Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விரல்கள் இல்லாமல் சித்திரம் வரையும் தவல்!

விஞ்ஞானியாக வேண்டும், டாக்டராக வேண்டும், நல்ல ஓவியராக பேர் எடுக்கவேண்டும் என்று கனவுகானும் இளைஞர்கள் உண்டு. ஆனால் அந்தக் கனவை நிஜமாக்க சிலரால் மட்டுமே முடியும். அந்த வரிசையில் தவல் ஒருவர். இவருக்கு ஸ்பெஷல் திறமை உண்டு. தன் இரண்டு கைகள் இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை. தன்னுடைய ஓவியத் திறமையால் எல்லோரின் மனதில் முத்திரைப் பதித்துள்ளார் தவல் எனும் தவல் ஜோத்சனாபென் கௌஷிக்பாய் கத்ரி (Dhaval Jyotsnaben Kaushikbhai Khatri), இவருடைய சாதனைப் பயணத்தைத் தெரிந்துகொள்வோமா.

 

 


 

அகமதாபாத்தில் உள்ள இசான்பூர் கிராமத்தில் பிறந்த தவல் சிறு வயதில் செம சேட்டையான பையன். வீட்டின் மொட்டைமாடி மீது காத்தாடி பறக்கவிட்டுக்கொண்டிருந்தார். அப்போது தவலுக்கு வயது 14. பட்டம் பறக்கவிட்டுக்கொண்டிருந்த உற்சாகத்தில் தெரியாமல் ஹை வோல்ட்டேஜ் மின்சாரக் கம்பியைத் தொட்டுவிட்டார். மாடியில் இருந்து கீழே வீசப்பட்டதும், பேச்சுமூச்சு இல்லாமல் மயங்கிவிட்ட தவலை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மின்சாரம் தாக்கியதால் இரண்டு கைகளும் பாதிப்புக்குள்ளானது. கைகள் இருந்தால் உயிருக்கே ஆபத்து என்று சொல்லி டாக்டர்கள் கைகளை எடுத்துவிட்டனர். முழங்கைவரை கைகள் இல்லாததைப் பார்த்த தவல் மனதளவில் உடைந்துவிட்டான். அழுதுகொன்டிருந்த தவலைப் பார்த்து தன் தாய், ''கைகள் இல்லாமல் இருப்பனைவிட தன்னம்பிக்கையை இழந்தவன்தான் உண்மையான ஊனமுற்றவன்'' என்று நம்பிக்கை வார்த்தைகளை ஊட்டினார். அம்மா சொன்ன அந்த வார்த்தைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் தவல்.

காயம் குணமாக ஆறு மாதங்கள் பிடித்தது. பிறகு அம்மா இரண்டு முழங்கைகள் நடுவே பென்சில் வைத்து எழுத பழகப்படுத்தினார். முதலில் மிகவும் சவாலாக இருந்தது. ஆனாலும் சில மாதங்களிலேயே நன்றாக எழுத கற்றுக்கொண்டார். அதற்குள் தவலுக்கு இன்னொரு ஷாக்!  தான் படித்துவந்த பள்ளி முதல்வர், ''உனக்குத்தான் கைகள் இல்லையே நீ எப்படி படிக்கப்போகிறாய். பள்ளிக்கு வரவேண்டாம்'' என்று சொல்லி அனுப்பிவிட்டார். மனம் தளராத தவல், வேறு பள்ளியில் சேர்ந்து 10-ம் வகுப்பு பாஸ் ஆனார்.

இதே மன உறுதியோடு ஓவியம் கற்க ஆசைப்பட்டார். அதற்காக ஓவியக் கல்லூரியில் சேர விண்ணப்பித்தார் ஆனால் தவலைச் சேத்துக்கொள்ளவில்லை. ''இரண்டு கைகள் நன்றாக உள்ளவர்களே ஓவியம் கற்க சிரமப்படுவார்கள். அது உனக்கு சாத்தியம் இல்லை'' என்று நிராகரித்தனர். தவல் சோர்ந்துவிடாமல் விடாமுயற்சியோடு தானே ஓவியம் வரைய பழகினார். ஐந்து வருடங்களில் அழகாக ஓவியங்களை வரை கற்றுக்கொண்டார். அமிதாப், டெண்டுல்கர், சல்மான்கான், அப்துல் கலாம், லதாமங்கேஷ்கர் எனப் பல செலிப்ரிட்டிகளை ஓவியங்களாகத் தீட்டி, 'உன்னால் முடியாது' என்பவர்களின் வாயடைக்கச் செய்தார்.

ஓவியம் வரைவது என்பதே மிக நுணுக்கமானது. அதுவும் இரண்டு கைகள் இல்லமல் ஓவியங்களில் கலக்குகிறார் என்றால் பிரம்மிக்க வைக்கிற செயல்தானே? அதனால்தான் இவருடைய ஓவியங்களுக்கு இந்தியாவில் மட்டும் அல்ல, வெளிநாடுகளிலும் நல்ல கிராக்கி. செலிப்ரிட்டிகளின் பாராட்டு மழையில் நனைந்துவரும் தவல், மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்துவருகிறார்.

-என்.மல்லிகார்ஜுனா

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement