Published:Updated:

'ரேக்ளா ரேஸ்' கவலையுடன் காத்திருக்கும் காளை பிரியர்கள்!

'ரேக்ளா ரேஸ்' கவலையுடன் காத்திருக்கும் காளை பிரியர்கள்!
'ரேக்ளா ரேஸ்' கவலையுடன் காத்திருக்கும் காளை பிரியர்கள்!

'ரேக்ளா ரேஸ்' கவலையுடன் காத்திருக்கும் காளை பிரியர்கள்!

'ரேக்ளா ரேஸ் நடைபெறுகிறது' என்ற வாட்ஸ் அப் செய்தியை மட்டும் வைத்துக்கொண்டு திருமூர்த்திமலை நோக்கிப் புறப்பட்டாச்சு. ரேக்ளா ரேஸ் என்றால் கம்பீரமாக மாடுகள் துள்ளி ஓடி வரும் காட்சி தான் கண்முன்னே வந்தது. வரிசையாக வண்டிகள் பின்தொடர, வாகனத்தையே பார்த்துச் சலித்த கண்களுக்குப் புதிதாய் ஒன்றைப் படம் பிடித்துக் காட்டப் போகிறோம் என்று மனதினுள் ஒரு மகிழ்ச்சி. அப்போது தூரத்தில் மாடுகளின் கூட்டம் தெரிந்தது. அதைக் கண்டதும் மனதினுள் ஆர்வம் பொங்கியது. வேகமாக மாடுகள் இருந்த இடத்துக்கு சென்ற போது தான் ரேக்ளா ரேஸ் நடக்கவில்லை, என்று தெரிந்தது. பந்தயக்காரர்களின் முகத்திலோ கவலை தோய்ந்த ஏக்கம்.

அங்கிருந்தவர்களிடம், 'ரேக்ளா ரேஸ்' பற்றி விசாரித்தோம். '

‘ரேக்ளாங்குறது ஒருத்தர் மட்டுமே போகக்கூடிய மாட்டு வண்டி. இந்த வண்டிங்க எல்லாமே பந்தயத்தை அடிப்படையா வைச்சு உருவாகுது. இதோட சக்கரங்கள் அளவுல சின்னதா இருக்கும். அப்போதான் பந்தைய தூரத்தை வேகமாக கடக்க முடியும். ஒரு ரேக்ளா வண்டி 80,000 ரூபாயில இருந்து கிடைக்குது. பந்தயக் காளைகள் சுமார் 4-12 லட்சங்கள் வரை இருக்கு. காளைகள் திடமா இருக்க தினமும் பருத்திக் கொட்டை, கோதுமைத் தவிடு, பேரிச்சம்பழம், பீட்ரூட், முள்ளங்கி இதெல்லாம் உணவாகக் கொடுப்போம். ரேக்ளா ரேஸ்ங்குறது, தமிழ்நாடு முழுவதும் காலங்காலமா பரவலா எல்லா இடங்கள்லயும் நடந்துட்டு தான் இருந்துச்சு. ஆனா இப்ப முன்னமாதிரி அனுமதி கொடுக்க மாட்டேங்குறாங்க' என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

அங்கு வந்திருந்த பொள்ளாச்சியைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் வடிவேலுவிடம் பேசியபோது, "இந்த திருமூர்த்தி மலைக்கு என்று ஒரு சிறப்பு உண்டு என்றால், அது ரேக்ளாவாகத்தான் இருக்கும். அமர லிங்கேஸ்வரர் அருள் பாலிக்கும் அமைதி நிறைந்த திருமூர்த்திமலையில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மாசி அமாவாசை ஆகிய நாட்கள் தான் ரேக்ளா பிரியர்களுக்கான நாட்கள். பொள்ளாச்சி, கோயமுத்தூர் மற்றும் கேரளாவில் இருந்து மொத்தமாக  2000 வண்டிகளுக்கு மேல் கட்டாயம் வந்து விடும். இப்போது ரேஸ்களுக்கு அனுமதி கொடுக்காமல் இருந்தாலும், பழக்கத்தை விட முடியாமல் அனைவரும்  வருகை தந்து ஒருநாள் இரவை இங்கே தங்கிக் கழித்து விட்டுச் செல்வோம். அதனால், எங்களுக்கு நல்ல விதமாய் சொத்து, சுகங்கள் அமையும் என்ற நம்பிக்கை. ஐந்து வயது பொடுசுகள் முதல் பல்லுப் போன கிழவன் வரை அனைவரும் அவரவர் வண்டியுடன் காத்திருப்பார்கள். திருமூர்த்திமலை அல்லாது திருவத்துப்பள்ளி, வாழத்தோட்டத்து அய்யன் கோயில், நல்லட்டிவளையம் நஞ்சுண்டீஸ்வரர் கோயில் ஆகிய இடங்களிலும் ரேக்ளாவுக்காக வருவார்கள். பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்தே இந்த ரேஸிற்கு வருவது வழக்கம். எங்க அப்பாவைத் தொடர்ந்து நான் வருகிறேன். என்னைத் தொடர்ந்து என் பிள்ளை வருவான். காளை மாடுகளை நாங்கள் குழந்தைகளாத்தான் நினைக்கறோம். விவசாயிகளுக்கு மாடுகளே தெய்வம். நாங்க சுத்தமா இல்லைன்னாலும், சோப்பு, ஷாம்பு எல்லாம் போட்டு மாட்டைச் சுத்தமா வைச்சுக்கறோம்.

இந்தப் பந்தயத்தால் எங்களுக்கு எந்த லாபமும் கிடைக்கப்போறதில்லை. இது எங்களுடைய ஆர்வம், பிரியம், பாரம்பரியம்.  மாட்டின் வலு, திறமை ஆகியவற்றைக் கண்டறிவதற்காகத்தான் இந்த விளையாட்டு. பேரும், புகழுமே இதனால் எங்களுக்குக் கிடைக்கும் பெரும் சொத்து. ஆனால் ரேஸுக்கு அனுமதி மறுத்தது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. இதை இப்படியே தடை செய்ததால் மாடுகளின் எண்ணிக்கை குறைந்து, அழிந்துவிடும். அடுத்த வருடமாவது, ரேஸ் மேல் இருக்கும் தடை நீங்க வேண்டும். நீங்கும் என்ற நம்பிக்கையிலே இங்கு வந்திருக்கிறோம். இரவு முழுவதும் இங்கு தங்கிவிட்டு மனமில்லாமல் திரும்பிச் செல்கிறோம்' என்று தங்கள் வருத்தத்தைத் தெரிவித்தனர்.

- செ.சங்கீதா (மாணவப் பத்திரிக்கையாளர்)

அடுத்த கட்டுரைக்கு