Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மேகமலை: கோடைக்கு ஓர் சூப்பர் டூரிஸ்ட் ஸ்பாட்!

        

சிறப்பு புகைப்படத் தொகுப்பு க்ளிக் செய்க...

டிராவல் விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில், 'இந்தக் கோடையில் நீங்கள் எந்த மலைப் பிரதேசத்துக்கு சுற்றுலா செல்ல விரும்புகிறீர்கள்?" என்று ஒரு திடீர் கருத்துக் கணிப்பு நடத்தினோம். இதில் மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று முதல் இடத்தை பிடித்த இடம் மேகமலைதான்!. அடுத்த இடங்களில்தான் கொடைக்கானல், ஊட்டி, வால்பாறை, கொல்லிமலை, ஏலகிரி, ஏற்காடு போன்றவை இருக்கின்றன. ஃபேஸ்புக்  மக்களுக்கு பிடித்த மேகமலையில் அப்படி என்னதான் ஸ்பெஷல்?

மேகமலை சிறப்புகள்!

மேகமலை நான்கைந்து மலைச்சிகரங்கள் நடுவே உள்ள ஒரு பள்ளத்தாக்கு ஆகும். இது தமிழ்நாட்டில் உள்ள மலைவாசஸ்தலங்களில் சிறந்த நில அமைப்பு கொண்டதாக இருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மலை முழுவதும் மேகங்களின் ஆட்சி என்பதால் மேகமலை என்று பெயர். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி பச்சை பசேல் என விரிந்து பரந்து கிடக்கும் மேகங்களின் தாய்வீடுதான், இந்த மேகமலை.

பசுமையான நிலபரப்புடன் பெரிய பெரிய மரங்களுடன் இந்தப் பகுதி காணப்படுகிறது. மிக அழகான சாய்ந்த நிலப்பரப்பில் உள்ள தேயிலை மற்றும் காபி பயிர் தோட்டங்களைக்  காண கண் கோடி வேண்டும். உயர்ந்த மலை, மிக ஆழமான பள்ளம், அழகிய ஏரி என என பல இயற்கை அழகுகள் கொட்டிக் கிடக்கும் ஊர் மேகமலை. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் பறிக்கப்படும் தேயிலைகளை பக்குவப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்பட்டிருந்தது.

எங்கே இருக்கிறது?

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே இந்த நகரம் உள்ளது. சின்னமனூரிலிருந்து  மேகமலைக்கு மலைப் பாதைவழியாகதான் செல்ல முடியும். மலைப் பாதையின் முதல் 30 கி.மீ. வனப்பகுதி, அடுத்த 20 கி.மீ. தேயிலை தோட்டங்கள்...மேகமலை செல்ல பஸ் வசதி இருக்கிறது. காரில் செல்பவர்களுக்கு கொஞ்சம் கடினம் தான். ஜீப், எஸ்யூவி போன்ற வாகனங்களை பயன்படுத்தினால் அதிக கஷ்டம் இல்லாமல் மலைப் பாதையில் பயணிக்கலாம்.

எப்படிப் போகவேண்டும்?

சின்னமனூரிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் இருக்கிறது மேகமலை. பேருந்தில் சின்னமனூரிலிருந்து நேராகச் செல்லலாம். குறிப்பிட்ட நேரம் மட்டுமே பேருந்து வசதி உண்டு. கட்டணம் சுமார் 20 ரூபாய். காரில் செல்பவர்கள் ஆண்டிப்பட்டியிலிருந்து கண்டமநாயக்கனூர் சென்று அங்கிருந்து நேராக மேகமலை போகலாம்.

தங்கும் வசதி!

சில ரிசார்ட்டுகள் இருக்கின்றன. தங்கும் அறைகளுக்கு ஒருநாளைக்கு ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். குடும்பத்துடன் சுற்றுலா செல்பவர்கள் இருட்டுவதற்குள் மலையிலிருந்து இறங்கி விடுவது நல்லது.

பயணம் எப்படி?


ஒரு காலத்தில் மேகமலைக்கு செல்லும் மலை பாதை தனியார் தேயிலை நிறுவனம் ஒன்றின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த நிறுவனத்தால் இந்தப் பாதையைச் சரியாக பராமரிக்க முடியவில்லை. இதனால், அந்த தேயிலைத் தோட்ட நிறுவனம், தமிழக அரசின் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் சாலை பராமரிப்பை ஒப்படைத்திருக்கிறது. சின்னமனூரில் இருந்து சில சிற்றூர்களை கடந்து சென்றால், தென்பழனி வனப் பகுதி செக் போஸ்ட் வரும். இந்த செக்போஸ்டில் உள்ள அதிகாரிகளிடம்,  சுற்றுலா செல்பவர்கள் தங்களை பற்றிய விவரங்களை எழுதிக்கொடுத்தால்தான் வனப் பகுதிக்குள் நுழைய அனுமதி கொடுப்பார்கள்.

சிறிது தூரத்தில், அடிவாரத்தில் வழிவிடு முருகன் என்ற கோவில் இருக்கிறது. இந்தக் கோவில் அருகே மலை மேல் போகிற வாகனங்களுக்கும், அதில் பயணிப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது என பெண்கள் ஆரத்தி காட்டுவார்கள். இவர்களில் வயதான மூதாட்டிகளும் உண்டு. ஆரத்தி காட்டுபவர்களுக்கு தட்டில் காணிக்கை செலுத்தி விட்டு மலை மேல் ஏற ஆரம்பிக்கலாம்.

போகப் போக சாலை 20 அடியாகக் குறுகி போகிறது. அதனால், பேருந்துகள் மெல்ல மெல்ல ஊர்ந்துதான் செல்கின்றன. பறவைக் கூட்டத்தை அதிகம் பார்க்கலாம். மலை மீது ஏற ஏற பல ஹேர்பின் வளைவுகள் இருக்கின்றன. சாலை அகலம் குறைவு. ஒரு நேரத்தில், ஒரு வண்டி மட்டுமே செல்ல முடியும். உயரே செல்ல செல்ல பசுமையான மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. பசுமையான காட்டில் ஓங்கி உயர்ந்த மரங்கள் மற்றும் பெரும் பள்ளத்தாக்குகள் அதிசயிக்கவும் ஆச்சர்யப்படவும் அச்சப்படவும் வைப்பதுதான் வனத்தின் அழகு.

காட்டுக்  கோழிகள், சேவல்களை அதிகம் பார்க்கலாம். சிங்க வால் குரங்குகளுக்கும் பஞ்சமில்லை. தேயிலை தோட்டங்கள் பச்சை பசேல் என பசுமையாக காட்சி அளிக்கின்றன. தொடர்ந்து பயணித்தால், ஹைவேவிஸ் என்ற ஊர் வருகிறது. கரடு முரடான பாதை என்றாலும் பசுமையான இயற்கை ரம்மியமாக இருக்கிறது. மேலும், பள்ளத்தாக்குகளில் இருக்கும் அணை நீர், குளிர்ந்த காற்றை வெளிப்படுத்தி ரசிக்க வைக்கிறது. ஹைவேவிஸ் -ல் சாப்பிட ஹோட்டல் இருக்கிறது. ஹோட்டலில் சைவம் மற்றும் அசைவம் சாப்பாடு கிடைக்கிறது. அணையில் பிடித்த கோல்டு ஃபிஷ் என்கிற மீன் பொரியல் கிடைக்கும்.

சிறப்பு புகைப்படத் தொகுப்பு க்ளிக் செய்க...

அடுத்து மகாராஜா மெட்டு என்கிற இடம் வருகிறது. இதுவும் கரடுமுரடான சாலையை கொண்டதுதான். இருபுறமும் கண்ணுக்கு குளுமையாக தேயிலைத் தோட்டங்கள், வெண்ணியார், இரவங்கலாறு, வட்டப்பாறை என பல  இடங்கள் இருக்கின்றன. அணைகளும் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. அணைகளிலிருந்து வழிந்தோடும் தண்ணீர் மூலம் மின்சாரம் எடுக்கப்படுகிறது. இரண்டு மலைகளுக்கு இடையே பெரிதாக கட்டப்பட்டிருக்கிறது மலையாறு அணை. அணைத் தண்ணீரில் முகம் பார்க்கலாம். அத்தனை தெளிவு.

சுமார் 3 மணி நேரப் பயணத்திற்குப் பின்னர் மேகமலையை அடையலாம். வீடுகளின் எண்ணிக்கை மிக குறைவு. பகல் நேர வெப்பநிலை ஏறக்குறைய 12 டிகிரி செல்சியஸ். அதனால்தான் எப்போதும் இதமான குளிர். சீசன் நேரம் என்றால் பகலில் கூட "ஸ்வெட்டர்' தேவைப்படும். வழியில் ஆங்காங்கே அருவிகள் உள்ளன. எல்லாப் பருவ நிலைகளிலும் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது என்கிறார்கள் அங்குள்ளவர்கள்.
உட்பிரையர் என்கிற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தேயிலை தோட்டங்களே மேகமலை முழுக்க பரவியிருக்கின்றன. இந்த நிறுவனத்தில் டீத்தூள் உருவாகும் முறையை தெரிந்து கொள்ளலாம். அதற்கு நபர் ஒருவருக்கு 100 ரூபாய் வசூலிக்கிறார்கள்.

இயற்கையின்  ரசிகர்கள் அவசியம் செல்ல வேண்டிய இடம் இது. இதை ஓர் ஆரோக்கிய பயணம் (ஹெல்த் டிராவல்) என்று கூட சொல்லலாம்.

- சி.சரவணன்

மேலும் படங்களுக்கு கீழே உள்ள linkஐ க்ளிக் செய்யவும்:

https://www.vikatan.com/news/album.php?&a_id=5417

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement