Published:Updated:

`நம்பிக்கையின் பாடல்’ நடனமாடிய 60 டாக்டர்கள்... வைரலாகும் வீடியோ!

நம்பிக்கை பாடல்... நடனமாடிய மருத்துவர்கள்
நம்பிக்கை பாடல்... நடனமாடிய மருத்துவர்கள்

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் பணியில் தீவிரமாக இருக்கும் மருத்துவர்கள் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். 60 டாக்டர்கள் நடனமாடியுள்ள அந்த வீடியோ வைரலாகியிருக்கிறது. 

நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்று ஏற்படுத்தியுள்ள அச்சம் இன்னும் குறையவில்லை. நோய்த் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் வலியுறுத்தப்படுகிறார்கள்.

நடனமாடும் டாக்டர்கள்
நடனமாடும் டாக்டர்கள்

இந்தச் சிக்கலான சமயத்தில் மருத்துவர்கள் தங்களின் உயிரைப் பணயம் வைத்து நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வருகிறார்கள். கொரோனாவை வெல்லும் பணியில் முதல் வரிசையில் நின்று மருத்துவர்களும் செவிலியர்களும் பணியாற்றி வருகிறார்கள்.

`மீண்டும் அதே வார்டில் பணியாற்ற விரும்புகிறேன்!’-கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நர்ஸ் உருக்கம்

நாடு எதிர்கொண்டிருக்கும் மோசமான சூழலில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் மருத்துவர்கள் ஊரடங்கு காலத்தில் மக்களை மகிழ்வித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

மருத்துவர்கள்
மருத்துவர்கள்

சென்னை, கன்னியாகுமரி, டெல்லி, மும்பை, புனே, நாக்பூர், பெங்களூர், கொச்சி, சண்டிகர், கொல்கட்டா உள்ளிட்ட பல்வேறு நகரங்களைச் சேர்ந்த 60 மருத்துவர்கள் அந்த வீடியோவில் நடனமாடி, பார்ப்பவர்களின் மனதில் புன்னகையை ஏற்படுத்துகிறார்கள்.

பாஃரெல் வில்லியம்ஸின் ‘ஹேப்பி’ என்ற பாடலுக்கு நடனமாடும் 60 மருத்துவர்களும் இந்த வீடியோவுக்கு ‘நம்பிக்கையின் பாடல்’ (The Song of Hope) எனப் பெயரிட்டுள்ளனர். 4.32 நிமிடங்களில் ஓடக்கூடிய இந்த வீடியோவை மருத்துவர்களே தயாரித்து வெளியிட்டுள்ளனர். 

நடனம்
நடனம்

திறமையான நடனக் கலைஞர்களுக்கு இணையாக மருத்துவர்கள் நடனமாடுவது பிரமிக்க வைப்பதாக இருக்கிறது. தற்போதைய சிக்கலான காலகட்டத்தில் மனநலத்தைப் பேண வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ’ஹேப்பி’ பாடலைத் தேர்ந்தெடுத்து நடனமாடியுள்ளனர்.

இந்த வீடியோவை வெளியிட்டுள்ள மருத்துவர்கள், “உங்கள் உயிரைக் காப்பாற்ற நாங்கள் நாள் முழுவதும் இரவு பகல் பாராது பணியாற்றுகிறோம். இந்தச் சூழலில், உங்களின் மனநலனைப் பேண வேண்டிய அவசியத்தை நினைவூட்டவே இந்த வீடியோ வெளியிட்டோம்” எனத் தெரிவித்துள்ளனர். 

நம்பிக்கை பாடலுக்கு நடனம்
நம்பிக்கை பாடலுக்கு நடனம்

மருத்துவர்களின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘காலைச் சூரியனின் பிரகாசமான ஒளியை மனதுக்குள் கொடுக்கும் வகையில் மருத்துவர்கள் நடனமாடியிருக்கிறார்கள்” என்பது உட்பட பல்வேறு கருத்துகளையும் தெரிவித்து மருத்துவர்களுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

அடுத்த கட்டுரைக்கு