தமிழக அரசின் அவ்வையார் விருதைப் பெற்றிருக்கிறார் பிரபல மனநல மருத்துவர் சாரதா மேனன். 'மனநல மருத்துவத்தில் மிகப் பெரிய புரட்சியைச் செய்தவர் அம்மையார் சாரதா. அவருடைய மாணவர்கள் என்று சொல்லிக் கொள்வதையே பெருமையாக நினைக்கிறோம்' என்கின்றனர் பல மனநல மருத்துவர்கள்.
சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு ஆகியவற்றில் சிறந்த முறையில் செயலாற்றும் பெண்களில் ஒருவரைத் தேர்வு செய்து, மகளிர் தினத்தையொட்டி அவ்வையார் விருதை வழங்கி கெளரவித்து வருகிறது தமிழக அரசு. இந்த ஆண்டு இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவரும், பத்ம பூஷன் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவருமான டாக்டர்.எம்.சாரதா மேனனுக்கு விருதை வழங்கியிருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. விழாவில் பேசிய சாரதா மேனன், 'மனநலன் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அந்தக் குடும்பத்தினருக்கான நல்ல எதிர்காலம், சமுதாயத்திற்கு நல்ல சேவை போன்றவை தொடர்ந்து கிடைக்கப் பெற வேண்டும்' என முதல்வருக்கு வேண்டுகோள் வைத்தார்’.
கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் 1961-ம் ஆண்டு கண்காணிப்பாளராகப் பணியில் சேர்ந்தவர், சுமார் 16 ஆண்டுகள் பதவியில் தொடர்ந்து நீடித்தார். அவர் அங்கு பணிபுரிந்த காலத்தில் ஏற்படுத்திய சீர்திருத்தங்களை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது" என நெகிழ்ந்து போய் பேசினார் பிரபல மனநல மருத்துவர்.சிவநம்பி.
சாரதா மேனனைப் பற்றிய அரிதான தகவல்களையும் நம்மிடம் தொகுத்தார்.
* தமிழ்நாட்டில், 'பெண்களுக்கு மருத்துவக் கல்வி தேவையில்லை' என்ற கருத்து நிலவி வந்த காலத்தில், சென்னை எம்.எம்.சியில் எம்.பி.பி.எஸ், எம்.டி படிப்பை நிறைவு செய்தார் டாக்டர்.சாரதா மேனன். அவருடைய தந்தை அரசுச் செயலராக இருந்தவர். சகோதரர் எம்.கே.மேனன், இந்திரா காந்தி ஆட்சியில் அறிவியல் ஆலோசகராகப் பணிபுரிந்தவர். எம்.டி படிப்பை முடித்த பிறகு, மனநல மருத்துவத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு, பெங்களூருவில் (நிமான்ஸ்) சைக்யாட்ரிக் மருத்துவத்தில் பட்டம் பெற்றார். இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் அவர்தான். படிப்பை முடித்த கையோடு கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் கண்காணிப்பாளராகப் பணியில் சேர்ந்தார்.
* கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சாதாரண மனநோய், தீவிர மனநோய் என இரண்டு பிரிவு இருக்கிறது. சாதாரண மனநோய் என்பது 80 சதவீதம் பேருக்கு உள்ளது. தீவிர மனநோய் என்பது 20 சதவீதம்தான். இந்த 20 சதவீத நோயாளிகளுக்குத்தான் தீவிரக் கவனிப்பு தேவைப்படுகிறது. மற்ற சாதாரண மனநோய்களுக்கு வெளியிலேயே நல்ல சிகிச்சை அளிக்கப்படுகிறது. மனச் சிதைவு, பை போலார் டிஸ்ஆர்டர், வலிப்பு நோய் என நாள்பட்ட தீர்வு கிடைக்காத நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தாலும், கோபம், அநாவசிய பேச்சு ஆகியவறைக் குறைக்கலாம். 'முழுத் தகுதியோடு இயல்பு வாழ்க்கைக்கு அவர்கள் திரும்ப முடியும்' என்பதற்காக, முதன்முதலாக மறுவாழ்வுத் திட்டத்தைக் கொண்டு வந்ததே சாரதா அம்மையார்தான்.
* ஆக்குபேஷன் தெரபி யூனிட் என்ற ஒரு பிரிவை சீர்செய்து நோயாளிகளுக்கு தொழிற்பயிற்சி அளித்தார். நோயாளிகளுக்குள் ஆண்டுதோறும் விளையாட்டு தினம் நடத்தியதோடு, மனநோயாளிகள் செய்யும் பிளாஸ்டிக் கூடைகள், பொம்மைகள், கைவினைப் பொருட்களைக் கொண்டு கண்காட்சியை நடத்தினார். அதில் கிடைத்த வருமானம் அனைத்தையும் மருத்துவமனை செயல்பாடுகளுக்கே செலவிட்டார்.
* 1970-ம் ஆண்டுகளில் 1,800 மனநோயாளிகள் கீழ்பாக்கம் மருத்துவமனையில் இருந்தனர். இவர்கள் அனைவருக்கும் காய்கறி வளர்ப்பு, தோட்டப் பராமரிப்பு என ஓய்வே இல்லாத வகையில் வேலைகளைக் கொடுத்தார். ஸ்டான்லி மருத்துவமனைக்குத் தேவையான உணவுகளையும் இவர்களே தயாரித்து வந்தனர். ஓரளவு மனநிலையில் முன்னேற்றம் கண்ட நோயாளிகள்தான் உணவு தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். கத்தரி, புடலை, முள்ளங்கி, தக்காளி, கீரை என நாளொன்றுக்கு 1 டன் காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டன. மூன்று வேளை உணவு தவிர, தினமும் மதிய சாப்பாட்டில் முட்டை, வாரம் ஒருநாள் மட்டன், மறுநாள் மீன் என அசைவ உணவு வழங்குவதற்கும் ஏற்பாடு செய்தார். அவர் ஓய்வு பெற்ற பிறகும், ஐந்து ஆண்டுகள் வரையில் இந்த உணவுகள் வழங்கப்பட்டன. பிறகு படிப்படியாகக் காணாமல் போய்விட்டது.
* கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையில் தீவிர மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 140 பேர் இருந்தார்கள். அவர்கள் அருகில் யாரும் போக முடியாது. அவர்கள் அனைவரையும் தன்னுடைய அன்பால் வசப்படுத்தினார் சாரதா மேனன். அந்த பிளாக் அருகில் போகும்போதே கைத்தறிக் கூடத்தின் சத்தம் அதிகமாகக் கேட்கும். திருப்பூர், ஈரோட்டிற்குள் நுழைந்தது போல இருக்கும். அத்தனை நோயாளிகளுக்கும் அங்கேதான் கைத்தறித் துணிகள் தயாரிக்கப்பட்டன. சோம்பலாக இருந்துவிட்டால் தேவையற்ற எண்ணங்கள் ஏற்படும் என்பதால் தொடர்ந்து யாரையும் சோம்பலாக உட்காரவிடாமல் வேலை செய்து கொண்டே இருந்தால், தேவையற்ற எண்ணங்கள் தோன்றாது என்பதை அனுபவப் பூர்வமாக நிரூபித்தார் அம்மையார் சாரதா.
* நோய் நாடி, நோய் முதல்நாடி என்று சொல்லுக்கு ஏற்ப, மிகச் சிறந்த மருத்துவராகத் திகழ்ந்தார். நல்ல நிர்வாகியாகவும் மாணவர்களை வழிநடத்தினார். அவருடைய அறைக்குப் போகும்போதே ஐந்து முறை யோசித்துவிட்டுத்தான் மாணவர்கள் செல்வார்கள். தன்னுடைய கண்டிப்பான அணுகுமுறையால் மாணவர்களைக் கட்டுக்குள் வைத்திருந்தார். இப்போதும் புத்தாண்டு, பொங்கல் தினத்தில் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதைப் பெரும்பாலான மனநல மருத்துவர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.
* 1978-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஸ்கார்ப் இந்தியா என்ற மன நோயாளிகளுக்கான அமைப்பைத் திறம்பட நடத்தி வருகிறார். அவருடைய தந்தை அரசுச் செயலராகப் பணியில் இருந்தார். அவருடைய அண்ணன் எம்.கே.மேனன் இந்திரா காந்தி காலத்தில் மத்திய அரசின் ஆலோசகராகப் பணியில் இருந்தவர். குருவாயூர் கிருஷ்ணன் மீது அளவுகடந்த பக்தியோடு இருப்பார். கண்காணிப்பாளராகப் பதவியில் இருந்தபோதும், சாரதா அம்மையாரின் முடிவுக்கு எதிராக செயல்பட்டதில்லை. முதல்வர் கருணாநிதி இருந்த சமயத்தில், சுகாதாரத்துறையில் ஒரு முடிவு எடுக்கப்பட்ட போது, 'சாரதா அம்மையார் என்ன சொல்கிறாரோ அதன்படியே செயல்படுங்கள்' என உறுதியாகக் கூறிவிட்டார். இப்போதும் மனநல மருத்துவம் தொடர்பாக, எந்தப் புதிய தொழில்நுட்பம் வந்தாலும், அதைப் பற்றி ஆர்வத்தோடு படித்துத் தெரிந்து கொள்கிறார்.
* தென்னிந்திய மனநல மருத்துவத்தின் தந்தை என்றே அவரை நாங்கள் கொண்டாடுகிறோம். அவருடைய மாணவர் என்று சொல்லிக் கொள்வதே பெருமையானது. ஒழுக்கம், நேர்மை, நோயாளிகளிடம் பரிவு போன்ற ஏராளமான குணங்களை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டோம். மனநல மருத்துவத்தில் அவர் உச்சநிலையில் இருந்தபோதும், மிக மிக குறைவான கட்டணத்தை வாங்குவார். இப்போதும் அப்படித்தான். 93 வயதிலும் மனநோயாளிகளின் நல்வாழ்வுக்காக உழைத்து வருகிறார். இன்றைய காலகட்டத்தில் மனநல மருத்துவத்தின் தேவை அதிகரித்து வருகிறது. ' அதிர்ஷ்டமில்லாதவர்கள்' என ஒருகாலத்தில் வசை பாடப்பட்ட மன நோயாளிகளின் வாழ்வில் ஒளியேற்றி வைத்து,புது வாழ்வைத் தொடங்கி வைத்த பெருமை மருத்துவர்.சாரதா மேனனையே சாரும்!’’ என்று நெகிழ்கிறார் சிவநம்பி.
- ஆ.விஜயானந்த்