Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'மதுரை மேயர்' ஹைடன்! - 'கிலி' கொடுத்த கிரிக்கெட் புலி

மிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியை தமிழக மக்களிடம் அறிமுகப்படுத்த விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன், மதுரையை குலுங்க வைத்துவிட்டு சென்றிருக்கிறார். அலுவல் ரீதியான தன் முதல் பயணத்திற்காக மதுரையை தேர்ந்தெடுத்த அவரை வரவேற்க மதுரை கிரிக்கெட் சங்கங்களை சேர்ந்தவர்களும், மதுரை மக்களும் விமான நிலையத்தில் காலைமுதல் காத்திருந்து வரவேற்றார்கள்.

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தமிழரின் பண்பாட்டு உடையான பட்டு வேட்டி, பட்டு சட்டையுடன் வந்தவரைப் பார்த்து சிலர் சினிமா படப்படிப்பு நடப்பதாக பேசிக்கொண்டனர். கோயிலில் தடபுடல் மரியாதை, வரவேற்பை பார்த்து அவரே கொஞ்சம் ஜெர்க்காகி போனார். கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு வந்தவர் யாரென்று தெரியவில்லை, வேட்டி கட்டிய வெள்ளைக்காரர் என்பது மட்டும் தெரிந்து அவரை கவுரவிக்கும் விதமாக செல்பி எடுத்துக்கொண்டனர்.

கோயிலில் அமைந்திருக்கும் முக்குறுணி விநாயகரை வணங்க அழைத்து சென்றார்கள். ‘’வாவ் ஃபென்டாஸ்டிக்’’ என்று விநாயகரை பார்த்து வியந்தவர், பக்தியில் நம்மவர்களை  மிஞ்சும் வகையில் கண்களை மூடி வணங்கினார்.

கோயில் அர்ச்சகர்கள் அவர் நெற்றியில் விபூதி பூசிவிட, குஷியானார் ஹைடன். கோயிலின் ஒவ்வொரு பிரகாரமாக சென்று அங்கிருக்கும் சிலைகளையும், ஓவியங்களையும் வியப்புடன் பார்த்தவர், ஆயிரங்கால் மண்டபத்தை ரொம்ப நேரம் சுற்றிப் பார்த்தார். அவருக்கு விளக்கம் அளிப்பதற்காக மதுரையின் பிரபல கைடு செல்லக்கண்ணுவை அமர்த்தியிருந்தனர். 

அடுத்து அங்கிருந்து கிளம்பி மதுரை மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷனுக்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதற்குள் மதிய உணவு நேரம் நெருங்கி விட்டதால், அவரை தல்லாகுளம் சந்திரன் மெஸ்ஸுக்கு அழைத்து வந்தார்கள். தமிழ்நாட்டில் மதுரை சாப்பாட்டிற்கு பெயர் பெற்ற நகரம் என  என்று உடன் வந்தவர்கள் அவரிடம் சொல்ல, அவ்வளவுதான், சீரக சம்பா மட்டன் பிரியாணி, மெஜூரா சிக்கன், வவ்வால் மீன் பொறியல்  என்று ருசி பார்த்தார், எந்தவொரு சங்கடமும் இல்லாமல் ஸ்பூன் பயன்படுத்தாமல் வாழை இலையில் கைகளால் சாப்பிட்டார்.

அடுத்து சிறிது நேரம் ஓய்வுக்குப்பின் மாலை 4 மணிக்கு விரகனூர் வேலம்மாள் பொறியியல் கல்லூரிக்கு சென்றார். அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

‘’அப்பா விவசாயி, அம்மா இசைக் கலைஞர், அவர்கள்தான் என்னை கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாட ஊக்குவித்தார்கள். என் வாழ்நாளில் இருபது சதவீத நேரத்தை கிரிக்கெட்டுக்காக செலவிட்டுள்ளேன். இனி என் குடும்பத்துக்கு செலவிடுவேன். மாணவர்கள் வாழ்க்கையில் நேர்மையாக செயல்பட்டாலே முன்னுக்கு வந்துவிடலாம். இந்திய பண்பாடு என்னை மிகவும் கவர்ந்துள்ளது. இன்று உலகம் ஒரு குடையின் கீழ் வந்து விட்டதால் எல்லா நாடுகளுக்கும் எளிதாக சென்று வர முடிகிறது. இந்தியாவில் எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி’’ என்று இயல்பான அவரது பேச்சைக் கெட்டு மாணவர்கள் உற்சாக குரல் எழுப்பினார்கள்.

அடுத்த நிகழ்ச்சி, தியாகராயர் கல்லூரியில் நடந்த மாணவர் சந்திப்பு. அதை தொடர்ந்து மக்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி சொக்கிக்குளம் விஷால் டி மாலில் நடந்தது. பொதுமக்களும், கல்லூரி மாணவர்களும் ஹைடனை பார்க்கும் ஆவலில் குழுமியிருந்தனர். மக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த ஹைடன், தனக்கு பிடித்த தமிழ் வார்த்தை 'மகிழ்ச்சி' என்று கூறினார். அப்போது இளசுகள், கபாலிடா என்று கோஷமிட்டார்கள். மேலும் அவர் பேசும்போது, இப்பொழுது உலக அளவில் தன்னை ஈர்த்த கிரிக்கெட் வீரர் வீராட் கோலி எனவும், இந்திய அணியின் கேப்டன் டோனியின் தலைமைத்துவம் சிறப்பாக உள்ளதாக கூறினார்.

இந்தியாவை தான் மிகவும் நேசிப்பதாவும், இங்குள்ள காரமான உணவு வகைகள் தன் மனதை கொள்ளை கொண்டதாகவும், தன் நாட்டில் சச்சின், டிராவிட், கங்குலி, கோலி, டோனி போன்ற வீர்ர்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளதாகவும் கூறினார். பின்னர் மக்களுடன் போட்டோக்கள் எடுத்துக்கொண்டார், சலிக்காமல் ஆட்டோகிராப் போட்டார். ரொம்பவும் குஷியான மனநிலையில் அங்கிருந்தவர்களுடன் இணைந்து நடனமும் ஆடினார்.

மதுரை மக்கள் காட்டிய அன்பையும், பாசத்தையும் பார்த்த ஹைடன், 'இந்த மக்களுக்கு அப்படியென்ன செய்து விட்டேன்' என்று மைண்ட் வாய்ஸில் உருகியிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அத்தனை உற்சாக வரவேற்பு அளித்தனர் மதுரை மக்கள் அவருக்கு.

மதுரையில் ஹைடன் உற்சாகமாக வலம் வந்ததை பார்த்து, மதுரை அரசியல்வாதிகள், வருகிற உள்ளாட்சித் தேர்தலில் ஹைடன் மதுரை மேயர் தேர்தலில் நின்று வென்றுவிடுவாரோ என்ற பயத்திற்கு உள்ளாகியிருப்பார்கள். அந்தளவுக்கு எங்கு பார்த்தாலும் ஹைடன், ஹைடன், ஹைடன் என்ற பெயர்தான் ஒலித்துக் கோண்டிருக்கிறது.

- செ.சல்மான், விக்னேஷ்வரன் (மாணவப் பத்திரிகையாளர்)
படங்கள்: ஈ.ஜெ. நந்தகுமார். வீ.சதீஷ்குமார்


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement