உழைப்பவர்கள் இல்லாமல் ஒரு நாளும் இல்லை! இவர்களை லைக் செய்வோம்!

காலை அலுவலகம் சென்று இயந்திரமாய் உழைத்து கணினிக்குள் மூழ்கி டார்க்கெட்டாய் வாழும் ஐ.டி பணியாளர்கள் துவங்கி மார்க்கெட்டில் காய்கறி வாசத்தில் மூட்டை துக்கி சிக்ஸ்பேக்கோடு வாழும் தொழிலாளர்கள் வரை எல்லாருமே உழைப்பாளிகள் தான். இவர்களை உங்களுக்கு நன்றாக தெரியும். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் உங்களுக்காக இவர்கள் ஏதோ ஒரு உழைப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். காலையில் பேப்பர் போடும் பையன் துவங்கி இரவு நீங்கள் உறங்கும் போது ஆன் செய்யும் மின்விசிறி வரை யாரோ ஒருவருடைய உழைப்பு நமக்கு இன்றியமையாததாகிறது, நாம் செய்யும் செயல்களுக்காக உழைக்கும் மனிதர்களை போகிற போக்கில் நாம் சந்தித்துவிட்டு பின்னர் மறந்துவிடுகிறோம்.அவர்கள் வாழக்கைமுறை மிகவும் சுவாரஸ்யமானது.

இவர்களது உழைப்பு மிகப்பெரியது. காலையில் நாம் அருந்து தேநீர் தான் நமது காலையை புத்துணர்ச்சியாக்குகிறது என்றால் அதனை பயிரிட்டவர்கள் துவங்கி கடைசியில் டீ கொடுப்பவர் என உழைப்பின் நீளம் அதிகம். அது ஒரு செயலுக்கு தான். நாம் செல்லும் பேருந்து.வாகனம், உண்ணும் உணவு, உடுத்தும் உடை, இருப்பிடம் என அனைத்துமே யாரோ ஒருவரது உழைப்பில் உருவானது தான்.

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் குறைந்த பட்சம் ஒரு லட்சம் பேரின் உழைப்பையாவது பயன்படுத்தியிருப்பான் என்கிறது கிரெக்க தத்துவம். நாம் வாங்கும் எடை அதிகமான பொருட்களை வீட்டிற்கு கொண்டுவந்து சேர்த்தவுடன் அதில் ஏதாவது சேதாரம் உள்ளதா என பார்க்கிறோமே தவிர அதை கஷ்டபட்டு கொண்டுவந்து சேர்த்த வயதான பெரியவரை நாம் என்றுமே பார்த்ததில்லை.மாலை நேரங்களில் பொழுதைபோக்க நாம் செல்லும் பீச்களிலும்,பார்க்களிலும் நம் கண்ணுக்கு தெரிந்தே பல தொழிலாளர்கள் நமக்காக உழைத்து வருகின்றனர்.நாம் வாங்கி உண்ணும் பொருட்களை தயாரித்து வெயில் என்றும் பார்க்காமல் தங்கள் வேலையை மட்டும் கருத்தில் கொண்டு இயங்கும் மனிதர்களை நாம் யாரும் நினைவில் வைப்பதுமில்லை.

அவர்களுக்கும் நிரந்தர வாடிக்கையாளர்கள் என்றும் யாரும் இல்லை.ஆனாலும் தினமும் தங்களுக்கான புதிய வாடிக்கையாளர்களை தேடி பயணிக்கின்றனர். ஒரே இடத்தில் நமக்கு நிகரான போட்டியாளர்கள் இருந்தால் அவர்களது பலம், பலவீனம் அறிந்து அவர்களோடு போட்டியிடுவோம், ஆனால் இவர்களை போலவே தொழில் செய்யும் 100 பேர் அங்கு இருந்தாலும் அவர்களின் தன்நம்பிக்கையை நம்பி களமிறங்கும் இவர்களுக்கு முன்னால் மிகப்பெரிய நிறுவனங்கள் வகுக்கும் உத்திகளும் தோற்றுப்போகும்.

இவர்களைவிடவும் இன்னும் சிலரை நாம் பார்த்திருக்க கூடும்...உயரமான கட்டடங்களின் உச்சியில் வெல்டிங் வேலை செய்யும் நபர், மெட்ரோ ரயில் பணிகளில் சரங்க பாதையில் பணிபுரிபவர் தொடங்கி தெரு முனையில் பானி பூரி விற்பவர் வரை அனைவருமே வெளிமாநிலத்தவர்கள் தான். ஊரைவிட்டு வந்து வேலைக்காக வாழும் இந்த மனிதர்களை நாம் கடந்து சென்று கொண்டு தான் இருக்கிறோம். நாம் ஒரு சின்ன செடியை நட்டால் கூட ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் நான் மிகப்பெரிய வேலையை செய்துள்ளேன் என ஸ்டேட்டஸ் தட்டிவிடுகிறோம். ஆனால் இவர்கள் ட்விட் செய்ததுமில்லை, ஷேர் செய்ததுமில்லை. இவர்கள் இல்லாமல் நாம் யாருமே இல்லை. லைக் செய்யாத, ஷேர் செய்யாத இவர்களை லைக் செய்வோம், சேர் செய்வோம்.

மாதசம்பளம், குடும்பம், அழகான வீடு என்ற வாழ்க்கையில் வாழ்ந்துவரும் நமக்காக உழக்கும் இந்தமனிதர்களின் உழைப்பு இல்லையெனில் நம்மால் எந்த ஒரு காரியத்தையும்  யோசிக்க முடியாது, நம்மை போல உழைத்து நமக்காகவும் உழைக்கும் இவர்களுக்கு இந்த நாள் மட்டும் உழைப்பாளர் தினம் இல்லை!! ஒவ்வொரு நாளுமே இவர்களுக்கு உழைப்பாளர் தினம் தான்!! ஒவ்வொரு நாளும் இவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் தான்!!

ச.ஸ்ரீராம்
படங்கள்: நிவேதா சேகர்

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!