மரமாகும் பேனா...கேரளாவில் அதிசயம் நிகழ்த்திய லக்ஷ்மி மேனன்! #WhereIsMyGreenWorld

ம் அன்றாட வாழ்வில் நாம் அடிக்கடி பார்க்கும் பொருட்கள் என்னவெல்லாம் இருக்கும் என ஒரு பட்டியல் போட்டால், மொபைல் ஃபோன்,  பேக், பர்ஸ், பேனா, வாகனங்கள் என சொல்லிக்கொண்டே போகலாம். இந்த வரிசையில் பேனாவிற்கு எந்த இடம்...? உண்மையில் நாம் அதிகளவில் பார்ப்பதும்,​ பயன்படுத்துவதும் பேனா​வைதான். குறிப்பாக ​Use and throw வகை பால் பாய்ன்ட் பேனா.

வாகனங்கள், பிளாஸ்டிக் குப்பைகள், கெமிக்கல்கள் என பல வழிகளில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது எனக் கூறுகிறோம். ஆனால், பால்பாய்ன்ட் பேனா இதில் முக்கிய இடம் வகிப்பதை நாம் யாரும் கண்டுகொள்வதில்லை. இதுவரை பலருக்கும் தெரியாத விஷயம் இது.

ஆம், ஆனால், பிளாஸ்டிக் குப்பைகளில் பைகளுக்கு அடுத்ததாக அதிகமாகக் காணப்படுவது ​இந்த பேனாக்கள்தான்​.

ஒரு பேனா தொலைந்தாலோ, மூடி தொலைந்தாலோ நாம் மாற்றுவது பேனாவைத்தான். ரீஃபில் பேனாக்கள் என்றாலும், மை தீர்ந்ததும் யாரும் ரீஃபில் வாங்க ஓடுவதில்லை. மாறாகப் புதியதாக பேனாவை வாங்கி பாக்கெட்டில் செருகிக்கொள்கிறோம். இதனால் எவ்வளவு பேனாக்கள் குப்பைக​ளில் சேர்கின்றன என நாம் சற்று யோசித்துப் பார்த்தால் தெரியும்.

நாம் ​சிந்திக்காத இந்த சிறு விஷயத்தை​,​கேரளாவைச் சேர்ந்த லக்ஷ்மி மேனன்​ சிந்தித்துள்ளார். சுற்றுச் சூழலைப் பேணுவதற்கு, பலவித முயற்சிகளை எடுத்து வரும் இவர், டிசைனராக உள்ளார். கேரளாவில் Pure Living எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தின் நோக்கம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத நிலையான வாழ்க்கையை அமைத்து தருவதுதான்.

லக்ஷ்மி, தன்னுடைய டிசைனிங் அறிவையும், சுற்றுச்சூழல் மீதான காதலையும் இணைத்து, பழைய காகிதங்களில் இருந்து பேனா தயாரித்துள்ளார். இந்த பேனாக்களின் அடிப்பகுதியில் ஒரு விதை வைக்கப்பட்டிருக்கும். நாம் உபயோகித்துவிட்டு அப்பேனாவை தூக்கி வீசியெறிந்தாலும் அது ஒரு மரமாக வளரும். நாம் பேனாவைத் தொலைத்தாலும் கவலை இல்லை, அது ஒரு மரக்கன்றாக மாறியிருக்கும்.

இந்த பேனாவிற்கு அவர் வைத்துள்ள பெயர் 'Entree'. அதாவது இயற்கைக்கு பாதிப்பில்லாத​,​ வாழ்க்கைக்கு நாம் entry தருவதைக் குறிப்பதாகும்.​ செய்தித்தாள்களை உபயோகிக்காமல், அச்சகத்தில் உள்ள காகிதக் குப்பைகளைப் பெற்று இவரே தயாரித்த ஒரு இயந்திரத்தில் விட்டு இறுக்கமாக சுழற்றி, பிளாஸ்டிக் பேனாவின் தன்மைக்குக் கொண்டு வருகிறார்.

இந்த பேனாக்களில் உள்ள விதை அகஸ்தியா எனும் ஒரு வகை மரத்தின் விதை. இந்த மரம் Humming bird எனவும் அழைக்கப்படுகிறது. இது மருத்துவ குணமுள்ள ஒருவகை மரம்.

இந்த பேனாவின் விலை, ரூ.12. ஆனால், சாதாரண பால்பாய்ன்ட் பேனாவின் விலை ரூ.5 தான். ஆனால், இந்த பேனாவில் உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் சாதாரண பேனாவில் இருப்பதைவிட ஐந்தில் ஒரு பங்காகும். முழுமையாக பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியவில்லை.

காரணம், ரீஃபில் பிளாஸ்டிக்காகத்தான் இருக்க வேண்டியுள்ளது. சிலர் விரும்பிக் கேட்டால், மெட்டல் வைத்து ரீஃபில் தயாரித்துக் கொடுக்கிறார்.
சுற்றுச்சூழல் மேம்பாட்டின் அடுத்தகட்டமாக இனி பள்ளிகள், கல்லூரிகளில் விழிப்பு உணர்வு முகாம் நடத்த திட்டமிட்டிருக்கிறார்.

இவரது இந்த பேனாவால் 3 பயன்கள்...

1. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கலாம்
2. அரிய வகை மரத்தை வளர்க்கலாம்
3. பெண்கள் இத்தொழிலை செய்யலாம்.

சுற்றுச்சூழல் வேறு, நாம் வேறு இல்லை. அதைப் புரிந்துகொண்டவர்கள் நிச்சயமாக இந்த பேனாவைப் பயன்படுத்த தவற மாட்டார்கள்.

-ந. ஆசிபா பாத்திமா பாவா
(மாணவப் பத்திரிகையாளர்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!