Election bannerElection banner
Published:Updated:

ரேசன் அரிசி கடத்தல் நடப்பது எப்படி? -அமைச்சர் வரை நீளும் 'நெட்வொர்க் மாஃபியா'!

ரேசன் அரிசி கடத்தல் நடப்பது எப்படி? -அமைச்சர் வரை நீளும் 'நெட்வொர்க் மாஃபியா'!
ரேசன் அரிசி கடத்தல் நடப்பது எப்படி? -அமைச்சர் வரை நீளும் 'நெட்வொர்க் மாஃபியா'!

ரேசன் அரிசி கடத்தல் நடப்பது எப்படி? -அமைச்சர் வரை நீளும் 'நெட்வொர்க் மாஃபியா'!

மிழகத்தில் இருந்து நாள்தோறும் கடத்தப்படும் ரேசன் அரிசியைக் கட்டுப்படுத்த வழிதெரியாமல் திணறுகிறது அரசு இயந்திரம். இந்தக் கடத்தலில் சிவில் சப்ளை அதிகாரிகள் கூட்டு சேர்ந்திருப்பது கூடுதல் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் ஒரு கோடியே 97 லட்சம் பேர் ரேசன் அட்டையை பயன்படுத்துகின்றனர். இவர்களில் 90 சதவீதம் பேர் அரசின் இலவச ரேசன் அரிசியை வாங்குகின்றனர். இதுதவிர, மண்ணெண்ணெய், உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, சர்க்கரை, உப்பு, பாமாயில் என மக்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வழங்குகிறது.

ரேசன் கடைகளில் வழங்கப்படும் இந்தப் பொருட்களை மையமாக வைத்து மாஃபியா கும்பல் ஒன்று இயங்கி வருகிறது. இவர்கள் மூலம் தினமும் பல்லாயிரம் கிலோ ரேசன் அரிசி மற்றும் பருப்பு வகைகள் சர்வசாதாரணமாக கடத்தப்படுகிறது.

இந்த நெட்வொர்க் பற்றி நம்மிடம் விவரித்த சிவில் சப்ளை அதிகாரி ஒருவர், " பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு மாதம் இருபது கிலோ ரேசன் அரிசி வழங்கப்படுகிறது. இந்த அரிசியை ரேசன் கடை ஊழியர் மூலமோ, அதை வாங்கும் பொதுமக்கள் மூலமோ கிலோ இரண்டு ரூபாய் என்ற கணக்கில் கடத்தல் கும்பலுக்கு விற்கிறார்கள். இதே அரிசியை பாலீஸ் போட்டு கிலோ நாற்பது ரூபாய் வரை விற்கிறார்கள். அரசி அதிகம் தேவைப்படும் கேரள, ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் உள்ள அரிசி மொத்த கொள்முதல் வியாபாரிகள்தான் கடத்தல் கும்பலின் பிரதான கஸ்டமர்கள். அவர்களுக்கு கிலோ 10 ரூபாய் என விற்கிறார்கள். இதற்காக, 500 பேர் கொண்ட கும்பல் ஒன்று இயங்குகிறது. இவர்களின் வேலையே காலையில் மின்சார ரயிலில் வருவார்கள். தலைக்கு இருபது கிலோ அரிசியை எடுத்துக் கொண்டு ஆந்திர எல்லையான சூலூர் பேட்டைக்கோ, கர்நாடக எல்லைக்கோ பயணிப்பார்கள். இவர்கள் மூலம் மட்டும் தினமும் பத்தாயிரம் கிலோ வரையில் ரேசன் அரிசி கடத்தப்படுகிறது.

ரேசன் அரிசி கடத்தல் நடப்பது எப்படி? -அமைச்சர் வரை நீளும் 'நெட்வொர்க் மாஃபியா'!


முன்பெல்லாம் லாரிகளில் ரேசன் அரிசி கடத்துவதாக செய்திகள் வரும். கண்டெய்னர்களிலும் கடத்தி வந்தார்கள். அவற்றில் எல்லாம் சோதனை நடைமுறைகள் அதிகரிக்கப்பட்டதும் சத்தமே இல்லாமல், ஆட்கள் மூலம் சிறிது சிறிதாக கடத்துகிறார்கள். மின்சார ரயிலில் வந்து போகும் செலவு வெறும் இருபது ரூபாய்தான். ஒருநாளைக்கு இரண்டு மூன்று முறை வரும்போது, ஒரு நபர் சாதாரணமாக 600 ரூபாய் வரையில் சம்பாதிக்கிறார். இதையே, ஆயிரம் பேர் செய்யும்போது கணக்கு போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். இப்படி நூதனமான முறையில் ரேசன் அரிசி கடத்துவது பற்றி அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும். பொதுமக்கள் மட்டுமல்லாமல், ரேசன் கடை ஊழியர்கள், மண்டல சிவில் சப்ளை உதவி ஆணையர்கள் வரையில் இந்தக் கொள்ளையில் பங்கு போகிறது.

எந்த ரேசன் கடையில் எவ்வளவு அரிசி இருக்கிறது? வாங்காமல் தவிர்ப்பவர்கள் யார்? என்ற விவரம் எல்லாம் அந்தக் கடை ஊழியருக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் மொத்தமாக கொள்ளை கும்பலுக்கு விற்கின்றனர். இப்படி சந்தேகம் வந்த கடைகளில் நாங்கள் நடத்திய ரெய்டில், 427 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை விசாரித்தால் துறையின் அமைச்சர் காமராஜ் வரையில் கைகாட்டுகிறார்கள். துவரம் பருப்பு விலை அதிகமானபோது, கள்ளச் சந்தையில் விற்கப்பட்ட பருப்புகள் அனைத்தும் ரேசன் கடையில் இருந்து போனவைதான். மக்களுக்கு ஸ்டாக் இல்லை என்ற போர்டைத் தொங்கவிட்டு ஏமாற்றுகிறார்கள். இந்தக் கும்பலை முழுமையாகக் களையெடுத்தால் மட்டுமே சிவில் சப்ளையின் பலன்கள் மக்களுக்குச் சென்று சேரும்" என்றார் வேதனையோடு.

" எங்களின் முழுநேர வேலையே ரேசன் அரிசி கடத்தலை முறியடிப்பதுதான். கடத்தலுக்கு துணைபோனதாக எங்கள் துறையில் 19 பேர் வரையில் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கிறார்கள். கடந்த ஐந்தாண்டுகளில் இரண்டாயிரம் குற்றவாளிகளைக் கைது செய்திருக்கிறோம். ஐந்து கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரேசன் அரிசியைப் பறிமுதல் செய்திருக்கிறோம். ஆறாயிரம் வாகனங்களைப் பறிமுதல் செய்திருக்கிறோம். அதனால், எங்கள் நடவடிக்கையை யாரும் சந்தேகப்பட முடியாது. கடத்தல் கும்பலுக்கு அஸ்திவாரமே ரேசன் கடைகள்தான். அங்கிருந்தே அதிரடிகளைத் தொடங்கினால் ஒட்டுமொத்த நெட்வொர்க்கையும் களையெடுக்க முடியும்" என்கிறார் உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு உயர் அதிகாரி ஒருவர்.

கடத்தலின் தொடக்கமே ஆளுங்கட்சி கரைவேட்டியிடம் இருந்து தொடங்குகிறது என்றால், ரேசன் அரிசி மாஃபியாக்களைக் களையெடுப்பது எப்படி? எனவும் கேள்வி எழுப்புகிறார்கள் சிவில் சப்ளை அதிகாரிகள்.

-ஆ.விஜயானந்த்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு