Published:Updated:

"ஊருக்குள்ள ஏரி... ஏரிக்குள்ள ரோடு" சீரழிக்கும் திருச்சி பொதுப்பணித்துறை!

 "ஊருக்குள்ள ஏரி... ஏரிக்குள்ள ரோடு" சீரழிக்கும் திருச்சி பொதுப்பணித்துறை!
"ஊருக்குள்ள ஏரி... ஏரிக்குள்ள ரோடு" சீரழிக்கும் திருச்சி பொதுப்பணித்துறை!

"ஊருக்குள்ள ஏரி... ஏரிக்குள்ள ரோடு" சீரழிக்கும் திருச்சி பொதுப்பணித்துறை!

திருச்சி விமானநிலையம் அருகே அமைந்துள்ளது, கொட்டப்பட்டு ஏரி. இது, திருச்சி மாநகரின் மிக முக்கியமான நீர்பிடிப்பு பகுதியாகவும், வடிகாலாகவும், நிலத்தடி நீருக்கான ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஏரியானது சமீபகாலமாக தொடர் சோதனைகளை சந்தித்து, சுருங்கிக் கொண்டே வருகிறது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக, இந்த ஏரியை அரசாங்கமே படிபடியாக ஆக்கிரமித்து வருகிறது. ஏரிப்பகுதியில் ஆவின் பால் பண்ணை, கோளரங்கம் ஆகியவற்றை அமைத்து இந்த ஏரியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக இந்த ஏரிக்குள் மண்ணைப் போட்டு சாலை அமைக்கும் பணி வெளிப்படையாகவே நடைபெற்று வருகிறது. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்களை மட்டுமல்லாமல், திருச்சி மக்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இப்பகுதி மக்களோடு இணைந்து இதனை தடுத்து நிறுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ள தண்ணீர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வினோத் ராஜ் சேஷன் நம்மிடம் பேசியபோது ‘‘இந்த ஏரியோட உண்மையான மொத்த பரப்பளவு எவ்வளவுனு தெரியலை. இந்த ஏரியில பல ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டு தான் கோளரங்கம், ஆவின் பால் பண்ணையும் மிக பிரமாண்டமா கட்டப்பட்டிருக்கு. இதெல்லாம் போக, இந்த ஏரியில் இப்ப மிச்சமுள்ள பகுதி 48 ஏக்கர். இந்த ஏரியை பாதுகாக்கலைனா திருச்சி மக்கள் பலவிதமான சோதனைகளையும், ஆபத்துகளையும் சந்திக்க வேண்டி வரும். அதற்குக் காரணம், கே.கே. நகர், காஜாமலை, விமான நிலையம் உள்ளிட்ட இன்னும் பல்வேறு பகுதிகளில் மழைக் காலங்களில் உருவாகக்கூடிய வெள்ளநீரானது, இந்த கொட்டப்பட்டு ஏரியில்தான் வடிஞ்சிக்கிட்டு இருக்கு. திருச்சி விமானநிலையத்துக்கு தென்மேற்குல இருக்குற செம்பட்டு ஏரியில நிரம்பக்கூடிய தண்ணீரும், இதே கொட்டப்பட்டு ஏரியிலதான் வடியும். 2005-ம் ஆண்டு மழை வெள்ளம் வந்தபோது ஆவின் பால் பண்ணைக்குள்ள தண்ணீர் புகுந்து மிஷின்கள் பாதிக்கப்பட்டு மிகப்பெரிய சேதாரம் எல்லாம் உருவாச்சு. 2006-ல், நீர்நிலைகளை ஆக்கிரமிச்சு வேறு எந்த ஒரு பயன்பாட்டுக்கும் உபயோகப்படுத்தக்கூடாதுனு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.

\

2008-ல் திருச்சி மாவட்ட நிர்வாகமும், வருவாய்த்துறையினரும் இந்த ஏரிக்குள்ளத்தான் வீட்டுமனை பட்டா போட்டு பத்திரிக்கையாளர்களுக்கு மானிய விலையில விற்பனை செஞ்சிருக்காங்க. ஏரிக்குள்ள கொடுத்திருக்குற வீட்டு மனைகள் பாதுகாப்பானதல்ல. கடந்த ஆண்டு சென்னையில ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளே மிகப்பெரிய பாடம். பத்திரிக்கையாளர்களுக்கு வேறொரு இடத்துல வீட்டு மனைகளை மாத்திக் கொடுக்கணும். ஏரிக்குள் இருக்கக்கூடிய வீட்டுமனைகளுக்கு,போய்வர இப்ப சாலை அமைக்கப்பட்டால் எதிர்காலத்துல ஆக்கிரமிப்புகளும் அதிகமாகும். இப்பகுதி மக்கள் போராட்டங்கள் மூலமாகவும் நீதிமன்றம் மூலமாகவும் இதை தடுத்து நிறுத்தப் போறாங்க. இந்த ஏரியை முழுமையாக ஆழப்படுத்தி, கரைகள் அமைத்து முறையா பராமரிச்சாலே, திருச்சி மாநகர மக்களின் தண்ணீர் தேவையில போதுமான அளவு தண்ணீரை இந்த ஏரியே கொடுத்திடும்’’ என்றார்.


ஆட்சியாளர்கள் கவனிப்பார்களா?


- கு.ராமகிருஷ்ணன்

அடுத்த கட்டுரைக்கு