சிங்கம், புலி, சிறுத்தை... குட்டிகளை வளர்ப்பது இப்படிதான்! | Surprising Ways Animals Care For Their Young

வெளியிடப்பட்ட நேரம்: 10:31 (07/06/2016)

கடைசி தொடர்பு:11:58 (30/06/2016)

சிங்கம், புலி, சிறுத்தை... குட்டிகளை வளர்ப்பது இப்படிதான்!

மனிதர்கள் குழந்தைகளைப் பெற்றெடுத்து வளர்ப்பதையும், அவர்களைப் பாதுகாப்பதையும் கண்கூடாக நாம் பார்த்து வருகிறோம். மிருகங்கள் தாங்கள் ஈன்ற குட்டிகளை எப்படி பாசத்துடன், அக்கறையுடன் கவனிக்கின்றன என்பதை இங்கே பார்ப்போம்...

சிங்கம்

மிருகங்களிலேயே பலம் பொருந்தியதாக இருக்கும் சிங்கத்தின் குடும்பத்தில், பெண் சிங்கம் ஒரு முறை நான்கு குட்டிகளைப் பெற்றெடுக்கும். தன் குட்டிகளை, தனது துணையான ஆண் சிங்கம் உட்பட பிற விலங்குகளின் கண்ணில் படாமல் பாதுகாக்கும். சில நேரங்களில் தந்தை சிங்கமே குட்டியை சாப்பிட்டு விடும் என்பதால்தான் இந்த முன்னெச்சரிக்கை. சிங்கக் குட்டிகள் பிறந்த 3 முதல் 11 நாட்களுக்கு கண் திறப்பதில்லை. எனவே, முதல் 11 நாட்களுக்கு தாய் சிங்கம் மிகவும் அக்கறையோடும், பாசத்தோடும் தன் குட்டிகளை பக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது. எட்டு வாரம் கழித்துத்தான் குட்டிச் சிங்கங்களை தன் துணையான ஆண் சிங்கத்திடமே பெண் சிங்கம் அறிமுகப்படுத்துமாம். இரண்டு அல்லது 3 வயது வரை சிங்கக் குட்டிகளை தாய் பாதுகாக்கும்.

பிறந்த நான்கு சிங்கக் குட்டிகளில் ஒன்று அல்லது இரண்டு மட்டுமே தப்பிப்பிழைக்கும். இதர குட்டிகளை பிற ஆண் சிங்கங்கள் வேட்டையாடி சாப்பிட்டுவிடும் அபாயமும் உண்டு.
 


யானை

யானை 22 மாதங்கள் கருவை சுமந்து, அதன் பின்னரே குட்டியைப் பெற்றெடுக்கிறது. பிறந்த யானைக் குட்டியை, அதன் தாய் மட்டுமின்றி, பிற பெண் யானைகளும் பாதுகாப்பதில் அக்கறை காட்டும். 22 மாதங்களாக கருவில் சுமந்த தாயின் உடல்நலத்தை கருத்தில் கொண்டே இவ்வாறு பிற தாய் யானைகள் குட்டிகளைக் காக்கின்றன.

குட்டியானை பிறந்த அடுத்த நிமிடமே எழுந்து நின்று விடும். ஆனால்,  நடக்க முடியாது. தாய் யானை அல்லது யானைக்கூட்டத்தில் உள்ள இதர யானைகள் அதற்கு நடப்பதற்கு கற்றுக்கொடுக்கும். அதன் பின்னர் இரண்டு மணி நேரத்துக்குள் யானைக்குட்டிகள் தானாக நடக்கத் தொடங்கும்.
தன்னைவிட பெரிய யானைகள் எப்படித் தாவரத்தை அல்லது மரத்தின் கிளையை ஒடித்துச் சாப்பிடுவது என்றெல்லாம் குட்டி யானை கற்றுக்கொள்கிறது. நான்கு முதல் 6 மாதங்களில் குட்டி யானைக்கு தும்பிக்கை வளருகிறது. அதன் பின்னர்தான் புற்கள், இலைகளை உண்கிறது. இரண்டு வருடங்கள் கழித்துத்தான் பாலை தவிர, பிற தாவரங்களை குட்டி யானை முழுமையாக உட்கொள்கிறது.
 


சிறுத்தை

பெண் சிறுத்தை ஒரு பிரசவத்தில் 2 முதல் 5 குட்டிகளைப் பெற்றெடுக்கும். சிறுத்தைக் குட்டியின் வாசனைகூட வெளியில் தெரியாத அளவுக்கு தடுப்பு வேலிகளை தாய் சிறுத்தை அமைக்குமாம். 18 மாதங்கள் முதல் இரண்டு வருடங்களுக்குப் பிறகு, தாயிடம் இருந்து தனியாக செல்வதற்கு சிறுத்தைக் குட்டி பழகிவிடும். பிற சிறுத்தைக் குட்டிகளுடன் சேர்ந்து திரியும். தாய் பூனை, தன் குட்டிப் பூனைகளுடன் மெல்லிய உறுமல் ஒலியுடன் பேசும். இதேபோலத்தான் சிறுத்தையும் தன் குட்டிகளுடன் பேசுமாம். ஆறு மாதத்தில் தன் குட்டிக்கு எப்படி வேட்டையாடுவது என்றும், பிற மிருகங்களிடம் இருந்து தப்பிப்பது பற்றியும் தாய் சிறுத்தை பயிற்சி கொடுக்கும். எனினும், பெரும்பாலான சிறுத்தைக் குட்டிகள் சிங்கங்கள், கழுதைப்புலிகளுக்கு இரையாகிவிடும் பரிதாபமும் நிகழ்கிறது.

புலி

16 வார கர்ப்ப காலத்துக்குப் பின்னர், 3 முதல் 4 குட்டிகளை தாய்ப் புலி பெற்றெடுக்கும். யாருமற்ற குகை, அடர்ந்த புல்வெளிப் பகுதி போன்ற மறைவிடத்தில்தான் குட்டிகளை தாய்ப் புலி பெற்றெடுக்கும். புலிக்குட்டி பிறந்தவுடன் அதற்கு உடனடியாக கண் தெரியாது. அது முழுமையாக தாயைச் சார்ந்துதான் இருக்கும். 6 முதல் 12 நாட்களுக்கு பிறகுதான் புலிக்குட்டிக்கு கண் தெரியும். பிறந்த புலிக்குட்டிகளில் பல்வேறு காரணங்களால் சில குட்டிகள் இடையிலேயே இறந்துவிடும்.

முதல் இரண்டு மாதங்கள், தன் குட்டிகளை விட்டு தாய்ப் புலி எங்கும் செல்லாது. தேவைப்படும் பட்சத்தில் தன் குட்டிகளின் கழுத்துப்பகுதியில் பல்லால் மென்மையாக கடித்து தூக்கிக்கொண்டு செல்லும். எட்டு வாரங்கள் கழித்து தன் குட்டிகளுக்கு வேட்டையாடுவது எப்படி என தாய்ப் புலி சொல்லிக்கொடுக்கும். இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் குட்டிப்புலிகள், தாய்ப் புலியை விட்டு தனியாகச் செல்லும்.


உரங்குட்டான் குரங்கு

மனிதர்களைப் போலவே, உரங்குட்டான் தன் குட்டியை பாதுகாக்கும். தாய் குரங்கு ஒரே ஒரு குட்டியை மட்டும் பெற்றெடுக்கும். அரிதாக சில குரங்குகள் மட்டுமே இரட்டைகளை பெற்றெடுக்கும்.
பிறந்ததில் இருந்து முதல் இரண்டு வருடங்களுக்கு குட்டி, தாயை விட்டுப் பிரியாது. தாயின் வயிற்றை இறுக்கமாக பிடித்தபடியே செல்லும். தாயிடம் இருந்து தாய்ப்பால் மட்டுமே குடிக்கும். வேறு ஒரு இடத்துக்குச் செல்வது உள்ளிட்ட அனைத்துக்குமே தாயை சார்ந்து இருக்கும். சில குட்டிகள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தாயின் கையைப் பிடித்துக்கொண்டு நடந்து செல்லும். சில குட்டிகள் ஐந்து ஆண்டுகள் வரைகூட தாயை விட்டுப் பிரியாது. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர்தான் உரங்குட்டான் குரங்குகள், தாயை விட்டு தனியே செல்லும்.

- கே.பாலசுப்ரமணி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்