வெளியிடப்பட்ட நேரம்: 14:37 (01/09/2016)

கடைசி தொடர்பு:15:32 (01/09/2016)

ஜி.நாகராஜன்-விளிம்புகளை வரைந்த வாத்தியார்

இன்று எழுத்தாளர் ஜி.நாகராஜன் அவர்களின் பிறந்தநாள். வரலாற்றின் ஆகச்சிறந்த எழுத்தாளர்களை அவர்களின் மறைவுக்கு நெடுங்காலத்தின் பின்னே கொண்டாடுவது தமிழ் மரபாகிவிட்டது. அந்த மரபின் படி மறைந்து 20 ஆண்டுகளுக்கு பின்னர் மறுவாசிப்பு செய்யப்பட்டு அவரின் எழுத்துக்கள் மீது வாசக வெளிச்சம் பட்டது. 

இதே நாள், செப் 1 (1929) அன்று பழநியில் வழக்கறிஞர் கணேசனின் மகனாக பிறந்த நாகராஜன் அவருக்கு ஏழாவது பிள்ளை. மதுரையில் உள்ள தாய்மாமன் வீட்டில் தங்கி முதுகலை வரை படித்த நாகராஜன் காரைக்குடி கல்லூரியில் பேராசிரியராக வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பின் பல்வேறு வேலைகள் செய்த அவர் இறுதியில் டுட்டோரியல் கல்லூரியில் ஆசிரியராக இருந்தார். நாகராஜன் ஆங்கிலம் சொல்லிக்கொடுத்தால் அப்படியே மனதுக்குள் பதிந்துவிடும் என்ற பெயருண்டு. அந்தக்கால மதுரை மாணவர்களின் ஹீரோவாக இருந்தார். 

ஜி.நாகராஜன் எழுத்திலும் இயல்பிலும் சண்டமாருதனாகத்தான் இருந்தார்.காற்றைக் கட்டிப்போட முடியாது என்கிற அறிவியல் உண்மை தெரிந்தே கம்யூனிஸ்ட் கட்சியில் முழு நேர பணியாளராக அவரை நியமித்தார்கள். எழுத்தாளர்கள், எழுத்திலும் கூட தொடத்தயங்கிய பாத்திரங்களை யதார்த்தத்துடன் படைத்தளித்தவர் நாகராஜன். விலைமாது, பிட்பாக்கெட்கள்,திருடர்கள்  என அவரின் படைப்புலகம் உலக வாழ்வின் இருண்ட முகங்களை அவைகளின் அறங்களுடன் காட்சிப்படுத்தியது. 

அவர் 'குறத்தி முடுக்கு' மற்றும் 'நாளை மற்றும் ஒரு நாளே' ஆகிய குறு நாவல்களும் 17 சிறுகதைகளுமே எழுதியுள்ளார். அதே போல ஆங்கிலத்தில் கட்டுரைகளும், ஒரு புத்தகமும் எழுதியுள்ளார். 

அவரின் பிறந்தநாளான இன்று அவரின் படைப்புகளில் ரசிக்கப்பெற்ற சில வாசகங்கள்.

"உண்மை நிலைத்திருக்கும் அளவுக்குத்தான் பொய்யும் நிலைத்திருக்க முடிகிறது. அதாவது இரண்டுக்கும் சம ஆயுள்."

"மனிதனைப் பற்றிப் பொதுவாக எதுவும் சொல்லச் சொன்னால் ‘மனிதன் மகத்தான சல்லிப்பயல்’ என்றுதான் சொல்வேன்." 

"தனது கலைப் படைப்புகள் மூலம் சமுதாய மாற்றங்களை நிகழ்த்துவதாக நினைக்கும் கலைஞனுக்கு, பனம்பழத்தை வீழ்த்திய காக்கையின் கதையைச் சொல்லுங்கள்."

"‘மனிதாபிமான’ உணர்வில் மட்டும் உயர்ந்த இலக்கியம் உருவாவதில்லை. மனிதத் துவேஷ உணர்வும் சிறந்த இலக்கியத்தைப் படைக்க வல்லது. இல்லையெனில் ‘மேக்பெத்’ என்ற நாடகமோ ‘கலிவரின் யாத்திரை’ என்ற நாவலோ உருவாகியிருக்க முடியாது."

"மனிதர்களிடம் நிலவ வேண்டியது பரஸ்பர மதிப்பே தவிர, பரஸ்பர அன்பு அல்ல; அப்போதுதான் ஏமாற்று குறையும்."

" தனிமனிதர்களை மதிக்கத் தெரியாதவர்கள்தான் மனிதாபிமானம் பேசுவார்கள்." 

"மனித குணங்களை மனிதர்கள் சிலாகித்துப் பேசுவதைவிட கேலிக்கூத்து கிடையாது. ஏனெனில், சிந்திக்கும் நாய்கள் நாய் குணங்களையே உயர்வாகக் கருதுகின்றன." 

"எந்தச் சமுதாய அமைப்பிலும் சிறப்புச் சலுகைகள் அனுபவிக்கும் ஒரு சிறு கூட்டம் இருந்தே தீரும். இல்லையெனில் அவ்வமைப்பு சிதைந்துவிடும்." 

1963-ல் தனது 'பித்தன் பட்டறை' வெளியீட்டகம் மூலம் குறத்தி முடுக்கு நாவலை வெளியிட்ட நாகராஜன் அதன் முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார். 

"நாட்டில் நடப்பைதை சொல்லியிருக்கிறேன். இதில் உங்களுக்கு பிடிக்காதது இருந்தால் "இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது" என்று வேண்டுமானால் கேளுங்கள்; "இவையெல்லாம் ஏன் எழுத வேண்டும்?" என்று கேட்டு தப்பித்து கொள்ளப்பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்வதென்றால் முழுமையுந்தான் சொல்லியாக வேண்டும். நான் விரும்பும் அளவு சொல்ல முடியவில்லையே என்றுதான் வருத்தம்." 

இதுதான் ஜி.நாகராஜன்!

- வரவனை செந்தில்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்