Published:Updated:

பொறுப்பேற்க வந்த பல்கலைக்கழகத்தின் பெயரை சொல்லவே திணறிய துணைவேந்தர்!

பொறுப்பேற்க வந்த பல்கலைக்கழகத்தின் பெயரை சொல்லவே திணறிய  துணைவேந்தர்!
பொறுப்பேற்க வந்த பல்கலைக்கழகத்தின் பெயரை சொல்லவே திணறிய துணைவேந்தர்!

பொறுப்பேற்க வந்த பல்கலைக்கழகத்தின் பெயரை சொல்லவே திணறிய  துணைவேந்தர்!

பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவி,  கடந்த செப்டம்பர் மாதம் 17-ம் தேதி முதல் கடந்த 6 மாதங்களாக காலியாக இருந்து வருகிறது.

இதனால் பல்கலைக்கழகத்தின் நிர்வாகப்பணிகள் முடங்கிப் போய் கிடந்தன. பல்கலைக்கழகங்களில் கொள்கை அடிப்படையிலான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. புதிய ஆய்வுகள் ஏதும் தொடங்கப்படவில்லை. கிட்டத்தட்ட பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் முடங்கி கிடந்தது.

புதிய துணை வேந்தரை நியமிக்க,  தேர்வுக்குழு நவம்பரிலேயே அமைக்கப்பட்ட போது, துணை வேந்தரை நியமிப்பதில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வந்தது. பல்கலைக்கழக துணை வேந்தரை நியமிப்பதில பல கோடி ரூபாய் பேரம் நடப்பதாக அரசியல் கட்சித் தலைவர்கள் வெளிப்படையாகவே புகார் அளிக்கத் துவங்கினர்.

'துணை வேந்தர் பதவிக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 6 கோடி ரூபாய் முதல் 40 கோடி ரூபாய் வரை விலை பேசப்படுகிறது' என பா.ம.க. ராமதாஸ் பகிரங்கமாகவே புகார் தெரிவித்திருந்தார்.

இதை உறுதிப்படுத்தும் வகையில், புதிய துணை வேந்தரை நியமிப்பதில் தாமதம் தொடர்ந்து கொண்டே வந்தது. ஏற்கனவே பல்வேறு முறைகேடு புகார்களில் சிக்கிய பாரதியார் பல்கலைக்கழகத்துக்கான புதிய துணை வேந்தர் நியமனம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், மறுபுறம் நியமனத்தில் தாமதம் நீடிக்க திரைமறைவில் பேரம் பேசப்படுவதாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு பின்னர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கணபதி நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்ட ஜேம்ஸ் பிச்சை மீது பல்வேறு முறைகேடு புகார்கள் குவிந்திருந்து. எனவே, புதிய துணை வேந்தராவது இது போன்ற புகார்களுக்குள்ளாகக்கூடாது என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஆனால், அப்படியான நம்பிக்கை கல்வியாளர்களிடையே இல்லாத சூழல்தான் நிலவுகிறது. துணை வேந்தர் நியமனம் என்பது பெரும் வணிக விளையாட்டாக மாறிவிட்டது. தொழிலில் முதலீடு செய்பவர்கள், லாபத்தை ஈட்ட முயல்வது போலத்தான் இதுவும். எனவே, இதில் ஊழலில்லாத நிர்வாகத்தை துணை வேந்தர்கள் வழங்கிட முடியும் என்ற நம்பிக்கை துளியும் இல்லை என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். துணை வேந்தராக தகுதியும் திறமையும் கொண்டவருக்கு இந்த வாய்ப்பு இப்போது வழங்கப்படுவதில்லை என்றும், பணம் மட்டுமே பிரதானமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

நேற்று முன் தினமே பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டார் கணபதி. ஆனால், பொறுப்பேற்கவில்லை. ஏன் என கேட்டபோது, 'இன்னும் அம்மாவின் (ஜெயலலிதா) ஆணை வராததால் பொறுப்பேற்கவில்லை' என பதில் வந்தது.

இன்று ஆணை வந்ததையடுத்து, பாரதியார் பல்கலைக்கழகத் துணை வேந்தராக பொறுப்பேற்ற கணபதி, செய்தியாளர்களிடம் பேசியபோது "பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளேன்" எனச்சொல்ல,' சார் இது பாரதிதாசன் பல்கலைக்கழகம் இல்லை. பாரதியார் பல்கலைக்கழகம்' என செய்தியாளர்கள் திருத்தினர்.

'ஓ...' என சிரித்துக்கொண்டே, "இந்த பல்கலைக்கழகத்தை தரமான பல்கலைக்கழகமாக உருவாக்கவும், ஆராய்ச்சி படிப்புகளை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுப்பேன். கடந்த கால தவறுகளை உணர்ந்து வருங்காலங்களில் அதுபோன்று நடக்காமல் இருக்கவும், ஏற்கனவே நடந்த தவறுகளை நிர்வாகக்குழு சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என பேட்டியை முடித்த போது மீண்டும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் எனச்சொன்னார் துணை வேந்தர் கணபதி.

அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் பல்கலைக்கழகங்களின் மிக முக்கியமான பொறுப்பான துணை வேந்தர் பதவி தேர்வுக்கு நேர்காணல் இல்லை. கூடுதல் தகுதிகள் தேவை இல்லை. அப்படியென்றால் என்ன தேவை என்கிறீர்களா? அதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?

ச.ஜெ.ரவி

அடுத்த கட்டுரைக்கு