Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'சமோசா சாட்டும் செல்ஃபி புள்ளைகளும்' - ஆபீஸ் மீட்டிங் அக்கப்போர்கள்!

கும்பிபாகத்தை விட கொடூரமான தண்டனை எது? கொஞ்சம்கூட யோசிக்காமல் சொல்லிவிடலாம்,  ஆபீஸ் மீட்டிங் என. பின்னே மீட்டிங்கில் என்ன பேசலாம்னு முடிவு பண்ணவே ஒரு மீட்டிங் வெச்சா பாடி எப்படித் தாங்கும்? வேகும் வெயிலில், மத்தியான மயக்கத்தில் நடக்கும் இந்த மீட்டிங்கே ஒரு கொடுமை என்றால் அதில் காம்போ கொடுமையாக சில புண்ணியவான்கள் வேறு வந்து கடுப்பைக் கிளப்புவார்கள். இத்தனைக்கும் இந்த ஜீவராசிகளை மீட்டிங்கில் வைத்துப் பார்த்தால் மட்டும்தான் உண்டு. வருடம் முழுவதும் வொர்க் ஃப்ரம் ஹோம் மோடில் இருப்பார்கள் போல...

* மீட்டிங்கில் அறுவை தாங்க முடியாவிட்டால்தானே நாம் கைத்தட்டிப் பேச்சை முடிக்க சிக்னல் கொடுப்போம். ஆனால் சில விஷக்கிருமிகள் பேசுபவர் என்ன சொன்னாலும் கைத்தட்டிக்கொண்டேதான் இருப்பார்கள். அதுவும் சும்மா இல்லை. அப்படியே சிலிர்த்துப்போய் உச்சி முடி எல்லாம் ஸ்பைக்ஸ் ஸ்டைலில் நிற்கும் அளவுக்கு உணர்ச்சிவசப்பட்டு. கவனித்துப் பார்த்தால் வாயு மூலையோ, கன்னி மூலையோ ஏதோவொரு மூலைதான் எப்போதுமே இந்தச் சத்தத்தின் பிறப்பிடமாக இருக்கும். க்ளாப் தட்டுறது எல்லாம் அசஸ்மென்ட் ப்ராசஸ்ல வராதுய்யா!

* மீட்டிங்குகள் எல்லாம் மெகா சீரியல் போல ஒரே திரைக்கதைதான். நாள் மாறினாலும் சீன் மாறாது. எனவே போரடிக்கக் கூடாது என்பதற்காக குரூப்பாக செட் சேர்ந்து உட்கார்ந்து கமென்ட் அடித்துக்கொண்டிருப்போம். நம் நேரத்துக்கென முன்னால் ஒரு சீனியர் சிட்டிசன் உட்கார்ந்திருப்பார். நம் பக்கம் குபீர் சிரிப்பு எழும்போதெல்லாம் திரும்பிப் பார்த்து முறைப்பார். பயம் வரணுமாம். காலேஜில் இருந்தே இந்த மாதிரியான ஆட்களைப் பார்த்தவர்கள் என்பதால் சட்டை செய்யாமல் திரும்பவும் பேசுவோம். சட்டென திரும்பி, 'ஷட் அப்' என எகிறுவார். 'என்னது இவருக்குப் பேச்சு வருமா?' என அதிர்ச்சியில் உறைந்திருப்பான் நண்பன்.

* கவுண்டமணி அளவுக்கு இல்லை என்றாலும் சூரி அளவுக்காவது கவுன்ட்டர் போட்டுக் கூட்டத்தை சிரிக்க வைக்கும் திறமை நமக்கு வாய்த்திருக்கும். அதைக்கண்டு காண்டாகும் மிடில் ஏஜ் மகாத்மாக்களில் ஒருவர், 'நான் எல்லாம் காமெடி பண்ணா அப்படியே குபீர் குபீர்னு சிரிப்பு வரும் தெரியுமா' என மொகலாயர் காலத்து மொக்கைகளை போட்டுக்கொண்டிருப்பார். நாம் பார்க்கிறோமா என ஒரு பெருமித லுக் வேறு. பாவம், அவரைப் பார்த்து சிரிப்பதை அவர் காமெடிக்கு சிரிப்பதாய் நினைத்துக்கொண்டு அடுத்த மீட்டிங்கிற்கு கற்கால காமெடிகளைத் தயார் செய்வார்.

* அசெஸ்மெண்ட் மீட்டிங்காக இருந்தாலும் சரி, ரிசஷன் மீட்டிங்காக இருந்தாலும் சரி, அலுங்காமல் குலுங்காமல் வந்து உட்கார்ந்து செல்ஃபிக்களாக எடுத்துத்தள்ளும் குரூப் ஒன்று எல்லா கேம்பஸிலும் இருக்கிறது. போருக்குப் போய்விட்டு வந்தது போல விக்டரி சிம்பல் போஸ் வேறு. அவுட் ஆஃப் போகஸில் உங்கள் சுண்டுவிரல் தெரிந்தால்கூட உங்களையும் டேக் செய்து காலி செய்வார்கள். பின் நோட்டிஃபிகேஷன்களை அள்ள கையில் சாக்குமூட்டையோடு சமூக வலைதளம் பக்கம் ஒதுங்க வேண்டியதுதான்.

* டன் கணக்கில் புண்ணியத்தை சுவிஸ் பேங்க் அக்கவுன்ட்களில் கணக்கு வைத்திருக்கும் ஆத்மாக்கள் இவர்கள். மீட்டிங் என வந்து உட்கார்ந்த உடனேயே தூங்கிவிடுவார்கள். தலைமுடி காற்றில் பறக்க, மூக்கு புடைப்பாய் ஏறி அமுங்க சொகுசாய் இவர்கள் தூங்குவதைப் பார்க்க நமக்கு உள்ளே பூ மிதித் திருவிழாவே நடக்கும். நமக்குக் கொடுத்து வெச்சது அவ்ளோதான். முன் சீட்டினைப் போய் முட்டாத வரைக்கும் தூக்கம் நல்லது!

* இந்த ஆள் யார், எந்த டீம், என்ன பொறுப்பு என யாருக்குமே தெரியாது. ஆனாலும் பெரிய கட்சி மாநாடு நடத்தும் பில்டப்போடு அங்குமிங்கும் அலைந்துகொண்டே இருப்பார். மைக் பாஸ் செய்வது தொடங்கி ஓங்கி மிரட்டி உருட்டுவது வரை அத்தனையும் செய்வார்கள். திஸ் கய்ஸ் என்ன ரகம்னே தெரியலையே!

* 'பாயசம் எங்கடா?' என சிங்கம்புலி அலறுவாரே. அந்த அலறல் மோடிலேயே எப்போதும் இருக்கும் ஆட்கள் இவர்கள். 'எனி டவுட்ஸ்?' என எம்.டி கேட்டால் 'பலகாரம் எப்போ சார் வரும்?' என்பதுதான் இவர்களின் பிரதான கேள்வியாக இருக்கும். சமோசா சாட், பானி பூரி என்றால்கூட பரவாயில்லை. தயிர் சாதம்- மட்டன் பாயா, தேங்காய் சாதம் - மீன் குழம்பு என எந்த காம்போவாக இருந்தாலும் வெளுத்து வாங்குவார்கள். 'வேணாம்னா வேஸ்ட் பண்ணாதீங்க பாஸ்' என நம் தட்டில் வேறு எச்சில் ரேகை பதிப்பார்கள். நான் சொன்னேனா?

-நித்திஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement