Published:Updated:

வலுக்கிறது நீதித்துறை - வழக்கறிஞர்கள் மோதல்!

Vikatan Correspondent
வலுக்கிறது நீதித்துறை -  வழக்கறிஞர்கள் மோதல்!
வலுக்கிறது நீதித்துறை - வழக்கறிஞர்கள் மோதல்!

சென்னை: சட்டத் திருத்தத்தை எதிர்த்து போராடிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ள அகில இந்திய பார் கவுன்சிலின் நடவடிக்கை குறித்து, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் புகார் செய்ய, வழக்கறிஞர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அவர்களை வழக்கறிஞர் தொழிலில் இருந்து உடனே இடைநீக்கம் செய்யவேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு, அகில இந்திய பார் கவுன்சில் நேற்று முன்தினம் கடிதம் அனுப்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன வழக்கறிஞர்கள் சங்கங்கள்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய 'சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சங்க'த்தின் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ், 'வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக செயல்படவேண்டிய பார் கவுன்சில், அவர்களுக்கு எதிராக செயல்படுவது வேதனை அளிக்கிறது. குற்றச்சாட்டுக்கு ஆளாகும் வழக்கறிஞர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெற்று அதன் பின்னரே நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால், சமீப காலங்களில் விளக்கம் கேட்காமல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதுபோன்ற நடவடிக்கையை சட்டப்படி ஏற்கமுடியாது. எனவே, அகில இந்திய பார் கவுன்சிலின் எதேச்சதிகார நடவடிக்கை குறித்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, சட்டத்துறை செயலர் ஆகியோரிடம் விரைவில் புகார் செய்ய உள்ளோம் ' என்றார்.