Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாட்ஸ் அப்ல வாசமெல்லாம் வராதும்மா! #வாட்ஸ் அப் அட்ராசிடிஸ்

'டேய் சுரேசு... அமெரிக்கால யாரோ நாசாவாமே.. நம்ம ஊர் மீனாட்சி அம்மன் கோவில்தான் உலகத்துலயே பழைய கோவில்னு சொல்லியிருக்கானாமே’ - பாக்கு வெத்தலை கேட்ட பாட்டிங்க எல்லாம், இப்ப ஃபேக்ட்ஸ் பத்திதான் கேட்கிறாங்க. இதெல்லாம் உனக்கு யாரு பாட்டி சொன்னாங்கன்னா, 4000 ரூபாய் ஆண்ட்ராய்டு மொபைலை வெட்கப்பட்டுக்கிட்டே எடுத்துக் காட்றாங்க. தாத்தா வாங்கி தந்திருப்பாரு போல. பேரன் கலெக்ட்ராவே இருந்தாலும், பாட்டிக்கு 'வாட்ஸ் அப்' சொல்றதுதான் சரி. அந்தளவிற்கு வாட்ஸ் அப் நம்ம வாழ்க்கைல பட்டா போட்டிருக்கு.

அந்த மனுஷன் பிரையன் எந்தநேரத்தில் இந்த ஆப்பை கண்டுபிடிச்சாரோ, முக்கால்வாசிப் பேரோட வாழ்க்கைல இப்போலாம் ‘சனி’க்கு பதிலா ஆணியடிச்சு விளையாடறதே இந்த வாட்ஸ் அப் தான் பாஸ். இந்தப் பிரச்னைகளோட ஸ்டார்டிங்க் பாயிண்ட்டே...பசங்க பொண்ணுங்ககிட்ட கேட்கிற அந்த ஒத்த கேள்விதான்.  ‘நீங்க வாட்ஸ் அப்ல இருக்கீங்களா?’

வாட்ஸ் அப்பில் இல்லாதவங்க கூட, ‘ஹையோ நீங்களா..அதுவும் என்கிட்ட...வாட்ஸ் அப்...சாட்..’ என்று இதயம் துடிக்க, கண்ணுல டீ.ஆர். பட செட் மாதிரி கலர்கலராய் பல்பெல்லாம் எரிய ‘ஓ இருக்கேங்க.. இந்தாங்க நம்பர்’ என்று கொடுத்துட்டு உடனடியா டவுன்லோட் பண்ணி நம்பர் போட்டு ரெஜிஸ்டர் செய்து சாட்டிங் சாகரத்தில் இணைந்துவிடுவார்கள். அவ்வளவுதான்.. பரதேசி பட க்ளைமேக்ஸ் அதர்வா மாதிரி “அய்யோ..அங்கம்மா.. இந்த படுகுழில வந்து விழுந்திட்டியேன்னு” மைண்ட் வாய்ஸ் வந்தாலும் அதை மறைச்சிக்கிட்டு என்ட்ரி கொடுப்பாங்க பாருங்க.

நம்ம காண்டாக்ட் லிஸ்ட்டில் இருக்கற கீரைக்காரக்கா தொடங்கி, பக்கத்து வீட்டு அங்கிள், ஆன்ட்டி வரை ‘ஹே வெல்கம் டூ வாட்ஸ் அப்’, ‘உன் டிபி நைஸோ நைஸ்’ என செகண்ட் ஷோ முடியுற டைமுல கூட மெசேஜ் அனுப்பி சாகடிப்பாங்க. ’ஐம் ஆன் தி வே’ அப்டினு பால்காரரும், ‘சுடச்சுட சாதம் ரெடியானதும் சொல்லி அனுப்பவும்’ என்று பிச்சைக்காரரும், ‘உனக்காகவே பிரெஷ் காய்கறிம்மா...சீக்கிரம் கீழ வந்துரு’ என்று காய்கறிக்காரரும் கூட வாட்ஸ் அப்  வியாபார டெக்னிக்குகள்தான். அட, டாக்டர் கூட வாட்ஸ் அப் பிரிஸ்க்ரிப்ஷனா யூஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாருங்க. சோ சேட்.

ஸ்கூல் பசங்களில் இருந்து, ஆபிஸ் கொலிக்ஸ் வரை எல்லாரும் ஆளாளுக்கு ஒரு வாட்ஸ் அப் குரூப் மெயின்டெயின் பண்றாங்க. அதுல அட்மின், ஓனர்னு அட்ராசிட்டிஸ் வேற. சில சமயம் எந்த குரூப்ல, என்ன மெசேஜ் போட்டோம் அப்டிங்கறதே மறந்து போய் ஊருக்கு வரேன் மம்மினு ஆபிஸ் குரூப்லையும், ’பீவர்’ லீவ் லெட்டரை ஃபேமிலி குரூப்லையும் அனுப்பிட்டு ஹேங் ஆன ஆண்ட்ராய்டா முழிக்கணும்.

அப்ரைசல் பார்மில் இருந்து, அப்பாய்ண்மென்ட் ஆர்டர் வரை இப்போ எல்லாமே வாட்ஸ் அப் குரூப்பில்தான். வேலைல சேர்றதுக்கு முன்னாடியே ஆபிஸ் குரூப்ல சேர்த்த கதையெல்லாம் உண்டு. அதைவிடக் கொடுமை, கொள்கை, கொத்தமல்லிச் சட்னினு வேலைக்காக சின்சியரா வாட்ஸ் அப் பார்த்தாக் கூட, ’என்ன நீ 24 மணி நேரமும் ஆன்லைனில் இருக்க..ஆனா, என்னை கண்டுக்கவே மாட்டேங்குற..உனக்கு நான் முக்கியமில்லைல...” என்று நண்பர்களின் கொலைமிரட்டல் வேற. அட சொன்னா கேளுங்க பாஸ். வாட்ஸ் அப்ல இருக்கிற பாதி க்ரூப்பு ஆபீஸ் க்ரூப்புதான்.

அடுத்தது ஃபேமிலி குரூப்... வேலைக்காக வெளியூரில் ஹாஸ்டலில் வெந்து, நொந்து போய் கிடக்கும்போதுதான், ‘இன்னைக்கு வீட்டில் உனக்கு புடிச்ச வெண்டைக்காய் சாம்பார், கத்திரிக்காய் பொரியல் செஞ்சேன்’னு போட்டோ போடுவாங்க. அதுலயும் அம்மாக்களுக்கு நக்கல் அதிகம். “வாசனை வருதா கண்ணு”ன்னு எக்ஸ்ட்ரா கேள்வி வேற. மழையில் நனைஞ்சது முதல், மத்தியானம் பார்த்த நூன் ஷோ வரை போட்டோ அனுப்பி காதில் புகைவர வைப்பதே அண்ணன், அக்காக்களோட சீரிய நோக்கம். அந்தப் பாவப்பட்ட அப்பா இருக்காரே.. கட்டம் போட்ட சட்டையை போட்டு “ஹவ் இஸ் இட்”ன்னு தினமும் கேட்பாரு. ’மகள்களை பெற்ற அப்பாக்களிடம் கட்டம் போட்ட போட்ட சட்டை மட்டும்தான் இருக்கு’னு ஸ்டேட்டஸ்லாம் வச்சிருந்தாங்க பாசக்கார பொண்ணுங்க.

ஃபிரண்ட்ஸ் க்ரூப்புதான் ஆப்பு வைக்கிறதுல டாப்பு. ‘இன்னைக்கு சந்தியாக்கு கல்யாணம், சபரீஷ்க்கு என்கேஜ்மென்ட்’ என்று கூட்டம், கூட்டமாக போய் கும்மியடித்துவிட்டு குரூப் ‘செல்பி’யைத் தட்டிவிட்டே கொஞ்ச நஞ்சம் ஒட்டி இருக்கும் குதூகலத்தலயும் குண்டு வைப்பாங்க.  இதுல ‘#SelfieWithMarriageBiriyani’ ஹேஷ்டேக் வேற. சாயங்காலம் ஆனா போதும். கை நடுங்குற குடிகாரன் மாதிரி வாட்ஸ் அப்பும் வைப்ரேஷன் மோடுக்கு போயிடும். டாஸ்மாக் க்ரூப்பு மட்டும்தான் இன்னும் ஆரம்பிக்கலன்னு நினைக்கிறேன். யார் கண்டா?

‘கர்ண கொடூர காய்ச்சல் அடிக்குது’ என்று லீவ் போட்டுட்டு, ஹாயாக படத்துக்கு போயிட்டு, வழக்கம்போல வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் ’படம் அட்டகாசம் பாஸ்..சான்ஸே இல்ல’ னு வச்சிடுவோம். 108 டிகிரி வைரஸ் பீவரையே, வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் போடும் ‘வைரல்’ பீவரில் மறந்துபோய் போடுபவர்கள் மறுநாள் ஆபிஸ் சீட்டையும் அப்படியே மறந்துவிட வேண்டியதுதான்.

இந்த குரூப்பெல்லாம் தாண்டி ஊர், பேரே தெரியாத குரூப்பில்லெல்லாம் ‘என் பிரெண்டோட பிரெண்டோட பிரெண்டுக்கு பிரெண்ட்’ என்ற கணக்கில் நம்மளையும் சேத்திடுவாங்க. ஒரு ஆன்ட்டிகிட்ட எத்தனை புடவைன்னு கேட்டா கூட சொல்வாங்க. அதையே ஒரு பையன்கிட்ட எத்தனை வாட்ஸ் அப் க்ரூப்புல இருக்கன்னு கேட்டுப் பாருங்க.. 2ஜி நெட்டுல லோடிங் ஆன பிரவுசராட்டம் முழிப்பான். குரூப்பில் வந்த மெசேஜை விட, அந்த குரூப் மெம்பர்கள் தனித்தனியாக நமக்கும் அனுப்பும் மெசேஜ் டெரா பைட்டை தாண்டும். யாருக்கெல்லாம் நம்பர் கொடுக்கக் கூடாது என்று நினைப்போமா, வாட்ஸ் அப் குரூப்கள் புண்ணியத்தில் அந்த பிரகஸ்பதிகளுக்கெல்லாம் கரெக்டாக நம்ம நம்பர் போய் சேர்ந்திடும்.

முக்கியமா இந்த குரூப் சிஸ்டம் அதிகமா யூஸ்புல் ஆகறதே குடும்பத் தலைவிகளுக்குத்தான். ஒருகாலத்தில் கூட்டம் கூட்டமா லேடிஸ் கிளப், பியூட்டி காம்படிஷன் அப்டினுலாம் போன பெண்கள் இப்போலாம் எல்லாத்தையும் வாட்ஸ் அப் குரூப்லையே முடிச்சுக்குறாங்க. ‘பர்ஸ்ட் ப்ளோர் லேடிஸ் கிளப்’ குரூப் தொடங்கி, ‘அப்பார்மெண்ட் லேடிஸ் அட்டகாசம்’ என்றெல்லாம் பெயரிலேயே கலக்கலாக குரூப்களை ஆரம்பித்துவிடுகின்றார்கள்.

‘லாஸ்ட் சீன்’ என்னும் ஒரு வார்த்தையில் உலகமே ரணகளமாய் மாறிப்போன காதலர்களும், கணவன்மார்களும் ஏராளம். ‘நான் தூங்கப் போறேன்’ என்று சொல்லிவிட்டு, 3 மணிக்கு லாஸ்ட் சீன் வந்தால் அவ்ளோதான். மறுநாள் பராசக்தி முதல் பத்ரகாளி வரை எல்லா படமும் வீட்டிலேயே ஃப்ரீயாக பார்க்கலாம். இந்த நூற்றாண்டுல மோசமான கெட்ட வார்த்தை லிஸ்ட்டுல “லாஸ்ட் சீன்”னை சேர்த்தே ஆகணும்.

மனைவி ஊருக்கு போயிருக்கும் சமயத்தில் வீட்டை சுத்தமாக வச்சுருந்தேன்மா...ஜஸ்ட் இப்போதான் குப்பையாச்சுன்னு ஜகா வாங்கலாம் முடியாது. 10 நாள் ஊருக்கு போனா, மனைவிக்கு அந்த 10 நாளும் வீட்டின் போட்டோஸ் போய்ச் சேர்ந்தே ஆக வேண்டும். ஒரே ஒரு பெனிஃபிட்...முன்னாடியெல்லாம் ‘முத்தின வெண்டைக்காய், முருங்கைக்காய் வாங்கிட்டு வந்துட்டீங்க’ என்ற பாட்டு கேட்காமல், காய்கறி கடையில் இருந்து லைவ் போட்டோ அனுப்பியே பல கணவன்மார்கள் வாழ்க்கையையும் கூடவே மத்தியான சாப்பாட்டையும் காப்பாற்றிக் கொள்கிறார்கள் வாட்ஸ் அப்பால். சில சமயம், வாட்ஸ் அப் நல்லது.

வாட்ஸ் அப்ல இருக்கிற ’பிராட்காஸ்ட் குரூப்’ வசதியால ஊறுகாய், புடவை தொடங்கி பருப்புப் பொடி, பால்பாயசம் வரை விற்பனையெல்லாம் ஹாட் ஹிட். ’இந்தப் புடவையயோட முந்தானையை கொஞ்சம் விரிச்சு போட்டோ எடுத்து அனுப்புங்க’ என்று அங்கயும் சேல்ஸ்மேன்கள் நிலைமை.. ரொம்ப்ப..பாவம் பாஸ்.

முன்னாடியெல்லாம் கல்யாணத்துக்கு ஜாதகம் அனுப்பவோ, மாப்பிள்ளை, பொண்ணு போட்டோ அனுப்பவோ லெட்டரோ, மெயிலோ தேவை. இப்போ பொண்ணோட அப்பாவும், மாப்பிள்ளையோட அப்பாவும் ‘உங்க வாட்ஸ் அப் பாருங்க...போட்டோ அனுப்பிட்டேன்...ஜாதகமும் ஸ்கீரின் ஷாட் எடுத்து அனுப்பிடறேன்’ என்று வேற்றுகிரக ஏலியன்கள் கணக்காகவே பேசிக் கொள்கிறார்கள். அட, கல்யாணம் முடிவானா வாழை மரம் கட்றாங்களோ இல்லையோ ஒரு வாட்ஸப் குரூப்ப தொடங்கிடுறாங்க.

கல்யாணத்துக்கு ஒரு குரூப், பந்திக்கு ஒரு குரூப், மாப்பிள்ளை வீடு குரூப், பொண்ணு வீடு குரூப்,  பிறந்தநாளுக்கு ஒரு குரூப், சீமந்ததுக்கு ஒரு குரூப், குழந்தைக்கு பேர் செலக்ட் பண்ண ஒரு குரூப், மாமியார் குரூப், மருமகள்ஸ் குரூப், டாக்டர் குரூப், வக்கீல் குரூப் ஏன் டைவர்ஸ் குரூப் வரை இப்போ எல்லாமே வாட்ஸ் அப் ‘குரூப்’மயம். நல்லவேளை...பசங்க ‘காதலிகள் குரூப்’ அப்படினு ஆரம்பிச்சு இதுவரை அதிரிபுதிரியா அடிவாங்கினதில்லை அப்டிங்கற தகவல்தான் லைட்டா நிம்மதி தருது.

‘27வது தெரு, துபாய் குறுக்குச்சந்தில் டபுள் பெட்ரூம் வீடு காலி’என்று வாடகைவீடு புரோக்கர்கள் கூட இப்போதெல்லாம் பைசா செலவில்லாமல் முழு வீட்டையும் வாட்ஸ் அப் சாட்டிலேயே கண்ணில் காட்டி விடுகின்றார்கள். அலைச்சலாவது மிச்சம்...வாழ்க வாட்ஸ் அப்!

அதிலும் இந்த ஸ்மைலிஸ்...அப்பப்பா! பழிப்புக் காட்டுவது, முத்தம், ஹார்ட்டின் விடுவது, கோவம், அழுகை எல்லாமே எமோஜிகளில்தான். ‘நான் அவசரமா ஆபிஸ் போறேன்...உனக்கான முத்தத்தை வாட்ஸ் அப்ல அனுப்பியிருக்கேன்’ என்பதுதான் கணவன், மனைவிகள் இடையே லேட்டஸ்ட் டிரெண்ட் இப்போ. அதுவும் இந்த ஓகே ஸ்மைலி போட்டே ஓங்கி அறையலாம் என்று தோன்ற வைப்பவர்கள் லிஸ்ட் சீனப் பெருஞ்சுவர் அளவுக்கு பெருசு. ’அப்டியே என் அஞ்சு நாள் அழுக்கு சாக்ஸையும், ஜீன்ஸையும் வாட்ஸ்-அப்லேயே வாஷிங்மெஷினுக்கு அனுப்பி வைக்கற வசதி இருந்தா நல்லாருக்கும்’ - இது பேச்சுலர்களின் மைண்ட் வாய்ஸ்!

வாட்ஸ் அப்பில் எக்கச்சக்கமாய் போட்டோஸ். வீடியோஸ் குவியோ, குவியென்று குவிவதால், கொஞ்ச நேரத்திலேயே சார்ஜ் போயி, வாங்கிய கொஞ்ச நாளிலேயே மொத்தமா ஃபோனே போயி, நடுரோட்டில் முக்கியமான ஃபோன்கால் வரும் வேளையில் நிராதரவாய் நிற்கும் பரிதாபகர ஜீவன்கள் இப்போதெல்லாம் சர்வசாதாரணம்.

அதிலும் ‘வாட்ஸ் அப் ஆடியோ’, ‘வாட்ஸ் அப்வீடியோ’ என்ற பெயரில் பலபேரின் அந்தரங்க விஷயங்கள் கூட அதிவிரைவு ரயில் வேகத்திற்கு அத்தனை பேரிடமும் சென்று சேர்வதால் ‘உங்களை எங்கையோ பார்த்திருக்கேனே...ஓ வாட்ஸ் அப் வீடியோலையா..’ என்று  துக்கம் விசாரிப்பதுபோல் கேள்வி கேட்கும் அளவிற்கு பல பிரபலங்களின் வாழ்க்கையைத் தொங்கலில் விட்ட பெருமை வாட்ஸ் அப்புக்கே.

மூணு நாள் லீவு போட்டோமா...மூணாறை சுத்திப் பார்த்தோமா என்பதெல்லாம் இப்போது கிடையவே கிடையாது...அங்க போயும் குடும்பத்தோட செல்பி எடுத்து குரூப்பில் போடுவதுதான் முதல் வேலை... ’நாம ரசிக்கறதைவிட நம்மளை மத்தவங்க ரசிக்கணும்’ என்று என் கடன் பணி செய்து கிடப்பதாக அதற்கொரு தத்துவ விளக்கம் வேறு...

இதில் டாக்குமெண்ட் அனுப்பும் வசதி, பிடிஎப் அனுப்பும் வசதி என்றெல்லாம் ஏதேதோ வசதிகள் இருக்காம். சொல்லமுடியாது. இனிமேல் வத்தக்குழம்பு, வறுவலைக் கூட அமெரிக்காவுக்கே வாட்ஸ் அப் மூலமா அனுப்புற வசதி கூட வந்தாலும் வரலாம் சொல்றதுக்கில்லை. யாருக்கு தெரியும்? இந்தக் கட்டுரையை உங்களுக்கு யாராவது வாட்ஸ் அப்ல அனுப்பி, அத கூட நீங்க இப்ப படிச்சிட்டிருக்கலாம்.

- கார்க்கிபவா, பா.விஜயலட்சுமி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement