வெளியிடப்பட்ட நேரம்: 13:22 (19/06/2016)

கடைசி தொடர்பு:14:46 (17/06/2018)

ஷாருக்கானுக்கு அவரது அப்பா தந்த ஐந்து பரிசுகள்! #HappyFathersDay

ஷாருக் கான்

ஷாருக்கான் எங்கு பேசினாலும் அவர் தனது பேச்சுக்களில் ஒரு தத்துவமிக்க, மேலாண்மை கருத்துக்கள் நிறைந்ததாக இருக்கும். அப்படி தான் ஒரு சமயம் துபாயில் நடந்த நிகழ்ச்சியில் வழக்கம் போல தனது நகைச்சுவையான பாணியில் தனது பேச்சை துவங்கினார் ஷாருக். அதில் தனது தந்தை தனக்கு அளித்த ஐந்து பரிசுகள் தன்னை வாழக்கையின் அடுத்தகட்டத்துக்கு எடுத்து சென்றதாகவும், முன்னேற அவை ஒவ்வொன்றும் பாடங்களை கற்றுத்தந்ததாகவும் கூறினார்.

ஷாருக்கான் ''ஹாய் அனைவருக்கும் வணக்கம், இங்குள்ள யாரவது என் உரை பிடிக்கவில்லை என்றால் பாதியில் எழுந்து செல்லலாம். ஃபீல் ஃப்ரீ. ஏனென்றால் ஒருவர் தனக்கு பிடித்த மாதிரி இருக்க வேண்டும். வாழ்க்கையில் என் தந்தை எனக்கு தந்த ஐந்து பரிசுகள் என்னை வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய செய்ய வைப்பதாகவும், அடுத்தகட்டத்துக்கு நகர வைப்பதாகவும் மாற்றியது.

முதல் பரிசு : பழைய செஸ் போர்டு

ஒரு செஸ்போர்டில் நம்மை சுற்றிய ஒவ்வொரு சிறிய நகர்வையும் நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அதேபோல் சில சமயங்களில் நமது பெரிய பலமான ராணியை இழக்க நேரிடும். அதற்க்காக வருந்தாமல் அடுத்த நகர்வை நோக்கி நாம் நகர வேண்டும். அது தான் நம்மை அடுத்த கட்டத்து உயர்த்தும் என்பது என் தந்தையின் முதல் பரிசு சொல்லும் அறிவுரை.

2ம் பரிசு: இத்தாலியன் டைப் ரைட்டர்

இத்தாலியன் டைப் ரைட்டரை கொடுத்துவிட்டு எந்த ஒரு வேலையையும் வேலையாக பார்க்கக்கூடாது. பயிற்சியாக பார்க்க வேண்டும். ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்யும் போது தான் அதில் பரிட்சயம் ஏற்படும். தொழிலும் அப்படி தான். இந்த டைப் ரைட்டர் எப்படி ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்து அதில் பரிட்சயத்தை ஏற்படுத்துகிறதோ அதே போல் விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தியது இந்த பரிசு.

3ம் பரிசு : உடைந்த கேமரா

உடைந்த கேமரா எப்போதுமே உடைந்த விஷயங்களில் இருந்து மிகப்பெரிய கண்டுபிடிப்புகளும், படைப்புகளும் உருவாக காரணமாக அமையும். கிரேயேட்டிவிட்டியை கண்டு பயப்படக்கூடாது. அதற்கு மதிப்பளிக்க வேண்டும். நமது படைப்பு நம்மை திருப்திபடுத்தும் வரை அதனை விடக்கூடாது என்பதை இந்த உடைந்த கேமரா எனக்கு கற்றுத் தந்தது.

4ம் பரிசு :  நகைச்சுவை

ஒருவருக்கு வெற்றியோ, தோல்வியோ அதனை நகைச்சுவையாக எடுத்து கொண்டு வாழ்க்கை அடுத்த நகர்வுக்கு தயாராக வேண்டும். நாம் எவ்வளவு பெரிய அல்லது சிறிய நபராகவோ இருக்கலாம். ஆனால் நகைச்சுவை உணர்வு தான் ஒருவரை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும், இதனை என் தந்தை அளித்த பரிசுகளில் மிக முக்கியமானதாக எடுத்து கொண்டேன். அவரிடம் கற்றுக்கொண்ட குணங்களில் இது சிற‌ப்பு வாய்ந்தது.

5ம் பரிசு : வாழ்க்கை

வாழ்க்கையை நிகழ்காலத்தில் சிறப்பாக அமைத்துக்கொள்ள வேண்டும். எதோ ஒரு விஷயத்தில் நாம் சிறப்பாக செயல்படுவோம். அதில் எவ்வளவு சிற‌ப்பாகவும், நம்மை விட சிற‌ந்த நபர் யாரும் இல்லை என அனைவரும் சொல்லும் அளவுக்கு வளர வேண்டும் என்பதை தந்தை எனக்கு உணர்த்தினார் என்றார் ஷாருக்.

தந்தையர் தினம் அன்று ஒரு பிரபலத்தை உருவாக்க அவரது தந்தையின் பரிசுகள் உதவியுள்ளதை ஷாருக் பகிர்ந்தது ஒரு பிரபலம் என்பதை தாண்டி ஒரு மகனாக தன் தந்தையை எவ்வளவு நேசித்துள்ளார் என்பதை உணர்த்துகிறது.


டிரெண்டிங் @ விகடன்