Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'டிஸ்லெக்‌ஸியா' மாணவர்கள்... ஆசிரியர்களின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?

 

''உங்க பொண்ணு/ பையன் எழுதுறதல அவளோ மிஸ்டேக் வருது... இதுக்கு மேல இவனுக்கு எப்படி சொல்லி கொடுக்கிறதுன்னே புரியல...!" என்று குறைபட்டுக் கொள்ளும் ஆசிரியர்களால் நொறுங்கிப்போவது பெற்றோர்களும் மாணவர்களும்தான்.

இதில் ஆசிரியர்களுடைய எண்ணங்கள், அணுகுமுறைதான் மாற வேண்டும்" என்கிறார் சேலத்தில் ஹெலிக்ஸ் ஓப்பன் ஸ்கூல் அண்ட் லேர்னிங் சென்டர் (Helikx Open School and Learning Centre) என்னும் பள்ளியை நடத்திவரும் செந்தில்குமார்.

'' சிறு வயதில் மெதுவாகக் கற்கும் பிரச்னை எனக்கே இருந்தது. பள்ளிப் பாடங்களை எழுதும்போது எக்கச்சக்கமான எழுத்துப் பிழை வரும். தொடர்ந்து அரை மணி நேரத்துக்கு உட்கார்ந்து படிக்க முடியாது. இந்த மாதிரி பல சிரமங்களுடன்தான் நான் வளர்ந்தேன். பத்தாம் வகுப்பில் எனக்கு 37 மார்க் போட்ட ஆசிரியரைத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். அந்த மார்க் எனக்கு கிடைக்காமல் போயிருந்தால், நான் என்ன ஆயிருப்பேன் என்று எனக்கே தெரியாது.

பிறகு கோவை பி.எஸ்.ஜி.யில் சோஷியல் ஒர்க் படித்தபோது, பள்ளிகளில் திரும்பத் திரும்ப ஃபெயில் ஆக்கப்படும் மாணவர்கள் மீது என் கவனம் குவிந்தது. 'ஏன் சில மாணவர்களுக்கு மட்டும் இப்படிப்பட்ட சிரமங்கள் ஏற்படுகின்றன, என்ன செய்தால் அவர்களை இந்தச் சிக்கல்களிலிருந்து காப்பாற்ற முடியும்?' என்று யோசிக்க ஆரம்பித்தேன். ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவதற்காக டெல்லியில் இருந்தபோதும், இது தொடர்பான அரசுக் கொள்கைகள் அனைத்தையும் எடுத்துப் பார்த்தேன்.

அரசுத் தரப்பில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் எல்லாமே சரியாகத்தான் இருந்தன. வழக்கம் போல அவற்றை செயல்படுத்துவத்தில்தான் பல விதமான பிரச்னைகள். இந்த விஷயத்தில் ஆசிரியர்களின் அணுகுமுறையில் பெரிய மாற்றம் ஏற்பட வேண்டும். மெதுவாக கற்கும் மாணவர்கள் பற்றிய அறிவியல்பூர்வமான விஷயங்கள், பள்ளி ஆசிரியர்களுக்கு சொல்லித் தரப்பட வேண்டும். அடுத்த முக்கிய மாற்றம், பெற்றோர்களிடம் ஏற்பட வேண்டும். இது மாதிரி பிரச்னை உள்ள குழந்தைகளை எந்தக் காரணம் கொண்டும் வெறுத்து ஒதுக்கக் கூடாது.
 


ஒரு மாணவன் பள்ளியில் மெதுவாக கற்கும் பிரச்னையினால் பாதிக்கப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இது பரம்பரைப் பழக்கமாக வரலாம். சிலர் பிறந்தபின் காலதாமதமாக பேசத் தொடங்கி இருக்கலாம் அல்லது நடக்கத் தொடங்கி இருக்கலாம். வீட்டிலோ, பள்ளியிலோ, கற்பிக்கும் சூழலிலோ ஏதாவது குறை இருந்தாலும் இது மாதிரியான பிரச்னை வரலாம்.

நமது பள்ளிகளில் ஐ.க்யூ ( IQ)  அடிப்படையில் குழந்தைகளைப் பிரிக்கிறார்கள். பொதுவாக, 75 - 89 வரை ஐ.க்யூ இருப்பவர்கள் 'ஸ்லோ லேனர்' என்று சொல்லப்படுகிற மெதுவாக கற்கும் குறைபாடு உடையவர்களாக இருப்பார்கள். ஆனால், 90-க்கு மேலே, சராசரி கற்றல் திறன் கொண்டவர்கள் என்றாலும் இவர்களில் சிலருக்கு சரியாக படிக்க வராது. தப்பும் தவறுமாக எழுதுவார்கள். படித்ததை மறந்துவிடுவார்கள். இந்தக் குறைபாடு கொண்டவர்கள்தான்  'டிஸ்லெக்ஸியா' பிரச்னையினால் பாதிக்கப்பட்டவர்கள். 

இந்த வகை மாணவர்களை அடித்துப் படிக்க வைப்பதைவிட, இவர்களுக்கு எப்படி சொல்லித் தரவேண்டும் என்பதை புரிந்துகொண்டு கற்றுக் கொடுத்தால் தீர்ந்தது பிரச்னை. எனவே, இது மாதிரியான பிரச்னை கொண்ட மாணவர்களுக்குக் கற்றுத் தருவதற்காக, நாங்கள் மாற்று முறை பயிற்சித் திட்டத்தை (Remedial teaching) பின்பற்றி வருகிறோம்.

உதாரணமாக, ஆங்கிலத்தில் 'cat' என்றால் 'கேட்' என்று நம்மில் பலரும் படிப்போம். ஆனால், டிஸ்லெக்ஸியா பிரச்னை கொண்ட மாணவர்கள் இதனை 'காட்' என்று படிப்பார்கள். இவர்களுக்கு ஒலி அடிப்படையில் இந்த வார்த்தையை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுப்பதன் மூலம் இந்தப் பிரச்னையைத் தீர்க்கலாம்.

தவிர, இது மாதிரி உள்ள குழந்தைகளை எப்போதும் படிக்கச் சொல்லி துன்புறுத்தக் கூடாது. படிப்பு தவிர, உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் தருகிற மாதிரி பல வேலைகளைக் கற்றுத் தரவேண்டும். நாங்கள் நடத்தும் பள்ளியில் மாணவர்களுக்கு விவசாயம் கற்றுத் தருகிறோம். வித்தியாசமாக படம் வரையக் கற்றுத் தருகிறோம். கம்ப்யூட்டரில் அனிமேஷன் படங்களை வரையவும் கற்றுத் தருகிறேன். இதன் மூலம் 10-வது படித்தபின் அவர்கள் வெறும் படிப்பை மட்டுமே நம்பி காலத்தை ஓட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்க மாட்டார்கள்.
 


மெதுவாகக் கற்கும் குழந்தைகளுக்கென ஒரு பள்ளியை சேலத்தில் நாங்கள் நடத்துகிறோம். இது மாதிரியான மாணவர்களுக்கு கற்றுத் தரும் ஆசிரியர்கள்,  இந்த வகை மாணவர்களை எப்படி அணுக வேண்டும் என்பதை கற்றுத் தர ஈரோடு, திருப்பூர், கரூர், கோவை ஆகிய நகரங்களில் மையங்களை நடத்தி வருகிறோம். தமிழகத்தின் பல நகரங்களில் இது மாதிரியான பிரச்னை கொண்ட குழந்தைகள் நிறைய இருப்பதால், ஆசிரியர்கள் அனைவருக்குமே இந்த பயிற்சி அவசியம்.

மெதுவாக கற்பது ஒரு பிரச்னையே அல்ல. நோய் நாடி நோய் முதல் நாடி என்கிற விதத்தில் அணுகினால், இதனை எளிதாகத் தீர்க்கலாம். இதனால் குழந்தைகளை தேவை இல்லாமல் வாட்டி வதைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்காது'' என்றார் செந்தில்குமார்.

டிஸ்லெக்ஸியா பற்றிய போதுமான விழிப்பு உணர்வு நம் மக்களிடம் இல்லை . மூளை வளர்ச்சிக் குறைபாடுகளான ஆட்டிசம், டவுண் சிண்ட்ரோம் ஆகியவற்றுக்கும், நரம்புகளை அதிர்வலைகள் மூலம் செயல்படவைக்கும் செல்களான நியூரான்களின் செயல்திறன் குறைபாடான டிஸ்லெக்ஸியாவுக்கும் உள்ள வேறுபாட்டை, முதலில் பெற்றோர்களும்  ஆசிரியர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

சரியாகப் படிக்கவில்லை என்பதற்காக குழந்தைகள் ஒதுக்கப்படும் நிலையை இனியாவது தவிர்ப்போம்!


- ஏ.ஆர்.குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ

Advertisement