Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒடுக்கப்பட்ட மக்களின் நாயகன் அம்பேத்கர் பிறந்தநாள் பகிர்வு

 

அம்பேத்கர் இந்தியாவின் வரலாற்றில் தனியிடம் பிடித்த இணையற்ற தலைவர்.. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மட்டுமே போராடினார் அவர் என்கிற பொது பிம்பத்தில் இருப்பதுவருத்தத்துக்குரியது.  எண்ணற்ற இன்னல்களுக்கு உள்ளாகி இருட்டில்,துன்பத்தில்,அடக்குமுறையில் உழன்று கொண்டிருந்த இந்த தன் சக மக்களின் துயரத்துக்கு என்ன காரணம் ,சாதிகள் எப்படி தோன்றின ,சாதியம்
எப்படி சக மனிதனை சமமானவனாக கருதாத துயர் மிகுந்த போக்கை வளர்த்தது என்பதைப்பற்றி அவர் செய்த ஆய்வு அதைத்தொடர்ந்து எழுதிய நூல்கள் எல்லாமும் அசாத்தியமானவை.

எந்த இடத்திலும் எதையும் ஆதாரம் இல்லாமல் சொல்லக்கூடாது என்பதற்காக வரிக்கு வரி அவர் கொடுத்திருக்கும் அடிக்குறிப்புகள் எந்த வெறுப்புணர்வும் இல்லாமல் உண்மையை மட்டும் ஒடுக்கப்பட்டவர்களின் ஆன்மாவின் தீனக்குரலாக எழுப்பிய அற்புதம் அவரால் செய்யப்பட்டது.  வர்க்கத்துக்கும் வர்ணத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டை ஆங்கிலேயருக்கு
அவர் எடுத்துக்காட்டும் புள்ளி அற்புதமானது. அது சமூகத்துக்கு எதிரானது அல்ல,பணம் பெற்றால் ஒருவர் முன்னேறி வர்க்க அடுக்கில் மேலே போய் விடலாம்-இங்கே அது சாத்தியம் இல்லை என்று தெளிவாக பதிவு செய்தார் அண்ணல்.

எப்படி கல்விக்கூடங்கள், அரசின் கவுன்சில்கள், வேலை செய்யும் இடங்கள்,வர்த்தகம் என்று பல்வேறு புள்ளிகளில் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று ஆதாரங்களோடு அவர் அடுக்கும் பொழுது அட போடுவீர்கள் நீங்கள் பலருக்கு தெரியாத தகவல் இந்தியாவின் ரிசர்வ் வங்கி உருவானது அண்ணலின் வழிகாட்டுதலில் தான். காந்தி தேசத்தின் விடுதலைக்கு பின் சமூகம் சார்ந்த விடுதலையை முன்னெடுப்பதை பார்ப்போம் என்ற பொழுது அவரோடு எண்ணற்ற உரையாடல்கள் நிகழ்த்திய அண்ணலின் பொறுமையை நாம் கற்க வேண்டும்  .பூனா ஒப்பந்தத்தை காந்தி தன் உண்ணா நோன்பின் மூலம் மாற்ற முயன்ற பொழுது துயரத்தோடு விட்டு கொடுத்த அண்ணலின் கருணை பெரும்பாலான தலைவர்களுக்கு இல்லாதது.

அவருக்கிருந்த பல்துறை புலமை இன்றைக்கும் சிலிர்ப்பை உண்டு செய்கிறது .பொருளாதாரம், சட்டம், வரலாறு, சமூகவியல், புவியியல் என எண்ணற்ற துறைகளில் தனக்கான தேடலை விடாமல் செய்தவர் அவர்.  இந்திய அரசியல் சட்டத்தை உடனிருந்த உறுப்பினர்கள் பலர் நகர்ந்து கொள்ள ஒற்றை ஆளாக கிட்டத்தட்ட செதுக்கி உருவாக்கிய பெருமை அண்ணல் அவர்களையே சாரும். அதற்கு பின்னும் ஒரு முன்கதை உண்டு. இந்தியாவின் முதல் அமைச்சரவை பட்டியலோடு காந்தியை பார்க்க நேரு போன பொழுது அதில் அண்ணலின் பெயர் இல்லை. "எங்கே 'அம்பேத்கர்' அவர்களின் பெயர் ?"என காந்தி கண்களை குறுக்கி கேட்டார். நேரு அண்ணலை சட்ட அமைச்சராக ஆக்கினார்.

கிராம சுயராஜ்யம் என்கிற காந்தியின் வழியில் போனால் சாதியம் ஊற்றெடுக்கிற மண்ணாக இம்மண் போய் விடும் என்பதில் அண்ணல் தெளிவாக இருந்தார். அவர் இயற்றிய சட்டங்களின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு எனும் கனி கிடைக்கபெற்றது. அதையும் தொடர்ந்து அப்படியே வைத்திருக்க வேண்டும் என்று அண்ணல் சொல்லவில்லை என்பதை குறித்துக்கொள்ள வேண்டும். அவர் இயற்றிய அரசியலமைப்பு சட்டம் தான் இந்த நாட்டை செலுத்தும் வாகனம் என்றால் அது மிகையில்லை. இந்த நாட்டின் ஜனநாயகம் இன்னமும் உயிர்திருப்பதற்கு அண்ணலின் தொலைநோக்கு முக்கிய காரணம்.


பொதுவான இந்து சிவில் சட்டத்தை கொண்டு வர அவர் எடுத்த முயற்சிக்கு மதவாத சக்திகள் கடும் எதிர்ப்பை கிளப்பின. நேருஒத்துழைக்க வில்லை என எண்ணி அண்ணல் பதவி விலகினார். அவர் மரணமடைந்த சில மாதங்களில் அதை நேரு ஆறு தனித்தனி சட்டங்களின் மூலம் செய்து அண்ணலுக்கு அஞ்சலி செலுத்தினார் அண்ணலிடம் இருந்து படிக்கவேண்டிய மிகமுக்கிய பாடம் உண்டு. எதையும் அறிவுப்பூர்வமாக அவர் கையாண்டார். வெறுப்பால் எதையும் கட்டமைக்கவில்லை அவர். அவர் எழுதிய எந்த கட்டுரையிலும் இந்த நாட்டின் மீது வெறுப்பை உமிழ்கிற வார்த்தைகளை நீங்கள் பார்க்க முடியாது. மாற்றத்தை கொண்டு வந்துவிட முடியும் என்கிற முனைப்பு அவரின் எழுத்தில் சிந்தனையில் தெரியும். சமூக விடுதலைக்காக ஏன் இந்த நாட்டின் இயக்கத்துக்கான விதை போட்ட அண்ணலை நினைவு கூர்வோம்.

- பூ.கொ.சரவணன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement