Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காதலும் கடந்து போகாதே!

’செம்புலப் பெயல் நீர் போல்’...காதலுக்கான குறுந்தொகையின் வர்ணனை இது. காதலிக்கும் இருமனங்கள் ஒன்றாகி செம்மண்ணில் பெய்த மழைநீர் போல் ஒன்றுகலந்துவிட வேண்டும் என்பதைத்தான் அன்றைய பாடல் வரிகளில் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள் மூத்தோர்.

காதல்...ஆதி ஆப்பிளில் தொடங்கிய இந்த நெஞ்சாங்கூட்டின் உணர்வு, ஆப்பிள் ஐபோன் வந்தபிறகும் கூட மனிதனுக்குள்ளும், மிருகங்களுக்குள்ளும், ஏன் சில மனிதமிருகங்களுக்குள்ளும் கூட குறைந்துவிடவில்லை.

சொல்லிப் புரிய வைக்கமுடியாத ஹார்மோன்களின் ஹைக்கூ மொழிதான் காதல். பார்த்த மாத்திரத்தில் சினிமா உலகின் மாய கிராபிக் வேலைகளே தேவைப்படாமல் ஆயிரம் பட்டாம்பூச்சிகளையும், லட்சோபலட்சம் ஆர்கிட் மலர்களையும் குட்டி இதயத்திற்குள் கடை விரிக்க காதலால் மட்டுமே முடியும். 

பார்த்த மாத்திரத்தில் ’பச்சக்கென்று’ நெஞ்சிற்குள் ஒட்டிக் கொள்ளவும், 9 மணி அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய ஒருவனை 10 மணியாகியும் பின்னாலேயே சுற்ற வைக்கவும் அழகோ, அந்தஸ்தோ தேவையில்லை....ஒரு துளிக் காதல் என்னும் உயிர்த் திரவம் போதும்.

இத்தனை வீரியம் மிகுந்த வெளிகளைக் கடந்த வாழ்வாதாரமான காதல், இன்றைக்கும் அப்படியே இருக்கிறதா? இல்லைவே இல்லை. நான்குக்கு நான்கு கணினிப் பெட்டிக்குள் சிக்கிக் கிடக்கும் நமக்கெல்லாம், காதல் கனிரசம் சொட்டுவதே டுவிட்டருக்குள்ளும், பேஸ்புக், வாட்ஸப்புக்குள்ளும்தான்.

உண்மையிலேயே நாம் காதலைத் துளித்துளியாக தொலைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆண்டாண்டு காலம் முகம் பார்த்துக் கிடப்பேன் என்று அடித்துச் சத்தியம் செய்யும் காதலெல்லாம் இன்று சாத்தியமே இல்லை. முப்பது விநாடிகள் முகம் பார்க்க முடிந்தாலே அது அதிசயங்கள் பட்டியலில் சேர்க்க வேண்டிய காதல் சாசனம்.

பரபரப்பான இந்த டிஜிட்டல் உலகில் காதல் எதையெல்லாம் தொலைத்திருக்கிறது? ஆண்டாண்டு காலம் உயிர்ப்புடன் இருக்க வேண்டிய காதல் குழந்தைக்கு அளிக்க வேண்டிய காதல் சத்துணவுகள் எவை? கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

நீ வந்த பாதையில்...வளர்ந்தது என் காதல் பூச்செடி:

இன்று பத்தில் எட்டு பேருக்கு காதலென்பதே என்னவென்று தெரிவதில்லை. பார்த்தவுடன் பத்தே நிமிடத்தில் காதல் சொல்லி, ஐந்தே நாட்களில் அழ வைப்பதே காதல் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. உண்மையில் காதல் உள்ளத்தின் அணு உலை உருவாக்கம். ஒருவரைப் பார்க்கும் போது வெடித்துக் கிளம்பி பீறிடும் அதன் வீரியம், வாழ்நாளின் கடைசி வரை கதிர் வீச்சாய் நீடிக்க முதலில் ’இவள்/ன்”தான் என் மீதமிருக்கும் வாழ்க்கை’ என்பதை மனதில் ஆழமாய் கல்வெட்டில் பதித்துக் கொள்வதே காதல். ஆதலால், முதலில் காதலிக்கத் தொடங்குங்கள்.

நேரத்தை உனக்களித்தேன்...காதலை நீ தா:

ஒரு நாளின் 24 மணி நேரத்தில் 15 மணி நேரமாவது உழைப்பில் செலவிட வேண்டிய கட்டாய வேலைப்பளு இன்றைக்கு எல்லாத்துறையினருக்குமே இருக்கிறது. ஆனாலும், அதையும் தாண்டி துணையாய் வரப் போகிறவர்களிடம் அவ்வப்போது ‘சாப்ட்டியா? வேலை அதிகமா?’ என்கிற ஒன்றிரண்டு கேள்விகள், ஓராயிரம் அரவணைப்புகள் தராத இன்பத்தை பெற்றுத் தரும். வார இறுதி நாட்களில் ஒரு மணி நேரமாவது செல்போனையும், லேப்டாப்பையும் ஒதுக்கி வைத்துவிட்டு உங்கள் காதலுடன் காலத்தைச் செலவிடுங்கள்.

என் குட்டி இதயத்தை பெட்டியில் இட்டுத் தந்தேன்:

ஒருவருக்கொருவர் சின்ன சின்ன பரிசுகள் கொடுத்துக் கொள்ளுங்கள். அது வழியில் கண்டெடுத்த கூழாங்கல்லாகவும் இருக்கலாம்; அம்மாவின் ஞாபகம் சுமந்த புடவையாகவும் இருக்கலாம்; தேநீர் சுவைக்கும் கோப்பையாகவும் இருக்கலாம். விலையோ, அழகோ முக்கியமில்லை. என்றேனும் ஒரு மழை நாளில், தனித்திருக்கும் போது, நினைவுகளை மீட்டெடுக்கும் வீரியம் அந்த பொருளுக்கு இருக்க வேண்டியதுதான் முக்கியம்.

தனிமையில் தவிக்கவிட்டுச் செல்லாதே:


 

நின்று பேசக் கூட நேரமில்லாமல், சக மனிதர்களிடம் அன்பைப் பகிர்ந்து கொள்ளக் கூட அவகாசமின்றி, அலுவலக அகதிகளாய் எல்லோரும் மாறிப் போயிருக்கிறோம். காதல் மட்டுமே, ஏதோ கொஞ்சம் உயிருடன், இரண்டு பேரையாவது இணைத்து வைத்திருக்கின்றது. முடிந்தவரை, காதலிக்கும் ஜீவனையாவது தனிமையில் தவிக்க விடாதீர்கள். தாகத்தில் தவிக்கும் வேளையில் தண்ணீர் அவசியம். தனிமையில் தவிக்கும் வேளையில் காதல் அவசியம். 

உண்ணும் உணவில் உன் காதல் கலந்திருக்கும்:

வாரத்திற்கு ஏழு நாட்கள் இருக்கிறது. ஒரே ஒருநாளை, ஒருவருக்கொருவர் ஒதுக்கி பிடித்த உணவை ஒன்றாக உண்ணுங்கள். பைவ் ஸ்டார் ஹோட்டலெல்லாம் தேவையில்லை. ரோட்டுக்கடையின் இட்லி கூட போதும். ஆனால், அந்த உணவு ஆத்மார்த்தமான அன்போடு பகிர்ந்து சாப்பிடுவதாக இருக்க வேண்டும். 

கடைசியாக ஒன்றே ஒன்று:

காதலென்பது உடல்கள் மட்டுமே இணைந்து பேசும் மொழி கிடையவே கிடையாது. அம்மாவின் அன்பும், அப்பாவின் கண்டிப்பும், தங்கையின் பாசமும், அண்ணனின் அரவணைப்பும் சூழ்ந்த மொத்த உறவுகளின் ஒற்றை வடிவம்தான் காதல். அதை கண்களில் தேடுங்கள்...கைகளைப் பற்றிக் கண்டடையுங்கள்...

அதுதான் காதல்....காதல் மட்டுமே கவிதை...மற்றதெல்லாம் கவிதையை வடிக்கும் மொழிகள்....என்றுமே காதலைக் கடந்து போக விடாதீர்கள்!

- ராதா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement