Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மறைக்கப்படுகிறதா நம் வரலாறு? #MustRead

மரியானா பள்ளம் பற்றிய 2-வது பாகத்தின் இறுதியில் பத்து நிகற்புதம் மற்றும் அற்புதம் பற்றிக் குறிப்பிட்டு அவற்றைப் பற்றித் தேடித் தெரிந்து கொள்ளுமாறு எழுதியிருந்தேன். எத்தனை பேர் தேடினீர்கள் எனத் தெரியாது. 

சரியான முறையில் தேடல் நிகழ்ந்திருந்தால் ஒரு தகவல்பிழையைச் சுட்டிக் காட்டியிருக்க முடியும். பத்து நிகற்புதம் என்பதற்கு கும்பம் என்று பெயர். அதாவது பத்து பில்லியன் = கும்பம். கீழ்க்காணும் அட்டவணையைப் பாருங்கள்:

 

இவையெல்லாம் தமிழர்களின் அளவீட்டு முறைகள். நாம் இதுவரை பகுத்தறியாத அளவீட்டு வகைகளைக் கூட நம் முன்னோர்கள் குறித்து வைத்துள்ளனர் என்றால் நமது மூதாதையர்களின் அறிவு எத்தகையது?

நமக்கு பொதுவாக ஒரு குணம் உண்டு. ஏதாவது ஒரு வார்த்தையின் அர்த்தத்தைத் தெரிந்து கொள்வதற்காக அகராதியைப் புரட்டுவோம். அதை அடைந்த பிறகும் அந்த வார்த்தையோடு நாம் நிறுத்தி விடுவதில்லை. அதன் கீழ் உள்ள வார்த்தை, மேல் உள்ள வார்த்தை என பார்வை விரிந்து கொண்டே சென்று அதிலேயே மூழ்கி விடுவோம்.

இதில் தவறில்லை. தேடல் பெரிதானால் தான் வாழ்க்கை பற்றிய புரிதலும் விரியும். நாம் யார்? நம் சரித்திரம் என்ன? நம் முன்னோர்கள் என்னென்ன சாதனைகள் படைத்திருக்கின்றனர்?

பாரத நாடு பழம்பெரும் நாடு. நீர் அதன் புதல்வர், இந்நினைவகற்றாதீர்! 

உலகிற்கே கலாச்சாரத்தையும், பண்பாட்டினையும் கற்றுக்கொடுத்த நாடு. மிகவும் பழமை வாய்ந்த, அதே சமயத்தில் நாகரிகமும் செழித்து வளர்ந்த நாடு. ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்பே திட்டமிட்ட வீடுகளுடனும் கழிவறைகளுடனும் வாழ்ந்த  நாடு. வாழும் கலையான யோகாவை இந்த உலகிற்கு கற்றுத்தந்த நாடு. எண்களை, அதிலும் முக்கியமாக பூஜ்ஜியத்தை உலகிற்கு அளித்த நாடு. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த நாடு.

உலகின் முதல் மருத்துவ முறையான ஆயுர்வேதத்தை அறிமுகப்படுத்திய நாடு. நதிகளை இணைத்து நீர் மேலாண்மை, பாசன வசதி, தானாகவே சுத்திகரித்துக் கொள்ளும் விதமான கழிவுநீர் அமைப்பு என அனைத்து துறைகளிலும் உயர்ந்து விளங்கிய நாடு. 

வானியல், உலோகவியல், கட்டிடக்கலை, கணிதம், மருத்துவம், தர்க்கவியல், வரைபடவியல், கனிமவியல் என எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அதில் மகத்தான பங்கை அளித்துள்ள நாடு.

மருத்துவம் 

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆயுர்வேத மருத்துவ முறைகளை கையாண்டார்கள் இந்தியர்கள். மருத்துவத்தின் தந்தை எனப்படும் சரக்கா, ஆத்ரேயா, தன்வந்தரி போன்ற மருத்துவர்கள் ஏராளமான மருத்துவக்  குறிப்புகளை எழுதி வைத்துள்ளார்கள். 

உலகின் முதல் அறுவை சிகிச்சை நிபுணர் சுஸ்ருதா. மூன்றாம் நூற்றாண்டிலேயே கண்புரை அறுவைச் சிகிச்சையைச் செய்தார் இவர். ஒரு வளைந்த ஊசியின் மூலம் கண்புரை உள்ள விழியின் வில்லையை நீக்கி வெதுவெதுப்பான வெண்ணெயில் சில நாட்களுக்கு ஊற வைத்து அது குணமான பின்னர் மீண்டும் பொருத்தினார். சுஸ்ருதரிடமிருந்து சிகிச்சை பெற உலகெங்கும் இருந்தும் மக்கள் வந்தனர்.

வானியல் 

கோள்களின் இயக்கத்தையும், பூமி தன்னைத்தானே சுற்றுகிறது என்பதையும் செயற்கைக் கோள்கள் அனுப்பி கண்டுபிடிக்கின்றனர் இன்றைய விஞ்ஞானிகள். இதனைக் கணிதச் சமன்பாடுகளால் ஏற்கனவே கணித்துச் சொல்லி விட்டார் ஆர்யபட்டா. உலகம் சூரியனைச் சுற்றி வர ஆகும் காலத்தை ஐந்தாம் நூற்றாண்டிலேயே கணித்துச் சொன்னார் பாஸ்கராச்சாரியா. ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் சார்புக் கோட்பாடு பற்றி நம் வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்துத் திருமணங்களில் அருந்ததி பார்ப்பது என்பது முக்கியச் சடங்காகும். சப்தரிசி மண்டலம் (Ursa Major) வடக்கு வானில் இரவு நேரத்தில் மிக எளிதாக அடையாளம் காணக்கூடிய நட்சத்திரக் கூட்டங்களில் ஒன்று. வசிட்டரும் அருந்ததியும் (Mizar and Alcor) சப்தரிசி மண்டலத்தின் ஒரு பகுதியான விண்மீன் குழுவாகும். இவை இரட்டை நட்சத்திரங்களாகும். பெரும்பாலான மற்ற இரட்டை நட்சத்திரங்களை போல அல்லாமல் இவை ஒன்றையொன்று இணையாக சுற்றி வருகின்றன.  புதுமணத்தம்பதிகள் இந்த இரட்டை நட்சத்திரங்களை பார்த்து அவர்களை போலவே இணைபிரியாது வாழ வேண்டும் என்பதற்காக வானில் அருந்ததி பார்த்து ஆசி பெறும் நிகழ்வும் நடைபெறுகின்றது. இந்த இரட்டை நட்சத்திரங்களின் இவ்வியல்பை எந்த செயற்கைக்கோளை அனுப்பி தெரிந்து கொண்டனர் நம் முன்னோர்கள்?

ஒளியின் வேகம் வினாடிக்கு ஒரு லட்சத்து எண்பத்து ஆறாயிரம் மைல்கள் என்பதை நவீன அறிவியல் சென்ற நூற்றாண்டில் தான் உறுதிப்படுத்தியது. ஆனால் இதை அன்றே குறிப்பிட்டிருக்கின்றது உலகின் மிகப் பழைமையான ரிக் வேதம்.

வானியலில் பல்வேறு எல்லைகளை நம் முன்னோர்கள் ஏற்கனவே தொட்டுவிட்டனர். தற்கால விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் அவற்றை மெய்ப்பிக்க மட்டுமே செய்கின்றன.

கல்வி 

இயற்கணிதம், நுண்கணிதம், கோணவியல், வடிவியல் போன்றவை உருவானது இங்கே தான். உலகின் முதல் பல்கலைக்கழகமான தக்சசீலாவிற்கு உலகெங்கிருந்தும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து கல்வி பயின்றனர். இப்பல்கலைக்கழகத்தில் அறிவியல், கணிதம், மருத்துவம், அரசியல், போர்த்திறன், ஜோதிடம், வானியல், இசை, மதம், தத்துவவியல் போன்ற அனைத்து கல்வி அம்சங்களும் பயிற்றுவிக்கப்பட்டது. நான்காம் நூற்றாண்டில் உருவான நாளந்தா பல்கலைக்கழகம் அனைத்து வசதிகளையும் கொண்ட முதல் பல்கலைக்கழகமாக கருதப்படுகிறது. பக்தியார் கில்ஜியால் அழிக்கப்பட்ட அதன் நூலகத்தில் இருந்த அநேக புத்தகங்களும் சூறையாடப்பட்டு விட்டன. இப்புத்தகங்கள் மட்டும் அழியாமல் கிடைத்திருந்தால்….?

உலோகவியல் 

உலோகக் களத்தின் கீழே வெப்பத்தை உண்டாக்கி பிறகு அந்தக் கலவையை குளிர வைத்து தேவையான உலோகத்தை பிரித்தெடுப்பது தான் பொதுவான வழக்கம். ஆனால் துத்தநாகம் (Zinc) அடங்கிய உலோகக் கருவினை வெப்பப்படுத்தும்போது அது 997 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் திரவமாக மாறுகிறது. அதனைத் தொடர்ந்து ஆயிரம் டிகிரி செல்சியஸை எட்டும்போது உடனடியாக வாயுவாக மாறிவிடுகிறது. 

மூன்றே டிகிரி வித்தியாசத்தில் திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு துத்தநாக கலவை மாறுவதால் அதனைப் பிரித்தெடுப்பது பெரும் சவாலாக இருந்தது. ஆனால் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியர்களிடம் அதற்கான தொழில்நுட்பம் இருந்தது. உலோகக் களத்தை தலைகீழாக வைத்து அதன் மேற்பகுதியில் வெப்பமுண்டாக்கி கீழ்ப் பகுதியில் பெரிய பனிக்கட்டியை வைத்து அதன் மூலம் துத்தநாகம் வாயு நிலைக்கு சென்றுவிடாமல் திடநிலையில் பிரித்தெடுத்தனர்.

கலை 

மத்தியப்பிரதேசத்தின் ராய்சன் மாவட்டத்தில் உள்ள பீம்பேட்கா குகைகள் மூன்று லட்சம் ஆண்டுகள் பழமையானவை. அங்கு காணப்படும் 30 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாலியோலித்திக் வகை ஓவியங்கள் அக்கால மனிதர்களின் வேட்டை முறை, நடனம் மற்றும் அவர்களின் பல்வேறு வாழ்க்கை முறையை எடுத்துச்சொல்லும் விதமாக இன்றும் நம்மிடையே இருக்கன்றன. ஒரு லட்சம் வருடங்களுக்கு முன்பே அங்குள்ள குகைகளில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உலக நாடுகள் எல்லாம் செம்பு, தோல் ஆகியவற்றை நாணயங்களாகப் பயன்படுத்திய காலத்தில் இந்தியா தங்கத்தை நாணயமாகப் பயன்படுத்தியிருக்கிறது. இந்தியாவிலிருந்த தங்கத்தின் அளவு வேறெந்த நாட்டிலும் இல்லை. (‘இப்ப மட்டும்’ என்பவர்களுக்கு என் அன்பு!) மற்ற நாடுகள் கற்கால நாகரிகத்தோடு ஆடையென்ற ஒன்றையே அறிந்திராத காலத்தில், பருத்தியால் நெய்யப்பட்ட ஆடைகள் உடுத்தி நாகரிகத்தில் திளைத்தவர்கள் நாம்.

உலகின் முதல் கப்பற்படை தமிழர்களுடையது. தெற்கு ஆசியாவை தம் வசப்படுத்தியிருந்தனர் சோழர்கள். கடல்வழிப் பயணங்களின் முன்னோடிகள் நாம். மிகப்பெரிய மரக்கலத்தை உருவாக்கி காற்றின் திசைகளை கொண்டு பயணம் செய்தது மட்டுமல்லாமல் கடல் சார்ந்த அத்தனை அறிவுகளிலும் மேம்பட்டு விளங்கியுள்ளார்கள். கப்பலை தோற்றுவித்து கப்பல் கட்டும் கலையில் சிறந்து விளங்கியதும் நாம்தான்.

வாஸ்கோடகாமா இந்தியாவைக் கண்டுபிடிப்பதற்காக பயணம் செய்து கோழிக்கோட்டிற்கு பிறகு கோவாவை அடைந்தபோது அவரை வரவேற்றது ஒரு குஜராத்தி வணிகர். வாஸ்கோடகாமாவினுடையது அப்போதைய ஐரோப்பாவின் மிகப்பெரிய கப்பல். அவரது கப்பலை விட பன்னிரண்டு மடங்கு பெரியதாக இருந்தது இந்த வணிகக்கப்பல் என்றால் நமது கப்பல் கட்டும் தொழில்நுட்பம் பற்றி மேலும் சொல்லத்தான் வேண்டுமா?

கப்பல் மட்டுமா? இராவணன் சீதையைக் கவர்ந்து, புஷ்பக விமானத்தில் பறந்து சென்ற கதையைப் படித்திருக்கிறோம். பாரத்வாஜரின் விமானங்களின் சாஸ்திரத்தில் மூன்று வகையான விமானங்களை பற்றிக் குறிப்பிடுகிறார். அவை, பூமியில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் விமானங்கள், ஒரு கோளிலிருந்து மற்றொரு கோளிற்கு செல்லும் விமானங்கள் மற்றும் ஒரு பிரபஞ்சத்திலிருந்து மற்ற பிரபஞ்சங்களுக்கு செல்லும் திறன் பெற்ற விமானங்கள் ஆகும். மேலும் விமானங்களை மறையச்செய்யும் திறன், மறைந்திருக்கும் விமானத்தை காண வைத்தல், ஒரு விமானத்தில் பேசும் ஒலியையும், அதன் காட்சியையும் மற்றொரு விமானத்தில் செல்லும் நபர்கள் காணும் திறன் போன்ற தொழில்நுட்பங்களைப்பற்றியும் அதில் விளக்குகிறார். 

ஞாபக சக்தியில் உயர்ந்து விளங்கினர் நமது முன்னோர்கள். வேதங்களெல்லாம் செவிவழியாகவே அடுத்தத் தலைமுறைக்குக் கடத்தப்பட்டன.

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?

நதிகளோ ஏராளம். அந்த நதிகளையொட்டிப் பரவிய நாகரீகத்தால் மாபெரும் விவசாய நாடு. விளையாத பயிர்கள் இல்லை. உற்பத்தியில் உலகிலேயே முன்னணியில் இருக்கும் நாடு. பரந்து விரிந்த குடி நீர்ப்பரப்பு. மனிதர்களை போலவே கால்நடைகளின் எண்ணிக்கையும் அதிகம். தங்கம், வைரம், இரும்பு, செம்பு, கிராஃபைட், பெட்ரோல், யுரேனியம் எனக் கிடைக்காத கனிமங்கள் இல்லை.

பாலை மணலைத் தவிர வேறு ஒன்றுமில்லாத துபாய் மிகப்பெரும் வர்த்தக நகரமாய் இருப்பது எப்படி? எந்த இயற்கை வளமும் இல்லாத சிங்கப்பூர் போன்ற சிறிய நாடு எல்லாத் துறைகளிலும் முன்னேறிக் கொண்டே இருக்கும் போது எல்லா வளமும் இருந்தும் நம் நாட்டிற்கு ஏன் இந்த நிலை? 

சரி, இந்தியாவின் நிலை தான் இப்படி. நமது தமிழகத்துக்கு வருவோம்.

தமிழ் இனத்தின் வரலாறு என்பது மிகத்தொன்மையானது. கல் தோன்றி மண் தோன்றாக்காலத்து முன் தோன்றிய மூத்த குடிகள் நாம். பண்பாடு, நாகரிகம் மற்றும் கலை எனக் கொடி கட்டிப்பறந்து அனைத்துத் துறையிலும் சிறந்து விளங்கிய ஒரு இனம் தமிழ் இனம்.

உண்மையில் மனிதன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் எனப்படும் லெமூரியா கண்டமே. இங்கு தோன்றிய மனிதர்கள் தான் மற்ற இடங்களுக்கு சென்று நாகரிகங்களைப் பரப்பியிருக்கிறார்கள். உலக நாகரிகம் சிந்து சமவெளியிலோ, சுமேரியாவிலோ அல்லது மெசபடோமியாவிலோ தோன்றியது அல்ல. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்கு, ஐந்தாயிரம் வருடங்கள் பழமையானது தான். ஆனால் தமிழ் நாகரிகம் சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முந்தையது. 

அறிவியல் உலகம் எதையும் ஆராய்ந்து பார்த்து தெளிவு படுத்திய பின்னரே ஏற்றுக்கொள்ளும். குமரிக்கண்டத்தினைப்பற்றி இன்னும் முழுமையாக அறிவியல் உலகம் ஆராயவே இல்லை. அங்கிருக்கும் ரகசியங்கள் இன்னும் ரகசியங்களாகவே இருக்கின்றன. 

நமது பூம்புகாரின் ஒரு பகுதி கடலில் மூழ்கியுள்ளது. இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் 1993-ல் பூம்புகாரில் ஆய்வு மேற்கொண்டது. பின்னர் பணப் பற்றாக்குறையைக் காரணம் சொல்லி ஆய்வுகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் 1990-களில் துவாரகையிலும் இதுபோன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது பணப்பற்றாக்குறை ஏற்படவேயில்லை. ஆனால் துவாரகையில் போதிய சான்றுகள் கிடைக்கவில்லை. பூம்புகாரில் முதற்கட்ட சோதனைகளின்போதே சான்றுகள் கிடைத்தன.

பூம்புகாரின் ஆய்வுகள் தமிழரின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்பதற்காக நிறுத்தப்பட்டதா? 

இங்கிலாந்தினைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான்காக். இவர் உலகெங்கும் பயணம் செய்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருபவர். நிதிப்பற்றாக்குறையினால் ஆராய்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டதை அறிந்த அவர் இந்தியக் கடல் ஆராய்ச்சிக் கழகத்தின் அனுமதி பெற்று அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களின் நிதியுதவியோடு 2001-ல் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.
 
அதிநவீன உபகரணங்களோடு செய்யப்பட்ட அந்த ஆராய்ச்சியில் பூம்புகாரின் கடற்பகுதியில் மூன்று கிலோமீட்டர்கள் தொலைவில் சுமார் எழுபத்தைந்து அடிகளுக்குக் கீழே ஒரு பிரம்மாண்டமான நகரம் மூழ்கியிருப்பது தெரியவந்தது. ஆங்கில எழுத்தான ‘U’ போன்ற அல்லது குதிரையின் லாடம் போன்ற ஒழுங்கற்ற வடிவத்தில் உறுதியான கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களும் இடிபாடுகளுடன் காணப்பட்டன.

இந்த அகழ்வு ஆய்வினைப்பற்றிய ஆவணப்படங்கள் வெளிநாடுகளின் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டிருக்கின்றன. இங்கிலாந்தின் தர்ஹாம் பல்கலைக்கழகமும் இந்த ஆய்வின் முடிவுகளை ஏற்றுக்கொண்டுள்ளது.

இங்கு மேலும் ஆராய்ந்தால் இன்னும் பல அரிய உண்மைகள் வெளிவரும்.  இந்த இடத்தை ஏன் ஆராயாமல் விட்டுவைத்திருக்கிறார்கள் என்பது புதிராக இருக்கிறது என்று கூறுகிறார் அவர். கிரஹாம் ஹான்காக்கின் ஆராய்ச்சிகளுக்குப் பிறகும் நமது இந்திய அரசு மேற்கொண்டு எந்த வித ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ளவில்லை. இந்த ஆவணப்படமும் இந்தியத் தொலைக்காட்சிகளில் காட்ட அனுமதி மறுக்கப்பட்டது.
 
நமது தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுகள் தொடர்பான செய்திகள் தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை. இது தவிர மேற்கொண்டு எந்த வெளிநாட்டு நிறுவனமும் தமிழகத்தின் கடல் பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

நமது வரலாறு திட்டமிட்டே மறைக்கப்படுகின்றனவா என்கிற கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை.

கடலின் சிறிது தொலைவில் செய்யப்பட்ட ஆய்வுகளே பூம்புகாரின் காலம் 9500 ஆண்டுகளுக்கு முன் என்கின்றன. யார் கண்டார்..? இன்னும் ஆய்வுகளை விரிவாக்கினால் உலகத்தின் வரலாறே திருத்தப்படலாம்.

ஒரு மாபெரும் நகரமே வரலாற்றுப் புதையலாய் கடலோரத்தில் புதைந்து கிடக்கிறது. அந்த நகரைப்பற்றிப் புகழ்ந்து பாடிய பட்டினப்பாலை என்ற நூல் நம்மிடத்தில் இருக்கிறது. ஆனால், அந்த நகரமோ கடலின் அடியில் வரலாற்றை அசை போட்டபடி காத்திருக்கிறது.

-ப்ரேம் குமார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close