Published:Updated:

நாங்கள் 'பாரதி' ஆனது இப்படித்தான்!

நாங்கள் 'பாரதி' ஆனது இப்படித்தான்!

நாங்கள் 'பாரதி' ஆனது இப்படித்தான்!

நாங்கள் 'பாரதி' ஆனது இப்படித்தான்!

நாங்கள் 'பாரதி' ஆனது இப்படித்தான்!

Published:Updated:
நாங்கள் 'பாரதி' ஆனது இப்படித்தான்!

’பாரதி’ என்ற பெயர் சொல்லும் போதே மீசை முளைக்கும் உணர்வு உண்டாகிறதல்லவா? மகாகவி பாரதியாரின் 95-வது  நினைவுதினம் இன்று .  'பாரதி' என்று இயற்பெயர்  வைக்கப்பட்டவர்கள் ஒருபுறம் என்றால் தன் பெயரையே  பாரதி என்று மாற்றி வைத்துக் கொண்டோ அல்லது பாரதி என்கிற பெயரை தன்னோடு இணைத்துக் கொண்டவர்களையும் பார்க்க முடிகிறது. இந்த வீரக்கவிஞனின் பெயரை சேர்த்துக் கொண்ட பிரபலங்கள்  தங்கள் பெயர்க்கதையை சொல்கிறார்கள் இங்கே!

இயக்குநர் பாரதிராஜா:
 எனது சகோதரி பாரதியின் பெயரையும், சகோதரர் ஜெயராஜ் பெயரில் இருந்து ராஜாவையும் சேர்த்து 'பாரதிராஜா' என பெயரை வைத்துக்கொண்டேன். பாரதியாரின் கவிதைகளும் போராட்ட குணங்களும் எனக்கும் ரொம்பவே பிடிக்கும்.

கவிஞர் பழநிபாரதி:
என்னுடைய அப்பா கவிஞர் சாமி பழனியப்பன், கவிஞர் பாராதிதாசனின் மாணவராகவும், உதவியாளராகவும் இருந்தார். பாரதியார் மீதும் அதிக பற்றுக்கொண்டிருந்தார். அதனாலேயே எனக்கு 'பாரதி' என பெயர் வைத்தார். தவிர எங்கள் வீட்டில் எல்லோருக்குமே தமிழ் பெயர்தான். பள்ளி பருவத்திலேயே அப்பாவின் பெயரின் சுருக்கமாக 'பழபாரதி' என பெயரை மாற்றிக்கொண்டேன். ஒருமுறை கவிஞர் அறிவுமதிதான், 'பழனிபாரதி' என உன் பெயரை மாற்றிக்கொண்டால் நன்றாக இருக்குமே என சொல்ல, பின்னர் நானும் 8-ம் வகுப்பு படிக்கும்போது 'பழனிபாரதி' என பெயரை மாற்றிக்கொண்டேன்.

என்னுடைய சிறுவயதில் ஒருநாள் அப்பாவுடன் வெளியே நடந்து சென்றுகொண்டிருந்தபோது, 'கவிதை எப்படி எழுதணும்'னு அப்பாவிடம் கேட்டேன். சொல்கிறேன் எனச் சொன்னவர், வீட்டுக்கு வந்ததும் பாரதியார், பாரதிதாசன் இருவரின் கவிதை நூல்களை எனக்குக் கொடுத்தார். படித்துப்பார்...புரியாதவைகளை மட்டும் கேள் எனச் சொன்னதோடு, இருவரின் வாழ்க்கை வரலாற்றையும் விரிவாகச் சொன்னார். அப்படி சிறுவயதிலேயே எனக்கும் பாரதியார், பாரதிதாசன் இருவரின் மீது மிகுந்த பற்று ஏற்பட்டது. அதனுடன் அவர்களைப்போல தவறான பாதையில் செல்லாமல், மனநிறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

பாரதி பாஸ்கர்:
மலைமகளைக் குறிக்கும் வகையில் 'ஹேமா' என பெரிய அக்காவிற்கும், அலைமகளைக் குறிக்கும் வகையில் 'மஹாலட்சுமி' என சின்ன அக்காவிற்கு, கலைமகளை குறிக்கும் வகையில் 'பாரதி' என எனக்கும் பெற்றோர் பெயர் வைத்தார்கள். பாரதியார் மீது அதிக பற்றுக்கொண்டிருந்தார், என் அம்மா. அதனாலேயோ அல்லது 'பாரதி' என பெயர் வைத்து மறைமுகமாக கல்வி, கலைகளில் நான் திறமைமிக்கவளாக வளர வேண்டும்  என நினைத்தும், மறைமுக கட்டையாகவும் அன்போடும், நம்பிக்கையோடும் பெற்றோர் எனக்கு பெயர் வைத்திருக்கிறார்கள்.

வாழ்வின் மிக கொடிய துயரங்களையும், மிகத்தூய்மையான வறுமையையும், சந்தோஷங்களையும் சந்தித்துள்ளார், பாரதியார். ஆனால், எந்த சூழலிலும் அறமற்ற செயல்களுக்கு தன்னை சமரசம் செய்துகொள்ளாமல், அஞ்சாமல், நேர்மையான வழியில், போராளியாகவே வாழ்ந்துள்ளார். குறிப்பாக  சகோதரி நிவேதிதாவை சந்தித்த தருணத்தில், 'உங்களில் பெரும்பாலானோர் மனைவிகளை அடிமைகளாக வைத்துக்கொண்டு, நீங்கள் சுதந்திரத்திற்காக போராடினால் என்ன பயன் கிடைக்கப்போகிறது' என அவர் கூறிய வார்த்தைகள்தான் பாரதியின் வாழ்க்கையையே மாற்றிப்போட்டது. அதன் பின்னர்தான் முழுமூச்சாக பெண்களுக்காக நேரடியாகவும், தன் படைப்புகளின் வாயிலாகவும் போராடியதுடன், தன் மனைவி செல்லம்மாவை தலை நிமிர்ந்து நடக்கவும், தைரியமாக வாழவும் ஊக்கம் கொடுத்தார். ஒவ்வொரு நாளும் நான் எழுந்ததும் முதலில்,
'இனி என்னைப் புதிய உயிராக்கி
எனக்கேதுங் கவலையறச் செய்து
மதிதன்னை மிகத் தெளிவு செய்து
என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!' என்ற பாரதியின் பாடலை வாசித்துவிட்டுதான் அடுத்த செயல்பாட்டைத் தொடங்குவேன்.

பாரதி கிருஷ்ணகுமார்:
பாரதிதான் என் வாழ்வின் ஆதர்ஷம்; ஆசான். என்னுடைய இத்தனை வருட மேடைப் பேச்சுகளில் ஒன்றில்கூட பாரதியின் வரியை, பாரதியின் வாழ்வைக் குறிப்பிடாமல் அந்தப் பேச்சினை முடித்தது இல்லை. இந்த இயலாமையை நான் மகிழ்ச்சியோடு ஏற்கிறேன். 1989 அல்லது 90 என்று நினைக்கிறேன். பாரதி விழாவில் குன்றக்குடி அடிகளார் முன்னிலையில் பாரதியைப் பற்றி பேசினேன். பாரதியின் கவிதை வரிகளுக்கு நான் கூறிய விளக்கங்களைக் கேட்ட அடிகளார், 'இனி பாரதி கிருஷ்ணகுமார் என்றே அழைக்கலாமே' என்றார். என் பேச்சுக்கான அங்கீகாரமாக நான் உணர்ந்தாலும், மிகப் பெரிய ஆளுமையை என் பெயரோடு சேர்த்துக்கொள்வதற்கு தயங்கினேன். ஆனால் எழுத்தாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த கோவில் பட்டி, சாத்தூர் நண்பர்கள், கலை இரவுக்கு பேச அழைக்கும்போது பாரதி கிருஷ்ணகுமார் என்றே அழைப்பிதழில் குறிப்பிட்டனர். அப்போதும் எனக்குள் தயக்கம் இருந்துகொண்டே இருந்தது. பிறகு சினிமாவில் பணிபுரியும்போது, ஏற்கனவே கிருஷ்ணகுமார் எனும் பெயரில் இயக்குநர் இருந்ததால் டைட்டிலில், ஏதேனும் புனைப்பெயர் வைக்க, ஆலோசனை தந்தார்கள். ஆனால் பெற்றோர்கள் வைத்த என் பெயரை மாற்ற விருப்பம் இல்லாததால் பாரதி கிருஷ்ணகுமார் என்று வர சம்மதித்தேன். அப்போதும் தயக்கம் விடைபெறவில்லை. கிட்டத்தட்ட ஆறாண்டுக்கால உழைப்பில் பாரதியார் பற்றி 'அருந்தவப்பன்றி சுப்பிரமணிய பாரதி' என்ற நூலை எழுதிய பிறகே தயக்கம் நீங்கி பெருமிதம் கொண்டேன்.

- கு.ஆனந்தராஜ், வி.எஸ்.சரவணன்