வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (04/03/2016)

கடைசி தொடர்பு:19:48 (04/03/2016)

குதூகல ரகசியம் குழி நண்டில் இருக்கு!!!

ச்சைப் பசேல் என்று நீண்டு வளர்ந்து நிற்கும் நெற்பயிர்களும், கீரை, கொடி, செடி வகை பச்சையங்களும் மட்டுமே விவசாயம் என்றில்லை. விவசாயிகளின் உற்ற தோழனாகவும், பறவைகளின் உணவாகவும், பண்ணைகளில் வளர்த்தெடுக்கப்படும்போது வணிகச் சந்தையின் தங்கமாகவும் நண்டு இனம் இருக்கிறது. மருத்துவக் குணம் வாய்ந்த உணவு நண்டு என்று சொன்னால், அதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று அடுத்த வினாடி விஞ்ஞான உலகம், சொன்னவர் மீது பாயும். இதனாலேயே இதுபோன்ற பல மருத்துவப் பொக்கிஷங்கள் வெளியில் தெரியாமலே அழிந்து விடுகின்றன.

இன்றளவிலும் தீராத காய்ச்சல், ஜன்னி, ஒற்றைத் தலைவலி, நெஞ்சுச்சளி, தாம்பத்திய வாழ்க்கையில் நாட்டம் இல்லாமை போன்றவைகளுக்கு கழனி நண்டை நசுக்கி, அதில் மிளகு சேர்த்து ரசம் வைத்துக் கொடுக்கும் பழக்கம் வட மாவட்ட மக்களிடமும், வடசென்னை வாசிகளிடமும் இருக்கிறது. அதில் நல்ல முன்னேற்றமும், தீர்வும் கிடைப்பதால்தான் பலநூறு ஆண்டுகளாக 'கை வைத்திய' குறிப்பில் நண்டுப் பிடியாக இந்த மருத்துவ முறைகள் இருந்து வருகின்றன.

குளுவான்நண்டு, தேங்காநண்டு, நீலக்கால் நண்டு, கடல்நண்டு, ஆற்று நண்டு, வயல்நண்டு, கழனிநண்டு, குட்டைநண்டு, சேற்று நண்டு என்று இந்திய நீர்நிலைகளில் வகைப்படுத்தப்பட்ட நண்டினம் மட்டுமே ஆயிரத்தை தாண்டி நிற்கிறது. பயிர்களை காக்க (?) தெளிக்கப்படும் ரசாயன உரங்களாலும், மருந்துகளாலும் வயல்நண்டுகளும், கழனி நண்டுகளும், ஓடை நண்டுகளும் கொஞ்சங் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. இன்னுமோர் கால் நூற்றாண்டில் அதன் அடையாளங்கள் மியூசியங்களில் மட்டுமே பார்க்கக் கிடைக்கும் எனலாம்.

குட்டை நண்டுகளும், ஆறு, ஏரி நண்டுகளும் ஆறு, ஏரி, குட்டைகள் அழிந்து போன காரணத்தால் அவைகளும் அழிந்து கொண்டிருக்கின்றன. சேற்றுப் பகுதிகளோ, குளம் பகுதிகளோ அடையாளத்துக்கும் இல்லை என்பதால், இப்போது தப்பித்திருப்பது, மணல் கொள்ளைகளால் தன்னுடைய பரப்பளவை இழக்காமல் இருக்கும் கடல்பகுதி நண்டுகளே. புரதம், மாவுச்சத்து, தாமிரம், கந்தகம், மக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், அயோடின், விட்டமின் பி மற்றும் சி ஆகியவை நிறைந்து இருக்கும் உணவுப்பொருள் நண்டினமாக மட்டும்தான் இருக்க முடியும். கடலுணவில் 20 சதவீதம் நண்டினமாகத்தான் இருக்கிறது.

கடல் நண்டின் ஓடுகளில் இருந்துதான் பக்கவாதம் போக்கும் மருந்து தயாரிப்பும், பேக் பெய்ன் எனப்படும் முதுகுத்தண்டு வலி நிவாரண மருந்தும் நம் மூதாதையர்களால் தமிழ் மருந்தாகக் கையாளப்பட்டுள்ளது. மிக அண்மையில்தான் இதை (மட்டும்) ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக் கொண்டு அவர்களும் நண்டுபிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அறுவை சிகிச்சையின்போது கறுப்பு நிறத்தில் ஒரு நூலைக் கொண்டு டாக்டர்கள் தையல் போடுவதை பார்த்திருப்பீர்கள். அந்த நூலின் பெயர் "கைட்டின்". நண்டின்  ஓட்டில் இருக்கும் பசை போன்ற சதைப் பகுதியைக் கொண்டே இது தயாரிக்கப்படுகிறது. காயம்பட்ட பகுதி நாளடைவில் கூடியதும் தையல் பிரிக்க வேண்டிய அவசியம் பெரும்பாலும் இருப்பதில்லை. அந்த தையல் நூல் மனித உடலோடு, தசையோடு இயைந்து அப்படியே ஒன்றாகிக் கொள்ளும்.

சிறு சிறு இடங்களை குட்டை போன்றும், பண்ணைகள் போன்றும்  உருவாக்கி முறைப்படி நண்டுகளை பராமரித்து விவசாய எண்ணத்தோடு வளர்த்தெடுத்தால் மூன்றுமுதல் ஆறுமாத காலத்துக்குள் பாக்கெட்டில் பணம் நிரம்பி வழியும். நீர்நிலைகளை யாரும் அழிக்காமல் பார்த்துக் கொண்டால் இந்த நண்டினங்கள் அங்கே தானாகவே வளரும். அங்கு வசிக்கும் மக்களுக்கு பணத்தை விட உயர்ந்த விலை கொண்ட ஆரோக்கியம் தானாகவே வளரும். இந்த கட்டுரையின் தலைப்புக்குள் நான் வந்தால் மட்டுமே கட்டுரை நிறைவு பெறும் என்றாலும், நண்டினம் குறித்து ஒரு விழிப்புணர்வை பரவச் செய்வது மிகவும் நல்லது என்பதால் அதை செய்துள்ளேன்.

குழிநண்டு கதை

கடற்கரையின் மணற் பகுதிகளில் நடக்கும் போது நம் கண்முன்னே குடுகுடுவென குதித்தோடும் (சிறு மணல் வீட்டில் குடியேறும் நண்டானது, இவள் கண் பார்த்து மீனென்று திண்டாடுது.... பாடலையும், ரிக்‌ஷாக்காரன் படக் காட்சியையும் நினைவு படுத்திக் கொள்ளுங்கள்) நண்டுகளும், வெளியிலேயே வராமல் ஏதாவது பாதுகாப்பான ஒரு இடத்தைப் பார்த்து தங்கிவிடும் நண்டுகளும்தான் குழி நண்டுகள் எனப்படுகின்றன.

குறிப்பிட்ட நாளில் (வண்டு கொழுத்தால் வளையில் தங்காது, என்ற சொற்றொடர் வந்ததும் இந்த குழி நண்டுகளின் குணாதியசத்தைக் கொண்டுதான்) இனப் பெருக்கத்துக்காக இந்த நண்டுகள்,  பவுர்ணமி நாளின் ஏதாவது ஒரு பொழுதில்  கும்பல் கும்பலாக அந்த பாதுகாப்பு அரண்களை விட்டு வெளியே வருகின்றன. வெளியில் வருகிற இந்த இன நண்டுகள் அப்போது குடுகுடுவென ஓடுவது இல்லை. ஏதோ, போதைக்குள் ஆட்பட்டது போல மெல்லவே நடக்கும். அப்போது இவைகளை சாதாரணமாக பிடித்துக் கொள்ளலாம். வெள்ளை வெளேர் என்ற நிறத்தை மட்டுமே கொண்டிருக்கும் இந்த நண்டுகள்,  இன்றளவும் மீனவ மக்களின் ஆரோக்கியத்துக்கு ஒரு அடையாள சான்றாக இருக்கின்றன.

வயாக்ராவை தோற்கடிக்கும் வீரியத்தை மனித உடலுக்கு ஆண்-பெண் பாகுபாடு இல்லாமல் கொடுப்பதோடு 'இரு பாலின' மலட்டுத் தன்மைக்கும்  இந்த நண்டின உணவு  தீர்வாக இருக்கிறது என்கிறார்கள்.

ஆமாம், என்ன கேட்டீங்க? நண்டை பிடிக்கும் போது கொடுக்கினால் கவ்வி பிடித்து விடாதா என்றுதானே....?  சில தீர்வுகளை நோக்கிப் போகும் போது சில தியாகங்களை செய்துதானே ஆகவேண்டும் (இனிப்பான செய்தியைச் சொல்லட்டுமா, இந்த நண்டுகளுக்கு கொடுக்கே இருக்காது... ஹவ்வ்வ்வ்வ்.... )

- ந.பா.சேதுராமன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்