Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புத்தக வாசனையை காதலிக்காதவர் உண்டா?

ன் பாட்டனிடமிருந்து பிரித்து வந்த சொத்துக்களை அடுக்கி வைத்த அலமாரிகளில் இருந்து வரும் பழங்காகித வாசத்தைப் பற்றி நினைக்கையில் எல்லாம்,  கவிஞர் சச்சிதானந்தம் சொன்ன ’நினைவில் காடுள்ள மிருகத்தை, எளிதில் பழக்க முடியாது’ என்ற வரிதான் நினைவுக்கு வருகிறது.

பழைய திராவிட நாடு இதழ்களைச் சேகரித்து, கெட்டி அட்டையில் பைண்டிங் செய்யப்பட்ட புத்தகத்தைப் - பிரித்துப் படிக்க நினைத்தாலே கிழித்துவிடும் என்ற போதும், அந்த வாசனைக்காகவே அடிக்கடி முகர்ந்து பார்ப்பது உண்டு. வாசனையை வைத்தே, இது எந்தக் காலகட்டத்தில் வெளி வந்த புத்தகமாய் இருக்கக் கூடும் என்று சொல்லுமளவுக்கு,  அந்த வாசத்தைப் பரிச்சயபடுத்தவேண்டும் என்பது கடந்த சில ஆண்டுகளாக எனக்கிருக்கும் பெருங்கனவு. ரஷ்ய சிறுவர் இலக்கியப் புத்தகங்களின் வாசம் மட்டும் இன்னும் எளிதில் இனங்காணத்தக்கதாகவே இருக்கிறது.

என் முதல் காதலியை நான் வர்ணிக்க நினைத்தால்,  ரஷ்ய சிறுவர் இலக்கியங்களில் வந்த அழகிகளின் வர்ணனைகளாகத்தான் இருக்க முடியும். 'நவரத்தின மலை'யின் கதைகள் எனக்குள் கிளறிவிட்ட மாய உலகக் கற்பனைகள் இன்னும் முடிவில்லாத ஒரு மாயப்புதிர்தான். செக்கர்மேனியன் குதிரையும்,  குதிரையோடு பறந்து சென்று கோட்டை உச்சியில் இருக்கும் இளவரசியை முத்தமிடும் வீரனையும், அந்தக் குதிரை குறித்த வர்ணனையும் என் மனதுக்குள் பதித்துச் சென்ற பிம்பத்தை இதுவரை எந்த மாய உலகப் படங்களும் ஏற்படுத்தவில்லை, நான் கொண்டாடித் தீர்க்கும்  Lord of the rings படங்கள் கூட. எத்தனைப் பேரழகிகளைக் கடந்து வந்தாலும்,  முதல் தீண்டல் தந்து கடந்து சென்ற காதலியை மறக்க முடியாததைப் போன்ற நிலை அது.  எல்லாக் காதலிகளையும் முதல் காதலியாகவே பாவிக்க நினைத்தாலும் முதல் காதலி என்றாலே ஏதோ ஒன்று உசத்திதானே.

மிக எளிமையான கதைகளாகத்தான் இருக்கும், அந்த ஓவியங்கள், எளிய நாடோடிக் கதைகளுக்கு ஒரு மாயத்தன்மையையும், பயத்தையும், வியப்பையும் பக்கம் பக்கமாய் பூசிச் சென்றிருக்கின்றன. Folk Tales from the Soviet Union என்று ஐந்து பாகங்களாக வெளிவந்த அந்தப் புத்தகத் தொடர்,  வழக்கமான புத்தக அளவில் இல்லாமல் இன்னும் கொஞ்சம் உயரமாக,  அதாவது கொஞ்சம் நீளமாக இருந்த அந்தப் புத்தகங்களின் தோற்றமே முதல் காதலைத் தோற்றுவித்தது. ஒரு காகம், மூன்று சேவல்கள், கடலுக்குள் இருந்து உப்பை அரைத்துத் தள்ளும் மாய எந்திரம் என்று அத்தனை ஓவியங்களும் இன்றும் கண் முன் நிற்பவை. அந்த ஓவியங்கள் தந்த ஈர்ப்பு மட்டுமே பின்னாட்களில் வான்காவின் ' த ஸ்டேரி நைட்' ஓவியத்திற்குள் கரைந்துப் போகச் சொல்லித் தந்தது, 'த ஸ்க்ரீம்' ஓவியத்தின் கூச்சலோடு சேர்ந்து கத்தவும் தூண்டியது, டாலியின் ஓவியத்தில் மொய்க்கும் எறும்புகளுக்குள் ஒன்றாக மாறிவிடவும் உதவியது, முகம் கோணலான பிக்காசோவின் ஓவியத்துக்குள் ஒன்றாகச் சிதைந்து போக உதவியது.

"The Little Prince" நாவலில் குட்டி இளவரசன், ‘இந்தப் பெரியவர்களுக்கு எல்லாவற்றையும் விளக்கமாகச் சொல்லவேண்டும்!’ என்பானே அதைப் போல இப்போது வரும் சிறார் இலக்கியப் புத்தகங்களில் வரும் ஓவியங்கள் எல்லாம் மனதிலும் வயதானவர்களால் வரையப்படுகின்றவையாக இருப்பதால் பெரும்பாலான ஓவியங்கள் தட்டையாகவே இருக்கின்றன. ரஷ்ய சிறுவர் இலக்கியப் புத்தகங்களின் ஓவியங்களில் இருந்த ஒருவித சர்ரியலிச தன்மை மாய உலகத்தை மனதுக்குள் படைக்க உதவியவை. ஏன் காகத்தைக் கருப்பாகவே வரைய வேண்டும், விநோத உருவம் கொண்ட விலங்குகளும், காளான்கள் மீதான கோட்டைகளும், மீனின் தலையைக் கொண்ட சேவல்களும் என்று அத்தனை ஓவியங்களும் கற்பனை வளத்துக்கான ஊற்றுகள். ரஷ்ய சிறார் இலக்கியங்கள் எனக்கு தந்த அதே குதூகலத்தை, கொண்டாட்டத்தை, மாய உலகத்தைப் படைக்க உதவும் கற்பனை வளத்துக்கான ஊற்றை இன்னும் ஏழேழு தலைமுறைக்கும் கடத்தும் மந்திர சக்தியைத் தனக்குள் கொண்டவை.

சோவியத் யூனியன் சிதைந்ததற்காக,  அரசியல் காரணங்களுக்காக வருத்தப்படுவதை விட இது போன்ற அருமையான மாய உலகத்தின் கதவுகளைத் திறக்க உதவிய அருமையான சாவிகள் தொலைந்து போனதற்காகத்தான் குமுறி குமுறி அழ வேண்டியதிருக்கிறது. சோவியத் சிதைந்த பத்தாண்டுகளுக்குப் பிறகும்  இந்தப் புத்தகங்கள் கிடைத்தன. அதன் பிறகு காணாமல் போய் மீண்டும் மறு பதிப்பில் சில புத்தகங்கள் வர ஆரம்பித்தன. சோவியத் புத்தகங்களின் மீதான காதலே சிதைந்து போகும் அளவுக்கான மறுபதிப்புகளாக இவை இருந்து தொலைப்பதைப் பார்க்கும் போது, அவற்றையெல்லாம் ’நவரத்தின மலை’ புத்தகத்தின் ஒரு கதையில்,  மனிதர்களை தின்னும் அல்மீஸ் எனும் பூதத்திடம் பிடித்துக் கொடுத்துவிடத் தோன்றுகிறது.

நவரத்தின மலை புத்தகம்,  இதுபோல கிடைக்காமல் அலைந்து திரிந்தது எல்லாம் அந்தப் புத்தகத்தில் வந்த கதைகளை விட கொடுமையானது.   இந்தப் புத்தகத்தை,  பிக்காச்சுவைத் தேடி அலைந்ததைப் போல தேடி இருக்கிறோம். இனி கிடைக்கவே கிடைக்காது என நம்பிக்கை தொலைந்துபோன ஒரு கணத்தில்,  முகநூலில் ஒருவர் பக்கம் பக்கமாக நகலெடுத்து புத்தகத்தைக் கண்ணில் காட்டிய தினத்தில் கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. காதல் சிதைந்து போன பத்தாண்டுகளுக்குப் பிறகு,  முதல் காதலியைக் கொஞ்சம் வேறு வகையாகப் பார்க்கும்போது வருமே ஒரு படபடப்புக் கலந்த குதூகலம், அதற்கு ஒப்பானது அது. 

'புத்தகங்களைக் கடனாகத் தருபவன் முட்டாள், கடனாக வாங்கிய புத்தகத்தைத் திரும்பத் தந்துவிடுபவன் அவனை விட பெரிய முட்டாள்' என்ற பொன்மொழி எனக்குத் தெரிய வருவதற்கு முன்பாக,  நான் பெரிய முட்டாளாக இருந்த காலத்தில் நவரத்தின மலையும், Folk Tales from the Soviet Union புத்தகங்களும் என் புத்திசாலி நண்பர்களிடம் போய்விட்டது. எந்த ஊருக்குச் சென்றாலும், அந்த ஊரில் இருக்கும் நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தின் ஓர் ஓரத்தில், குப்பையைப் போல போட்டு வைக்கப்பட்டிருந்த சோவியத்தின் புத்தகங்களுக்குள் இந்தப் புத்தகங்களைத் தேடுவதையே ஒரு முக்கிய வேலையாக வைத்துக் கொண்டு தேடியதில், இரண்டு புத்தகங்கள் மட்டுமே இதுவரைக் கிடைத்திருக்கின்றன. நூலகங்களிலும் இந்தப் புத்தகங்களின் பிரதிகள் கிடைப்பதில்லை என்பது பெருந்துயரம். யாரோ ஒரு முட்டாளிடம் இந்தப் புத்தகங்கள் கிடைக்கும் பட்சத்தில் அவரிடம் என் புத்திசாலித்தனத்தைக் காட்ட விரும்புகிறேன்.

-இனியன்

         

இ-புக், அது இது என்று வந்தாலும் புத்தகங்களைக் கொண்டாடுபவர்களும் இருக்கிறார்கள்.

ஜூலை 30  Paperback Book Day!

 

Save

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement