Published:Updated:

‘மவுத் கார்விங்’ கலையில் மதுரை மாணவர் உலக சாதனை!

Vikatan Correspondent
‘மவுத் கார்விங்’ கலையில் மதுரை மாணவர் உலக சாதனை!
‘மவுத் கார்விங்’ கலையில் மதுரை மாணவர் உலக சாதனை!


ழங்களிலோ, காய்கறிகளிலோ அழகான உருவங்களை  கைகளால் செதுக்கும் கலையே ‘வெஜிடபிள் அல்லது ப்ரூட் கார்விங்’. தாய்லாந்தை பிறப்பிடமாகக் கொண்ட இக்கலை, தற்போது உலகெங்கும் பரவி வருகின்றது. ஆனால் இக்கலையை அடிப்படையாகக் கொண்டு ‘மவுத் கார்விங்’ கில் உலக சாதனை படைத்திருக்கிறார் மதுரை மாணவர் சக்திவேல். 

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.பி,ஏ. ‘டூரிஸம், ஹோட்டல் மேனஜ்மென்ட்’ பயின்று வருபவர் மாணவர் சக்திவேல். 2015 ம் ஆண்டு,  செப்டம்பர் மாதம் மவுத் கார்விங் முறையில்,  2 மணி நேரத்தில் 240 பப்பாளிகளில்,  240 வகையான மனித முகபாவங்களை செதுக்கி சாதனை படைத்தார். சமீபத்தில் இச்சாதனையை  உலக சாதனையாக அறிவித்து,  புதுச்சேரியின் ‘அசிஸ்ட் உலக சாதனைகள்’ என்றதொரு அமைப்பு அங்கீகாரம் அளித்து, கவுரவித்துள்ளது.

 

" ஹோட்டல் மேனஜ்மென்ட் படிப்பதால் காய்கனி சிற்பக்கலை, பாடத்தின் ஒரு அங்கமாகவே இருந்தது. இதில் கொண்ட ஈடுபாட்டால், நிறைய வடிவங்களில் பல உருவங்களை இன்டெர்நெட்டில் தேடித்தேடி சுயமாகவே கற்றுக்கொண்டேன். அந்த சமயம்தான் மவுத் கார்விங் என்னும் கலையில், தமிழகத்தின் இளஞ்செழியன் என்பவர் உலக சாதனை படைத்திருக்கிறார் என தெரிந்துகொண்டேன். அதாவது வாயில் கத்தியை வைத்துக்கொண்டு, தர்பூசணிப் பழத்தில் 2.12 நிமிடங்களில் பூ வடிவம் செதுக்கி, உலக சாதனை புரிந்துள்ளார். அதன் பின்னர்தான் நமக்குப் பிடித்த இக்கலையில் நாமும் சாதிக்க வேண்டும் என தீவிர முயற்சியில் ஈடுபட்டேன். ஆறு மாத கால தொடர் பயிற்சியின் முடிவாக,  இச்சாதனையை நிகழ்த்தியுள்ளேன்.

2015, செப்டம்பர் மாதம் பல்கலைக்கழக வளாகத்தில்,  ஸ்டார் ஹோட்டல் சமையல் நிபுணர்கள், பல்கலை அதிகாரிகள் எனப் பலர் முன்னிலையில்,  வாயில் கத்தியை வைத்து தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம், எந்தவித இடைவெளியும் இன்றி 240 பப்பாளிப் பழங்களில், 240 வகையான மனித முகபாவங்களை செதுக்கினேன். இதற்கான வீடியோப் பதிவினை உலக சாதனை நிறுவனத்திற்கு அனுப்பியிருந்தேன். தற்போது அதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

தொடர்ச்சியாக இரண்டு மணி நேரமாக வாயில் கத்தியை வைத்திருந்ததால், வாயில் வலி ஏற்பட்டது. ஆனாலும் என் முயற்சியில் வெற்றிபெற்றேன்" என தனது சாதனை குறித்து தெரிவித்த சக்திவேல் , சமீபத்தில் தமிழக ஆளுநர் ரோசைய்யாவை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

ஆளுநர் மாளிகையில் கவர்னருக்காக, அவரது உருவத்தினை ‘ஹேண்ட் கார்விங்’ முறையில் தர்பூசணியில் செதுக்கி அவருக்குப் பரிசளித்ததை பெருமையாக கருதும் சக்திவேல், தனது மவுத் கார்விங் கலை மூலம் மெகா கண்காட்சி ஒன்றினை நடத்தவும் திட்டமிட்டு வருகிறார்.

- ராகினி ஆத்ம வெண்டி

மாணவப் பத்திரிகையாளர்

படங்கள்: சே. சின்னதுரை