Published:Updated:

உயிரிழந்தார் நவீனா..! நாம் விழித்தெழுவது எப்போது?

உயிரிழந்தார் நவீனா..! நாம் விழித்தெழுவது எப்போது?
உயிரிழந்தார் நவீனா..! நாம் விழித்தெழுவது எப்போது?

உயிரிழந்தார் நவீனா..! நாம் விழித்தெழுவது எப்போது?

ன்னுமொரு அப்பாவிப் பெண்ணை அநியாயமாகப் பலி கொடுத்திருக்கிறோம்!  

ஒருதலைக் காதல் விவகாரத்தால் தீக்குளித்த வாலிபர், கட்டிப்பிடித்ததால் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நவீனா நேற்று(செவ்வாய்) இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

விழுப்புரம்-மாம்பழப்பட்டு சாலை வ.பாளையத்தை சேர்ந்த விவசாயக் கூலி அங்கப்பனின் மகள் நவீனா. சென்ற வருடம் +2 படித்துக் கொண்டிருந்த இவர், பள்ளிக்குத் தனியார் பேருந்தில் சென்று வருவது வழக்கம். அப்போது, அந்தப் பேருந்தில் ஓட்டுநராக இருந்த இந்திரா நகரைச் சேர்ந்த செந்தில், நவீனாவை ஒருதலையாகக் காதலித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் செந்திலின் காதல் குறித்த பேச்சுக்கள் தொல்லையாக மாறவே, அவர் மீது விழுப்புரம் மேற்கு காவல்நிலையத்தில் தனது பெற்றோர்களுடன் சென்று நவீனா புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறை கைது செய்ய, பின்னர் ஜாமீனில் வெளி வந்திருக்கிறார் செந்தில். ஆனால் அதன் பிறகும் நவீனாவிற்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் +2 விற்கு மேல் படிப்பை தொடராமல் பாதியிலேயே நிறுத்தினார் நவீனா.

இந்நிலையில், ஒரு காலும் ஒரு கையும் துண்டிக்கப்பட்ட நிலையில் மாம்பழப்பட்டு ரயில்வே கேட் அருகே கிடந்த செந்தில் மருத்துவமனையில் பெற்ற ஒரு மாத சிகிச்சைக்குப் பின், விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் கடந்தாண்டு ஜூலை 3-ம் தேதி புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், நவீனாவின் பெற்றோர் தூண்டுதலின் பேரில் தான் தன் கை, கால்களை  யாரோ வெட்டி, ரயில் பாதையில் வீசி விட்டுச் சென்றதாகத்  தெரிவித்திருந்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், அப்போது அ.மார்க்ஸ், கோ.சுகுமாறன் உள்ளிட்ட உண்மை கண்டறியும் குழு ஆய்வு செய்து, செந்திலுக்கு ரயில் விபத்தில் தான் கை,கால்கள் துண்டிக்கப்பட்டது என்றும், மருத்துவமனை அறிக்கைகளும் அதனை உறுதிப்படுத்துகின்றன என்று அறிக்கை வெளியிட்டனர்.

இதனை அப்படியே எடுத்துக் கொண்ட காவல்துறையும் செந்தில் அளித்த புகாரை ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில், கடந்த 29-ம் தேதி நவீனாவின் வீட்டிற்கு பெட்ரோல் கேனுடன் சென்ற செந்தில், பெட்ரோலை தன்மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டு அங்கிருந்த நவீனாவை கட்டிப் பிடித்துக் கொண்டதால் அவரும் சேர்ந்து தீயில் கருகினார். அப்போது அங்கிருந்த நவீனாவின் தம்பி மற்றும் தங்கை இதைத் தடுக்க முயற்சிக்கும் போது அவர்களுக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அலறல் சத்தம் கேட்டு வந்த அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிறிது நேரத்திலேயே செந்தில் இறந்து விட, 80% தீக்காயங்களுடன் மிகவும் ஆபத்தான நிலையில் நவீனா புதுச்சேரி ஜிப்மர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர், இப்போது சிகிச்சை பலனின்றி உயிர் இழந்திருக்கிறார். 

இந்த சம்பவம் பற்றி செய்தி வெளியானது முதல், அதற்கு சாதிச் சாயம் பூசும் பணிகளில் பல தரப்பும் ஈடுபட்டனவே தவிர, பிரச்னையைத் தீர்க்கவோ, நவீனாவுக்கு பாதுகாப்பளிக்கவோ ஆக்கப்பூர்வமான முயற்சிகளை எவரும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. உண்மை எதுவென்று விசாரிக்காமலேயே சாதி ரீதியிலான போராட்டங்களை முன்னெடுத்த சில அமைப்புகள், உண்மை என்னவென்று தெரிந்து கொண்டபிறகு குறைந்தபட்சம் அதைப்பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தால், ஒரு வேளை காவல்துறை அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கவாவது உதவியிருக்கும். சில அமைப்புகள் அவருக்கு ஆதரவாகப் போராட்டத்தில் குதித்ததுதான் நவீனாவின் இறப்புக்கு இன்று காரணமாக இருக்கிறது என்பது சமூக ஆர்வலர்களின் ஆதங்கமாக இருக்கிறது. 

ஒட்டுமொத்த சமுதாயமே ஒருமித்தக்  குரலில் கண்டித்திருக்க வேண்டிய இந்தச் சம்பவம், சாதிய ரீதியில் பயணித்து நவீனாவின் மரணத்தில் முடிந்திருப்பதுதான் வேதனையின் உச்சம்!

- ஜெ.முருகன்

படங்கள்: தே.சிலம்பரசன்

அடுத்த கட்டுரைக்கு