Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'சாமைசோறுதான் காரணம்….!'

கேந்திரன் இவரது பெயர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த இவர், ஒரு பி.இ. பட்டதாரி. இவருக்குச் சிறு வயதிலிருந்தே கார்ட்டூன் படங்கள் பார்ப்பது என்றால் உயிர். கல்லூரி படிப்பு முடியும் வரை கூட கார்ட்டூன் படங்கள் பார்த்திருக்கிறாராம்.

தனது இந்த விருப்பத்தால், கல்லூரிப் படிப்பிற்குப் பிறகு 3டி அனிமேஷன் படிக்கச் செல்லலாம் என முடிவெடுத்திருக்கிறார்.

அப்போது, அப்படிப்பிற்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்பட்டதால், அந்த அளவுக்கு செலவு செய்ய முடியாத நிலையில்,  தினமும் நூலகம் சென்று, நூலகத்திலேயே 'மாயா' போன்ற அனிமேஷன் லாங்வேஜை கற்றுத் தேர்ந்திருக்கிறார். பின்னர், ஹைதராபாத்தில் 3டி அனிமேஷன் கம்பெனியில் 4 ஆண்டுகள் பணி செய்திருக்கிறார். மஹதீரா பட அரண்மனை வடிவமைப்பு, ஹாலிவுட் படங்களில் அனிமேஷன் கேரக்டர்கள் எனத் தன் திறமையை முழுதாகப் பயன்படுத்தியிருக்கிறார். அன்றையக் காலகட்டத்தில்  ஹைதராபாத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களாலும், குடும்ப நெருக்கடிகளாலும் சொந்த ஊருக்கே திரும்பினார்.

வீடு திரும்பிய மூன்றாம் நாளே 3டி அனிமேஷன் அகாடமி ஒன்றைத் துவங்கினார். படிப்படியாக இவரது திறமையைக் கண்டு கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் ஆசிரியர் பணிசெய்ய வாய்ப்புக் கிடைத்தது. அதிலும் தனது திறமைகளால் பல பாராட்டுக்களையும் பல நண்பர்களையும் சம்பாதித்திருக்கிறார். இன்று இயற்கை விவசாயத்தில் சாதித்துக் கொண்டிக்கிறார்.

பாரம்பர்ய அரிசி வகைகள், இயற்கையாய் பயிரிடப்பட்ட பழங்கள், காய்கறிகள், சிறுதானியங்கள், மலைத்தேன், இயற்கை உரம் தயாரிப்பு, மண்புழு உரம் தயாரிப்பு, இயற்கை விதைகள் என்று அனைத்தையும் இயற்கையாய் மக்களுக்கு தந்து கொண்டிருக்கிறார். இது மட்டுமல்லாமல் இயற்கை விவசாயத்தைப் பற்றி, விவசாயிகளுக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்.

இவரிடமிருந்து… சிறு உரையாடல்….

3டி அனிமேஷனலிருந்து உங்களின் ஆர்வம் எப்பொழுது விவசாயத்தை நோக்கித் திரும்பியது?

ஒரு நாள் எனது நண்பர்களுடன் மலைவாழ் மக்களைச் சென்று சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்க,  நானும் எனது நண்பர்களும் மூன்று நாட்கள் தங்கினோம். அங்க மலைவாழ் மக்கள், தாங்கள் இயற்கையாய் விளைவித்த உணவுகளையே எங்களுக்கு உணவாகத் தந்தனர். அதில் சாமை சோறுடன் தேன் கலந்து கொடுத்தார்கள். அதனை உண்ணும் போது அவ்வளவு சுவையாக இருந்தது. அந்த எளிய உணவு எனக்கு மிகவும் பிடித்துப் போக, இதனை எப்படி விளைவிக்கிறார்கள், பயிரிட என்னென்ன செய்ய வேண்டும் என்பதைக் கேட்க ஆரம்பித்தேன். 'இயற்கையாகப் பயிர்களை விளைவிக்கவும் அதனை அறுவடை செய்யவும் பராமரிப்புச் செலவு மிகவும் குறைவு. ஆனால், மகசூல் அதிகம் கிடைப்பதனால் இயற்கை விவசாயம் இன்று முன்னிலையில் இருக்கிறது' என்று மகிழ்ச்சியோடு சொன்னார்கள். அன்று தொடங்கியது எனது இயற்கை விவசாயத்தின் மீதான ஆர்வம். 3டி அனிமேசன் வேறு, விவசாயம் வேறு. ஆனால், ஆரோக்கியமான உணவு முறை அனைவருக்குமே பொதுவானது. அப்படிப்பட்ட இயற்கையான, ஆரோக்கியமான உணவை மக்களுக்குத் தரவேண்டுமென்று நினைத்தேன்.

விவசாயத்தை எப்படிக் கற்றுக் கொண்டீர்கள்?

சிறுவயதிலேயே எனக்கு மிகுந்த கியூரியாசிட்டி. கேள்விகள் கேட்டு பலபேரிடம் திட்டு வாங்கியுள்ளேன். ஆனால், பதில்களைத் தெரிந்து கொள்ளாமல் விட்டதில்லை. அந்த ஆர்வம்தான் அனைத்துக்கும் காரணம். அனைத்தையும் கேள்வி கேட்டதால்தான் இன்று விவசாயத்தையும் கற்றுக் கொண்டேன்.

பள்ளியில் ஆசிரியர், பயனாளி, இன்று ஒரு விவசாயி எப்படி உணர்கிறீர்கள்?

ஆசிரியர் பணியும் விவசாயமும் ஒன்றுதான். இரண்டிலுமே நல்ல விதைகளை விதைக்க வேண்டியுள்ளது.  நல்ல விதைகள் மட்டுமே நல்ல பலன் தரும். பயணங்கள் மிகவும் பிடிக்கும். அதிலும் காசில்லாமல்தான் பயணிப்பேன். பசித்தால் அங்கு கிடைப்பதைச் சாப்பிடுவேன். இல்லையென்றால் கடைகளில் இரண்டு மூன்று நாட்களுக்கு வேலை செய்து சாப்பிடுவேன். மிகவும் த்ரில்லாக இருக்கும். ஏதோவொன்றை கற்றுக் கொண்டு வீடு திரும்புவேன்.

உங்களின் இந்த இயற்கை விவசாயம் இப்பொழுது எந்தக் கட்டத்தில் இருக்கிறது?

இன்று பல விவசாயிகள் செயற்கையை விட்டுவிட்டு, இயற்கை விவசாயத்திற்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். அதற்கான வழிகாட்டுதல்கள் தரப்பட்டுக்  கொண்டிருக்கின்றன. 500 வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறது எங்களின் இந்த இயற்கை உணவு அங்காடி. இப்பொழுது சிறுதானியங்களைப் பயன்படுத்தி 54 வகையான உணவுப் பொருட்களை தயாரித்துள்ளோம். இதனை மெருகேற்றி  78 தயாரிப்புகளாக அதிகரிக்க இருக்கிறோம். இதனால், விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கிருக்கிறது.

இளைஞர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது…?

கம்ப்யூட்டர் சோறு போடாது. விவசாயம்தான் சோறு போடும். விவசாயத்தைச் செய்ய முடியாவிட்டாலும் ஆரோக்கியமான உணவுக்கு மாறுவதன்மூலம் விவசாயத்தை வாழ வையுங்கள்.

உங்களது இந்த இயற்கை விவசாயத்தின் அடுத்த கட்டம்?

எங்களது நோக்கமே, சிறந்த ஆரோக்கியமான உணவு முறைகளை மக்களிடம் சேர்ப்பதாகும். அதற்கான பாதையில் அடுத்தடுத்து எல்லா விதங்களிலும் உழைத்துக் கொண்டிருக்கிறோம். நச்சுத்தன்மையில்லாத உணவுகள் குறித்த விழிப்பு உணர்வுகளைக் கூட்டிக் கொண்டே இருப்போம்.

எங்களை முன்மாதிரியாகக் கொண்டு வாணியம்பாடியில் உள்ள பட்டதாரி தம்பதியர்,  இயற்கை உணவு விற்கும் அங்காடியை நடத்தி வருகி்ன்றனர். இதுவே இயற்கை விவசாயத்தின் வெற்றி எனலாம்.

 

- எஸ்.டேவிட் ஆரோக்கிய செல்வி
படங்கள்: ஆகாஷ்
(மாணவப் பத்திரிகையாளர்கள்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement