Published:Updated:

'மக்கள் நலக் கூட்டணியா? அப்படின்னா?' -திசையை மாற்றிய ஜி.கே.வாசன்

'மக்கள் நலக் கூட்டணியா? அப்படின்னா?' -திசையை மாற்றிய ஜி.கே.வாசன்
'மக்கள் நலக் கூட்டணியா? அப்படின்னா?' -திசையை மாற்றிய ஜி.கே.வாசன்

'மக்கள் நலக் கூட்டணியா? அப்படின்னா?' -திசையை மாற்றிய ஜி.கே.வாசன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் தோல்விக்குப் பிறகு, மாற்று திசையில் பயணிக்கும் முடிவுக்கு வந்துவிட்டனர் அதன் தலைவர்கள். விஜயகாந்தை அடுத்து ஜி.கே.வாசனும் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறார் என்கின்றனர் த.மா.கா.வினர்.

சட்டப் பேரவைத் தேர்தலில் ஓர் இடத்தில்கூட மக்கள் நலக் கூட்டணியால் வெல்ல முடியவில்லை. இத்தனைக்கும் மக்கள் மன்றத்தில் அதன் தலைவர்கள் வைத்த வாக்குறுதிகள் எதுவும் எடுபடவில்லை. பூரண மதுவிலக்கு, ஊழலற்ற நிர்வாகம், கூட்டாட்சி என தமிழக நலனுக்காக அவர்கள் மைக் முன்னால் கத்திய கதறல்கள் அனைத்தும் காற்றோடு கரைந்து போய்விட்டன. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், கட்சியின் மாவட்ட நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். 'மிக மோசமான நிலைக்கு கட்சி தள்ளப்பட்டுவிட்டது. இப்படியொரு நிலைமை வருவதற்கு மக்கள் நலக் கூட்டணியை நாம் தேர்வு செய்ததுதான் காரணம். அடுத்து வரக் கூடிய தேர்தல்களில் தொண்டர்கள் மனநிலைக்கு ஏற்ப முடிவெடுப்பேன்' என விஜயகாந்த் உறுதி கொடுத்ததாகச் சொல்கின்றனர் தே.மு.தி.க.வினர்.

தே.மு.தி.க.வைப் போலவே, த.மா.கா.விலும் அதிருப்தி குரல்கள் மேலோங்கிவிட்டன. தேர்தல் நேரத்தில் பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் என கட்சியின் சீனியர்கள் மாற்று முகாம்களை நோக்கிச் சென்றுவிட்டார்கள். கூடவே, தங்கள் ஆதரவாளர்களையும் அழைத்துச் சென்றது வாசனுக்குள் கொதிப்பை ஏற்படுத்தியது. தேர்தல் முடிவுகளால் மிகுந்த வேதனையில் இருக்கிறார் அவர்.

"சட்டமன்றத் தேர்தலோடு மக்கள் நலக் கூட்டணி முடிந்துவிட்டது. இனியொருமுறை இப்படி ஒரு அணியைக் கட்டமைக்க வேண்டும் என்ற ஆசையே எங்கள் தலைமைக்குப் போய்விட்டது. இப்போது கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வேலையில் தீவிரமாக இருக்கிறோம்" என்கிறார் த.மா.கா.வின் மூத்த தலைவர் ஒருவர். " நாங்கள் வைத்த முழக்கங்களுக்கு எந்த மரியாதையும் இல்லாமல் போய்விட்டது. மக்களின் நம்பிக்கையை எங்கள் கூட்டணி பெறவில்லை. அ.தி.மு.க.வின் பி- டீம் என்ற அடிப்படையிலேயே பார்த்தார்கள். அதனால்தான், எங்களுக்கு வர வேண்டிய ஓட்டுக்கள் அத்தனையும் அ.தி.மு.க.வுக்குப் போனது.

கட்சியின் இரண்டாம்கட்டத் தலைவர்களும் குரூப் சிஸ்டம் என்ற அடிப்படையில், தங்கள் ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கிக் கொண்டார்கள். இதனால், கட்சிக்குள்ளேயே அதிருப்தி ஏற்பட்டது. வரும்காலங்களில் இனி இதுபோன்ற நிலை இருக்காது என வாசன் உறுதியாகக் கூறிவிட்டார். தேர்தல் முடியும் வரையில், கூட்டணியின் தலைவர்கள் ஒருங்கிணைப்போடுதான் இருந்தார்கள். ஆனால், கட்சித் தொண்டர்கள் அப்படி இருக்கவில்லை. கடைசி இரண்டு நாட்களில் மாற்றுக் கட்சிகளுக்கு விலை போய்விட்டார்கள். யாரையும் நொந்து எந்தப் பயனும் இல்லை. வரக் கூடிய உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என்று சொல்லிக் கொண்டு போனால், போட்டியிடுவதற்குக்கூட கட்சிக்காரர்கள் முன் வர மாட்டார்கள்.

பலரும் கடனாளியாகக் கூடிய வாய்ப்புதான் அதிகம். தவிர, ஆளுங்கட்சி என்ற அடிப்படையில் அனைத்து இடங்களையும் பெறுவதற்கு அ.தி.மு.க எதை வேண்டுமானாலும் செய்யும். இதனால் எங்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படும். எனவே, உள்ளாட்சித் தேர்தலை முற்றாகப் புறக்கணிப்பது என்ற முடிவில் இருக்கிறார் ஜி.கே.வாசன். நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது, அப்போதைய கூட்டணியை முடிவு செய்து கொள்வோம் என்பதே அவரது எண்ணம்" என்றார் விரிவாக. 

மக்கள் நலக் கூட்டணியோடு தேர்தல் நெருக்கத்தில் இணைந்த விஜயகாந்தும் வாசனும் வெளியேற முடிவு செய்துவிட்டார்கள். திருமாவளவன், வைகோ, கம்யூனிஸ்டுகள் என தொடக்கத்தில் உருவான மக்கள் நலக் கூட்டியக்கமாவது தொடருமா? என்பதே அரசியல் ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.

ஆ.விஜயானந்த்
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு