'முடிஞ்சா பிடிச்சிக்கோ...!' - திருட்டுகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்! | Interesting theft incidents and variety of theifs

வெளியிடப்பட்ட நேரம்: 11:33 (02/04/2016)

கடைசி தொடர்பு:13:46 (02/04/2016)

'முடிஞ்சா பிடிச்சிக்கோ...!' - திருட்டுகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்!

திருட்டு சம்பவம் எல்லாமே சீரியஸ் க்ரைம் அல்ல, இதில் வந்தோமா, திருடினோமா போனோமா என்றில்லாமல், ரசனையுடன் திருடும் கலாரசிகர் பலர் உண்டு. போலீசையே திணறடித்த சில சுவாரஸ்யமான திருட்டுச் சம்பவங்களைப் பார்ப்போமா...

ஆஃப் பாயிலும் வெஜிடபிள் குருமாவும்

மதுரை  திருமங்கலத்தை சேர்ந்த ஆறுமுகம், ஆரணியில் சிறிய ஹோட்டல் நடத்தி வந்தார். சில மாதங்களுக்கு முன் ஹோட்டலுக்கு விடுமுறை விட்டுவிட்டு, திருவிழாவுக்கு குடும்பத்தோடு ஊர் சென்றார். இரண்டு நாள் கழித்து சென்று பார்த்தபோது கடையிலிருந்த கல்லாப்பெட்டி முதல் ஃப்ரிட்ஜ், கிரைண்டர், ஸ்டாக் வைத்திருந்த மளிகைப்பொருட்கள், சிலிண்டர், காய்கறி வெட்டுகிற கத்தி முதற்கொண்டு திருடு போயிருந்தது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், திருடர்கள் மாவு பிசைந்து பரோட்டோ, வெஜிடபிள் குருமா, ஆம்லெட், ஆஃப் பாயில் போட்டு சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்து நிதானமாக திருடி சென்றிருக்கிறார்கள். இலை போடுகிற பக்கெட்டையும் தூக்கி சென்றிருக்கிறார்கள். இத்தனை கேஷுவலான திருடர்களா என போலீஸ் அதிர்ந்து நின்றது.

முடிஞ்சா பிடிச்சிக்கோ - 'சவால்' திருடர்கள்


மதுரை மாவட்டம் மேலூர் வட்டாரத்தில்,  கிராமப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளாக பார்த்து ஒரு கும்பல் திருடிவந்தது. பணத்தை எடுப்பதோடு காஸ்ட்லி சரக்குகளையும் கிளப்பிச் செல்வது அவர்களின் பாணி. காவல்துறை எவ்வளவோ முயற்சித்தும் திருடர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. உச்சகட்டமாக கொட்டாம்பட்டி அருகே ஒரு டாஸ்மாக் கடையில் வழக்கம்போல் கைவரிசையை காட்டிவிட்டு, கடையின் சுவற்றில் ‘எங்களை முடிந்தால் பிடித்து பார்’  என்று எழுதி வைத்து விட்டு போனார்கள்.

‘சார் உங்களை கிண்டல் செய்து எழுதி வைத்துவிட்டு போயிருக்கிறார்கள், அதுக்காகவாவது அவங்களை பிடியுங்கள்’’ என்று கடைக்காரர்கள் போலீசை உசுப்பிவிட்டும், ‘அவனுக உங்களை கிண்டல் பண்ணிட்டு போயிருக்கானுக’ என்று போலீஸ் தங்களுக்கு நேர்ந்த அவமானத்தை ஆள் மாற்றிவிட்டது. இன்றுவரை
அந்த திருடர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

'இந்த நாளை உன் டைரியில எழுதி வெச்சுக்க'

காரைக்குடியில் தொடர் திருட்டுக்கு பஞ்சமில்லை. அங்குள்ள திருடர்கள் ரொம்பவும் வித்தியாசமானவர்கள். சமீபத்தில் போலீஸ் குவார்ட்டர்ஸ்க்குள் நுழைந்தவர்கள்,  திறந்திருந்த எஸ்.ஐ வீட்டுக்குள் புகுந்துவிட்டனர். அங்கு எஸ்.ஐ.யின் மனைவி தூங்கி கொண்டிருந்தார். எஸ்.ஐ இல்லை என்பதால் (இருந்தால் மட்டும்?) இவர்கள் சாவகாசமாக திருடி இருக்கிறார்கள். அந்தநேரம் விழித்த எஸ்.ஐ மனைவி சத்தம் போட, அவரை கத்தியை காட்டி மிரட்டியிருக்கிறார்கள். பின் அவரை கட்டிப்போட்டுவிட்டு, 'இந்த நாளை உன் டைரியில எழுதி வெச்சுக்க...' என ரிவெஞ்ச் எடுத்த 'அண்ணாமலை' ரஜினி ரேஞ்சுக்கு,  “எங்களை எத்தனை தடவை ஸ்டேஷன்ல வச்சு உன் வீட்டுக்காரர் அடிச்சாரு அதுக்குத்தான் இந்த பனிஷ்மெண்ட்” என்று அசால்டாக சொல்லிச் சென்றுள்ளனர்.

 

வேலியே பயிரை மேய்ந்தால்...

மதுரையை சேர்ந்த சிவபெருமாள் என்பவர், வெளிமாநிலங்களிலிருந்து சிகரெட்டுகளை மொத்தமாக வாங்கி வந்து, வரி கட்டாமல் பதுக்கல் வியாபாரம் செய்து வந்தார். இவரை நோட்டமிட்ட ஒரு கும்பல் சமீபத்தில் இவருடைய சிகரெட் லாரியை அப்படியே கடத்தி சென்றது. இல்லீகல் பிஸினஸ் என்பதால் இதுக்கு முன்பு இதேபோல் நடந்தபோது புகார் தெரிவிக்காமல் மறைத்துவிட்டார். இப்போது அப்படி இருக்க முடியவில்லை. அமௌண்ட் அதிகம். திண்டுக்கல் போலீசில் உண்மையை கூறி புகார் செய்தார். டோல்கேட்டிலிருந்த வீடியோ பதிவைசெக் செய்தபோது, மொத்த போலீஸ் வட்டாரமே அதிர்ந்தது. கொள்ளையடித்தது திண்டுக்கல் இன்ஸ்பெக்டர் கோபிநாத் பாண்டியன்.

ஆடம்பரமாக வாழ கடன் வாங்கி, பின்பு அதை அடைக்க வழிப்பறி கும்பலுடன் சேர்ந்து கொள்ளையடிக்க ஆரம்பித்தது தெரியவந்தது. போலீஸ் என்று பொறிக்கப்பட்ட காரை எப்போதும் எடுத்து சென்றிருக்கிறார். தற்போது சிறையில் இருக்கிறார். திருடன் - போலீஸ் விளையாட்டு கேள்விப்பட்டிருக்கிறோம். போலீஸே திருடனானால்...!

அங்கவஸ்திரமும் அழகிய(யி)ன் குரலும்....இது புது டெக்னிக்

திருவண்ணாமலை பக்கமிருந்து ஒரு கும்பல்,  பட்டுவேஷ்டி அங்கவஸ்திரம் சகிதம் பக்திப்பழமாக காரில் கிளம்புவார்கள். அவர்கள் கையில் மாவட்டத்திலுள்ள முக்கிய கோயில்களின் கும்பாபிஷேக பத்திரிக்கைகள் இருக்கும். இவர்கள் செல்லும் மாவட்டங்களில் சோர்ஸ்கள் இருப்பார்கள். அவர்கள் ஏரியாவில் யார் யார் கிளுகிளு மடையன், பக்திமடையன் இருக்கிறார்கள் என்பதை லிஸ்ட் எடுத்து வைத்திருப்பார்கள். அவர்கள் வீட்டு முன் போய் பந்தாவாக இறங்கி,  கோயில் பிரசாதத்தை கொடுத்து அவர்கள் நம்பும் விதமாக நடந்து கொள்வார்கள்.

எங்க ஊர் கோயில் அதிகாரி ஒரு பெண், அவர் பேசுகிறார் என்று போனை அவர் காதில் வைப்பார்கள். தேன் குரலில் பேசும் குரலை கேட்டு மயங்கி விடுவார்கள். அப்புறமென்ன கோயில் திருப்பணிக்கு என்று சொல்லி ஒரு லட்சம், இரண்டு லட்சம் என்று லவட்டிக்கொண்டு கிளம்பி விடுவார்கள். பக்திக்கு அள்ளிக்கொடுத்தவர்கள் கொஞ்ச நாளில் விஷயம் தெரிந்து வெட்கப்பட்டு வெளியே சொல்லமாட்டார்கள்.

ஒருத்தனை ஏமாத்தனும்னா அவன் ஆசையை துாண்டணும்...


சென்னை விமான நிலைய முகப்பில் சிலர் காரருகே நின்று கொண்டு, ‘’சார், ராம்நாடு, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, அறந்தாங்கி இருக்கீங்களா, கார் ரிடர்ன் போகுது. பஸ் காசை கொடுத்தா இறக்கி விட்டுடுறேன்’’ என்று வெள்ளந்தியாக கூவுவார்கள். வெளிநாட்டில் கூலி வேலை செய்து சம்பாதித்து வரும் உஷார் பார்ட்டிகள் இதை கண்டுகொள்ள மாட்டார்கள். அவர்கள் நேராக ரயில் நிலையத்துக்கோ அல்லது கால்டாக்ஸியிலோ ஏறி செல்வார்கள். அல்லது வெளிநாட்டிலிருந்து கிளம்பும்போதே டிராவல்ஸில் புக் செய்துவிட்டு வருவார்கள். அறிவை அஞ்சு நிமிஷம் அடகு வைப்பவர்கள், கம்மியான ரேட்டில் ஊருக்கு காரில் பயணம் என்று ஆசைப்பட்டு ஏறிக்கொள்வார்கள்.

விழுப்புரம் தாண்டியவுடன் டிரைவர் வண்டியை நிறுத்துவார். அங்கு தயாராக இருக்கும் ஒரு கும்பல்,  நம்ம ஆளை கொஞ்சம் கவனிப்பு காட்டி,  அவர்களின் பொருட்களை எடுத்து சென்று விடுவார்கள். இப்படி தொடர்ந்து கொள்ளையடித்த தேவகோட்டை கும்பல் ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் பிடித்தது.

மட்டமான சரக்கால் மாட்டிய திருடன்

மதுரையில் சரக்கடித்து விட்டு கடையில் திருட சென்றவர், திருடிய களைப்பாலும் மட்டமான சரக்காலும்  கடைக்குள்ளேயே படுத்து உறங்க, காலையில் கடைக்காரர் வந்து திருடரை எழுப்பிவிட்டு பல் விளக்கி மூஞ்சி கழுவ வைத்து, காபி வாங்கி கொடுத்து போலீஸிடம் பொறுப்பாக ஒப்படைத்தார்.

ராமநாதபுரம் பக்கம் உள்ள ஒரு சிறிய ஊரை சேர்ந்தவர்கள், இந்தியா முழுக்க ஜவுளிக்கடை, செருப்புக்கடை, ஹார்டுவேர்ஸ் என்று பெரிய அளவில் வியாபாரம் செய்ய செல்வார்கள். இதில்தான் இவர்கள் டெக்னிக்கே இருக்கிறது. பல லட்சம் அட்வான்ஸ் கொடுத்து பெரிய கடையாக பிடிப்பார்கள். கடை முதலாளியின் அறிமுகத்தை வைத்து அந்த ஊரிலேயே ரேஷன்கார்டு, பான்கார்டு,  சிம்கார்டு உள்பட அனைத்தையும் வாங்கிவிடுவார்கள். உள்ளூர் வங்கியில் பெரிய தொகையை டெபாசிட் செய்து டிரான்ஸாக்ஷன் செய்வார்கள்.

அந்த ஊரின் முக்கிய வி.ஐ.பி.யை வைத்து கடை திறப்பு விழாவை ஜாம் ஜாமென்று நடத்துவார்கள். இதை பார்த்து வங்கி மேனேஜர் பெரிய தொகையை ஓ.டி.யாக கொடுப்பார். சரக்கு தரும் கம்பெனியும் கடனுக்கு பொருட்கள் தருவார்கள். கொஞ்ச நாட்களில் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி அட்வான்ஸை திருப்பி வாங்கி விட்டு, கடையிலுள்ள பொருட்களை வேறு கடையில் விற்றுவிட்டு, சொந்த ஊருக்கு கிளம்பி வந்து விடுவார்கள். பேங்க்காரனும், சரக்கு கொடுத்தவனும் பொய்யான முகவரியில் தேடிக்கொண்டிருப்பார்கள்.

அப்படியே ஸ்‌மெல் பண்ணி ராம்நாடு பக்கம் வந்தாலும் மிரட்டி அனுப்பி விடுவார்கள். சிறிது நாள் கழித்து இன்னொரு மாநிலத்துக்கு செல்வார்கள். 

என்னமாய் சிந்திக்கிறாய்ங்க நம்மாளுக...


- செ.சல்மான்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்