Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கால் டாக்ஸி பயணிகள் கவனத்துக்கு

 

பெருநகர சாமானியர்களின் மூன்றாம் காலாகவே மாறி இருக்கின்றன கால் டாக்ஸிகள். நினைத்த நேரத்தில் 'உள்ளேன் ஐயா' என அட்டண்டென்ஸ் போடுவதால் கால்  டாக்ஸிகளுக்கு எக்கச்சக்க வரவேற்பு. ஆனால் அதில் பயணம் செய்வதும் ஒரு கலைதான்  ஜி. ரிலையன்ஸ் ஜியோல இருந்து ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் வரை எல்லாத்துக்கும் டிப்ஸ் சொல்ற நாங்க அதுக்கு மட்டும் சொல்லாம இருப்போமா? அட, உண்மையில, அந்த  ஏரியாவுல ஏகப்பட பஞ்சாயத்து நடக்குது பாஸ்!. அதனாலதான்.

ஃபோர்ஸ் - பிசிக்ஸ்படி தப்பு: 

உங்களுக்கு அவசரம்தான். அதற்காக எல்லா டாக்ஸி ஓட்டுநர்களும் நீங்கள் சொல்லும் இடத்தில் ட்ராப் செய்யவேண்டும் என அர்த்தமில்லை. நகரத்தின் ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்கு சென்றுவிட்டு அங்கே பிக்கப் எதுவுமில்லாமல் அவர் வீடு திரும்பினால் எக்கச்சக்க பெட்ரோல் விரயம். எனவே நடைமுறை சாத்தியங்களை கேளுங்கள். கண்டிப்பாக அந்தப்பக்கம் செல்லும் டாக்ஸி அடுத்தடுத்த தேடல்களில் கிடைக்கும். 'தலைகீழாகத்தான் குதிப்பேன்' என அடம்பிடிக்காதீர்கள்.

வெயிட்டிங் நல்லது: 

அட சென்னையில் இருக்கும் ட்ராஃபிக்கிற்கு சிக்னலுக்கு சிக்னல் தம் பிரியாணியே சமைத்து சாப்பிடலாம். எனவே புக் செய்த கார் வர லேட் ஆகத்தான்  செய்யும். உங்கள் அவசரத்துக்கு காரை தூக்கிக் கொண்டு வர அவர் கேப்டன்  அமெரிக்கா கிடையாது. எனவே கொஞ்சம் வெயிட் பண்ணுங்களேன். பத்து நிமிடம் வெயிட்  செய்துவிட்டு ஒற்றை க்ளிக்கில் புக்கிங் கேன்சல் செய்வது சுலபம்தான். ஆனால் இதற்காக வாகன வெள்ளத்தில் நீந்தி வரும் அவரின் நஷ்டத்தை எப்படி ஈடுகட்ட? பொறுமையா இருங்க பாஸ்! 

கார் ஓனர் நீங்கள் இல்லை: 

கொட்டும் மழையில் டாக்ஸி வந்திருக்கும். அக்கறையே இல்லாமல் அதில் சேற்று  ஷூவோடு ஏறி சீட்டில் கால் நீட்டி படுத்து அழுக்காக்குவதுதான் அநியாய அக்கப்போர். நீங்கள் கஸ்டமர்தான். அவர்களின் முதலாளி இல்லை. எனவே கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். நீங்கள் அசுத்தம் செய்யும் இடம் அவர்களுக்கு கோயில் போல.  ஆட்டோவை சுக்கல் சுக்கலாய் கிழித்து எறிவதை பார்த்து கலங்கி நிற்கும் பாட்ஷா  பாய் போன்ற டெலிகேட் பொஷிசனில் அவர்களை நிறுத்தாதீர்கள்.

உரையாடல் இஸ் மேஜிக்:

ஒரு நாளைக்கு இத்தனை சவாரி எடுக்கவேண்டும் என்ற வேகத்தில் ஓடிக்கொண்டே  இருக்கும் வாழ்க்கை அவர்களுடையது. அதில் நம்மால் முடிந்தவரை அவர்களை ரிலாக்ஸ்  செய்யலாமே. ஜாலியாய் பேச்சு கொடுங்கள். உண்மையில் பேச்சுக்கு ஏங்கிக் கிடக்கிறார்கள் என்பது அவர்களின் உடனடி ரெஸ்பான்சிலேயே தெரியும். ஆர்டர்  போடாமல் சிம்பிளாக பேசிக் கொண்டு வந்தாலே போதும் உங்களுக்கு பைவ் ஸ்டார்  ரேட்டிங் நிச்சயம்.

நோ பொதுக் கருத்து:

உரையாடல் விவாதமாகிவிடாமல் கவனிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. 'பீக் அவர்னு  கொள்ளை அடிக்கிறாங்கப்பா டாக்ஸிகாரங்க' என உண்மை தெரியாமல் பொதுக் கருத்து நவில்வது தேவையில்லை. அவர் தல ரசிகர் என்பது தெரிந்தும் தல பற்றி பேசி வம்பிழுப்பது போன்ற விஷயங்கள் வேண்டாம். இது உங்களுக்கும் நல்லது இல்ல, அவருக்கும் நல்லது இல்ல.

கீப் த சேஞ்ச்: 

ட்ரிப் முடிந்து பில் வரும்தான். ஆனால் ரவுண்டாக வர அது என்ன நம் தெரு அண்ணாச்சியின் மளிகைக் கடையா? 168 ரூபாய் வந்தால் இரண்டு ரூபாய் எக்ஸ்ட்ரா  இருக்கட்டும் என கொடுப்பதுதான் பெஸ்ட். மிச்சம் ரெண்டு ரூவாயைக் கொடு என  புரட்சிப் போராட்டம் நடத்தாதீர்கள். அவருக்கு அடுத்த சவாரி இருக்கிறது.  உங்களுக்கு அடுத்த வேலை இருக்கிறது. முக்கியமாக பின்னால் நிறைய வாகனங்கள் ஹாரன் அடித்துக் கொண்டிருக்கின்றன. போய்ட்டு வாங்க!

 -நித்திஷ் 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement