபாய் அலவன்ஸாகவும் வழங்கப்படுகிறது.


** இதுவரை 879 இந்திய இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். இவர்களில் 90 சதவிதம் பேர் பனிச்சரிவாலும் ஆக்சிஜன் இல்லாமலும் உயிர் இழந்துள்ளனர் என்பதே சோகம்.

சியாச்சினும் தொடரும் சோகமும்!



தியாக ஒளிகள்

எதிரிகளிடமிருந்து நம்மை காக்க சியாச்சினில் முகாமிட்டிருந்த 10 ராணுவ வீரர்கள் புதன்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் உயிர் இழந்தனர்.


அவர்கள்

** தமிழகத்தின் வேலூரை சேர்ந்த ஏழுமலை
** தமிழகத்தின் தேனியை சேர்ந்த குமார்
** தமிழகத்தின் மதுரையை சேர்ந்த கணேசன்
** தமிழகத்தின் கிருஷ்ணகிரியை சேர்ந்த ராமமூர்த்தி
** கர்நாடகாவின் ஹாசனை சேர்ந்த நாகேஷா
** கர்நாடகாவின் தர்வாடை சேர்ந்த கொப்பாத்
** கர்நாடகாவின் மைசூரை சேர்ந்த மகேஷா
** கேரளாவின் கொல்லத்தை சேர்ந்த சுதீப்
** ஆந்திரவின் கூர்னூலை சேர்ந்த முஷ்தக் அஹ்மத்
**  மகாராஷ்ட்ராவின் சத்தாராவை சேர்ந்த சூர்யவம்சி

இதில் தமிழகத்தின் கிருஷ்ணகிரியை சேர்ந்த ராமமூர்த்தி,  கடந்த 7 வருடங்களாக ராணுவத்தில் பணி புரிந்து வந்துள்ளார். இவருக்கும் சுனிதா என்பவருக்கும் திருமணமாகி 3 வருடங்கள்தான் ஆகிறது.
         
தமிழகத்தின் மதுரையை சேர்ந்த கணேசன்,  உசிலம்பட்டியின் பக்கத்திலுள்ள சொக்கத்தேவன்பட்டியைச் சேர்ந்தவர். ஓர் தினக் கூலியின் மகனான கணேசன், 12 -ம் வகுப்பை முடித்தவுடன் ராணுவத்தில் சேர்ந்தார்.

தமிழகத்தின் தேனியை சேர்ந்த குமாரின் மனைவி கவிதா. இவர்களுக்கு ஓர் பெண் குழந்தை உண்டு.

ச.ஸ்ரீராம் இரங்கநாத்
(மாணவ பத்திரிகையாளர்)