Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அடுத்த தலைமுறையைக் கட்டிப்போடும் ஃபேஸ்புக்!

ஒரு நிறுவனத்தின் மிகவும் முக்கியமான ஒரு விஷயம், அடுத்த பத்தாண்டுகளில் நாம் எங்கு இருக்க வேண்டும் என் தீர்மானிப்பதும், அதை நோக்கி பயணிப்பதுமே ஆகும். மக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ஆர்குட், தற்போது இணையவெளியில் இல்லை. அதன் நிறுவனர் புதிதாக ஓர் அப்ளிகேஷனை வெளியிட்டு, அதை சந்தைப்படுத்துவதில் தீர்வம் காட்டி வருகிறார். ஆனால், 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஃபேஸ்புக் தொலைநோக்குப் பார்வையில் அசத்தி வருகிறது. 32 வயதான அதன் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், தற்போது வரை 50 நிறுவனங்களை வாங்கி இருக்கிறார். வாட்ஸ் -அப், அக்குலஸ் , இன்ஸ்டாகிராம் என  ஃபேஸ்புக்கின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் ஏராளம். அடுத்த பத்து ஆண்டுகளில் , செயற்கோள், ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி, விர்ச்சுவல் ரியாலிட்டி, போன்றவற்றில் சாதிக்க வேண்டும் என்பது ஃபேஸ்புக்கின் திட்டம். அதற்கான பணிகளில் தற்போதே இறங்கியிருக்கிறார்கள்.  

ஃபேஸ்புக்கின் புதிய ஹார்ட்வேர் தொழிற்சாலை "ஏரியா 404" அதன் கலிபோர்னியா தலைமையகமான மென்லோ பார்க்கில் ஆகஸ்ட் 2, செவ்வாய்க்கிழமை  திறக்கப்பட்டுள்ளது.  கடந்த 2015 ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் 6 பில்லியன் டாலர் மதிப்புள்ள விளம்பரங்களை பேஸ்புக் விற்றது. இதன் மூலம் 2 பில்லியன் டாலர்களை லாபம் ஈட்டியது. இதனால் மகிழ்ச்சியடைந்த அதிபர் மார்க் சக்கர்பெர்க் புதிய ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க நினைத்தார். அதன் விளைவாக உருவாக்கப் பட்டது தான் இந்தத் தொழிற்சாலை. 2015ல் மட்டும் பேஸ்புக் மின்னணு சாதனங்கள் ஆராய்ச்சிக்காக 4.8 பில்லியன் டாலர்கள் செலவளித்துள்ளது. இது போன ஆண்டைவிட இருமடங்காகும். கட்டுமானப் பொறியாளர் மிக்கால் கிரேவ்ஸ் தலைமையில் இருபத்திரண்டாயிரம் சதுரடி பரப்பளவில் கட்டப்பட்ட இத்தொழிற்சாலை 9 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டது. இங்கே உள்ள 10000எக்ஸ் ஜூம் செய்யக்கூடிய மைக்ராஸ்கோப், ஹார்டுவேர் சாதனங்களின் நுண்ணிய பாகங்களை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. நாம், ஏதோ ஒரு வலைதளத்தை தேடும்போது, சர்வரை தொடர்பு கொள்வதில் பிரச்னை இருந்தால்,  404 not found error என டிஸ்பிளே ஆகும். இதையே, தனது தொழிற்சாலைக்கு பெயராக வைத்து இருக்கிறார் மார்க்.

வெர்ச்சுவல் ரியாலிட்டி லேசர் என சொல்லப்படும் காற்றில் மிதக்கும் முப்பரிணாமத் திரை,  கேம் விளையாடப் பயன்படுத்தப்படும் வெர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட் போன்கள், அடுத்த தலைமுறை சர்வர்கள் மற்றும் எலெக்ட்ரானிக் கேட்ஜெட்டுகள் தயாரிக்கும் இடமாக இவ்விடம் அமைந்துள்ளது. வர்த்தகம், பொழுதுபோக்கு, தகவல் தொழில்நுட்பம், விளம்பரம் முதலிய துறைகளில் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு இந்தத் தொழிற்சாலை உருவாக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக்கின் தலைமை பொறியாளர்  ஜே பரிக் தெரிவித்தார். கனரக எலெக்ட்ரானிக் சாதனங்கள் பயன்படுத்தப்படும் இந்தத் தொழிற்சாலையில்,ஹார்ட்வர் இன்ஜினியர்களுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகள் வழங்குகிறது. 2012ல் துவக்கப்பட்ட அக்குலஸ் வெர்சுவல் ரியாலிட்டி நிறுவனம் தயாரித்த முப்பரிணாம ரிப்ட், கேமர்கள் மத்தியில் வைரலானது. இந்த ரிப்ட் மூலம் கேம் விளையாடுபவர் 180 டிகிரி வரை பார்த்து, துல்லிய ஒலியை உணரமுடியும். சுற்றுச் சூழலை மறந்து கேமுக்குளேயே செல்வது போன்ற  மாயையை உருவாக்கும் இந்தத் தொழில் நுட்பத்தின் மூலம் அக்குலஸ் நிறுவனம் உலகப்புகழ் பெற்றது.

குறுகிய காலத்தில் அக்குலஸ் நிறுவனத்தின் அசுர வளர்ச்சியைக் கண்ட சாம்சங், தனது கேலக்சி நோட் வகை ஸ்மார்ட்போன்களுக்கு வி ஆர் ஹெட்போன்கள் தயாரிக்க அக்குலஸூடன் ஒப்பந்தமிட்டது. இதனைக் கண்ட ஃபேஸ்புக் அதிபர் மார்க் சக்கர்பெர்க் வாட்ஸ் அப்பைத் தொடர்ந்து அக்குலஸ் நிறுவனத்தை வாங்கினார். மிகுந்த சந்தோஷத்தில் திளைத்திருக்கும் மார்க் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறுகையில், ‘அக்குலஸ் ரிப்ட் வகை ஹெட்போன்கள் தொழில்நுட்பத்தில் முன்னோடியாகத் திகழ்கிறது. ஃபேஸ்புக் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் நேசிக்கும் தருணங்களை லைக், ஷேர் செய்வது போல எதிர்காலத்தில் அக்குலஸ் நிறுவனத்தின் உதவியுடன் ஃபேஸ்புக்கின் மொமெண்ட்ஸ் சேவை அடுத்தகட்டத்தை நோக்கி செல்லும் என நம்புகிறேன். இதன்முலம் நீங்கள் நேசிப்பவர்கள் உங்கள் அருகிலேயே இருப்பது போன்ற உணர்வை உங்களுக்கு அளிக்க முடியும். அதற்கான ஆராய்ச்சி எங்கள் தொழிற்கூடத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஒரு காலத்தில் இணையமும், ஸ்மார்ட்போன்களும் கனவாகத்தான் இருந்தன. இன்று அவை உங்கள் விரல் நுனியில் உள்ளன. அதுபோல்  "ஏரியா 404" தொழிற்சாலையில் நாங்கள் தயாரிக்கும் வெர்சுவல் ரியாலிட்டி சாதனங்கள் எதிர்காலத்தில் உலக மக்களின் வாழ்வில் ஒரு பகுதியாகவே மாறிவிடக்கூடும். இதன் மூலம் பேஸ்புக் புதிய பரிணாமத்தை எட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

மைக்ரோசாப்ட்,  அமேசான் மற்றும் கூகுள் முதலியவற்றின் தொழிற்போட்டியை சமாளிக்க பேஸ்புக் அதிபர் மார்க் சக்கர்பெர்க் இந்தத் தொழிற்சாலையை உருவாக்கியுள்ளார். ஹார்ட்வேர் தயாரிப்பு ஃபேஸ்புக்குக்கு புதிதல்ல என்றாலும் இந்தத் தொழிற்சாலை எதிர்கால ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்தில் உள்ளது. மின்னணு சாதனங்கள் மற்றும் சர்க்யூட் வெல்டிங் இங்கு செய்யப் படுவதில்லை. ஹார்ட்வேர் பொருட்களின் மாதிரிகளை உருவாக்குவது. பரிசோதனை செய்வது ஆகிய வேலைகளுக்கு இவ்விடம் பயன்படுத்தப்படுகிறது. மாதிரிகள் எல்லா சோதனைகளிலும் வெற்றிபெற்றபின் விற்பனை ஆர்டர்களை பொறுத்து ஃபேஸ்புக் வளாகத்தின் உள்ளேயே வேறொரு தொழிற்சாலையில் மொத்தமாக தயாரிக்கப்படும். இவை அமேசான் போல ஆன்லைன் சந்தையில் விற்கப்படும். ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களை இங்கு தயாரிக்கப்படும் கேட்ஜெட்ஸ் மூலமாக,  உண்மையான முப்பரிணாம உலகிற்கு அழைத்துச் செல்வதே இதன் நோக்கமாக இருக்கும். 

-விமோ பிரசன்னா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement