Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையிலிருந்து ஊருக்கு பஸ் ஏறுறீங்களா? உங்கள தான் தேடிக்கிட்டு இருக்கோம்!

சீசன் டைமில் சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்வதே அட்வென்ச்சர் ட்ரிப் போல ஆகிவிட்டது. விடியற்காலையில் கோயம்பேடில் பஸ் ஏறினால் பொழுது சாயும்போது தாம்பரம் தாண்டிவிடலாம் என்பதுதான் தற்போதைய சென்னை சிட்டிசன்களின் தலைவிதி. இரும்பு எருமைமாடாய் உருண்டு உருண்டு செல்லும் இந்தப் பேருந்துகளில் உட்கார்ந்துகொண்டு எப்படி டைம்பாஸ் பண்ணுவது? அட, அதுக்கெல்லாம் தீம் படி ஐடியா இருக்கு பாஸ்! நெக்ஸ்ட் டைம் மறக்காம இதெல்லாம் ட்ரை பண்ணுங்க!

சினிமா ஃப்ரீக்களுக்கு:

இருக்கவே இருக்கின்றன நோலன் படங்கள். 'இன்செப்ஷன்', 'இன்டஸ்டெல்லார்' போன்ற குழப்பக் கிச்சடிப் படங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்து நோலன் நம்மிடம் கதைக்க விரும்பும் கருத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். 'நாங்க கோடம்பாக்கத்தைத் தாண்டாத ஆளு சார்' என்பவர்கள் 'இரண்டாம் உலகம்', 'உத்தமவில்லன்' போன்ற படங்களைச் சரணடைய வேண்டியதுதான். 

'ஏன்யா, ஊருக்குப் போறப்போ சந்தோஷமாப் போக வேணாமா?' எனக் கொதிப்பவர்கள் இயக்குநர் பேரரசின் ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்குமான ஆறு வித்தியாசங்களைக் கண்டுபிடித்துப் விளையாடலாம். 

இலக்கிய விரும்பிகளுக்கு:

எப்படியும் மற்ற நேரத்தில் புக் படிக்கப் போவது இல்லை. எனவே ஜெமோவின் வெண்முரசு சீரிஸை இந்த நேரத்தில் படியுங்கள். முதல் பாகத்தை கோயம்பேட்டில் தொடங்கினால் 11-வது பாகத்தை செங்கல்பட்டு தாண்டுவதற்குள் முடித்துவிடலாம். நடுநடுவே அர்த்தம் தேடுவதற்கு வேறு டைம் ஆகும். 'அய்யோ சிம்பிளா சொல்லுங்க ஜி' என்பவர்கள் ஆக்ஸ்போர்டு டிக்‌ஷனரி எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஒவ்வொரு பக்கமாகப் புரட்டி உங்களுக்குத் தெரிந்த இங்கிலீஷ் கெட்ட வார்த்தைகளுக்கு அர்த்தம் தேடிக் கண்டுபிடியுங்கள். அப்புறம் எத்தனை நாளைக்குதான் அர்த்தமே தெரியாம பீட்டர் விடுறது?

அரசியல் நோக்கர்களுக்கு:

உங்களுக்குதான் ஜி எக்கச்சக்க வழிகள் இருக்கு. ஸ்டார்ட் அப், ஸ்டாண்ட் அப் போல மோடி இதுவரை எத்தனைத் திட்டங்களை அறிவித்திருக்கிறார் என்பதை கூகுள் சர்வர் தேயத் தேயத் தேடினாலே நன்றாக டைம்பாஸ் ஆகும். லோக்கல் பாலிடிக்ஸ்தான் உங்கள் ஏரியாவென்றால், பா.ம.க எத்தனை தடவை லாங்க் ஜம்ப்பில் முகாம் மாறியிருக்கிறது. தி.மு.க சட்டசபைக்கு சென்ற எத்தனையாவது செகண்டில் வெளிநடப்பு செய்கிறது போன்ற ட்ரெண்டிங் டாபிக்குகளை அலசலாம்.

ஆன்லைன் சிகாமணிகளுக்கு:
சோஷியல் மீடியாவில் உங்களுக்கு 1000 நண்பர்கள் இருக்கலாம். அதில் மிஞ்சிப்போனால் 100 பேரைத்தான் உங்களுக்குத் தெரிந்திருக்கும். சொச்ச 900 பேரின் ஃப்ரொபைலுக்கும் சென்று அவர்கள் பக்கத்தை நோட்டமிடவும். அதில் யாரையாவது பார்க்கும்போது காது சவ்வுக்குள் கிளி கத்தினால் அவர்களின் இன்பாக்ஸில் ஆஜராகவும். பூ படம், ஜெனிலியா படம் வைத்த ஃபேக் ஐ.டி-க்களில் டைம் வேஸ்ட் செய்வது எல்லாம் உங்களின் தனிப்பட்ட தலைவிதி. சமயங்களில் மேரேஜ் ஆகக்கூட வாய்ப்பு இருக்கு பாஸ்!

இசை வெறியர்களுக்கு:

ஆடிக் காற்றில் தகர டப்பா உருள்வது போன்ற ஸ்டைலில் வாயு வெளியேறாமல் ராப் பாடுவதுதான் தற்போதைய ட்ரெண்ட். அதனால் 'சோக்காளி', 'இருமுகன் சேட்டை' போன்ற ராப் பாடல் லிரிக்ஸ்களை எழுத முயற்சி செய்யலாம். 'நாங்க அதுக்கும் மேல' என பீற்றுபவர்கள் இசையுலகின் 'பேரரசு' தேவி ஶ்ரீ பிரசாத்தின் ஒரு ஆல்பத்திற்கும் இன்னொரு ஆல்பத்திற்குமான ஒரே ஒரு வித்தியாசத்தையாவது கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம்.

கேம் பிரியர்களுக்கு:

டெம்பிள் ரன், சப்வே சர்ஃவர் கேம் எல்லாம் அவுட் ஆஃப் ட்ரெண்ட் ஜி. பேசாமல் போக்கிமான் கோ விளையாடத் தொடங்கிவிடுங்கள். தமிழ்நாடு முழுக்க சுற்றப்போவதால் வழியில் மாட்டும் ஜந்துக்களை எல்லாம் பிடித்து கட்டைப்பைக்குள் போட்டு அடக்கிவிடலாம். ரோட்டில் இருந்து 2 கி.மீ தள்ளி இருந்தாலும் பரவாயில்லை. எப்படியும் இங்கிருந்து திருச்சி வரை பஸ் ஆமைக்கு போட்டியாய்தான் போகப்போகிறது. எனவே ஒரு டோல் கேட்டில் இறங்கி பிக்காசுவை அள்ளிப் போட்டுக்கொண்டு நடந்தால் அடுத்த டோல்கேட்டில் பஸ்ஸைப் பிடித்துவிடலாம்.

கடைசி பிரம்மாஸ்திரம்:

இது எதுவுமே வேலைக்கு ஆகாது என்பவர்கள் பயன்படுத்த கடைசி பிரம்மாஸ்திரம் ஒன்று இருக்கிறது. போனில் உங்கள் ஆளுக்கு கோபமூட்டுவது போல ஒரு மெசேஜ் தட்டுங்கள். அந்தப் பக்கமிருந்து செம சூடாக ரிப்ளை வரும். அப்படியே ஆரம்பித்தால் விடிய விடிய அனல் பறக்கும். மூன்று வருடத்திற்கு முன்னால் நாம் திட்டியதை எல்லாம் தோண்டி எடுத்து இப்போது டென்சன் ஆவார்கள் என்பதால் கண்டிப்பாய் போரடிக்காது.


கேர்ள் ஃப்ரெண்டும் இல்லனா என்ன பண்றதுனு நீங்க கேட்கிறது புரியுது. புக் படிக்கிறது இல்லை, சினிமா பாக்குறது இல்லை, இசையும் பிடிக்காது, அரசியலும் தெரியாது, கேர்ள் ஃப்ரெண்டும் இல்லை. ம்ஹும்..சொல்றதுக்கு ஒண்ணும் இல்ல

-நித்திஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement