Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலகம் உன்னை பார’தீ’ என்றே அழைக்கட்டும்!

அன்புக் கவிஞனே பாரதி....

உன்னை அப்படி அழைக்கலாம்தானே...நீ ஒன்றும் சொல்லப் போவதில்லை. ஏனெனில், என்று உன் பெயரை பாரதியாய் மாற்றிக் கொண்டாயோ அன்றே ’பார் முழுவதும் பற்றியெரியும் தீயாய்’ அன்பில் எங்களுக்கு ஒருமையானவனாய் ஆகிவிட்டாய். ஏனென்றால், நீ ஒற்றை மனிதனில்லை. உன்னை நேசிக்கும், கைதொழும் எல்லார்க்குள்ளும் நீ தணலாய் நிறைந்து கிடக்கிறாய் ‘எதிலும் இங்கு இருப்பவனாய்’. எனில், உன்னை பாரதி என்றே அழைப்பேன்...

இத்தனை வருடம் கழித்து ஏன் இந்த மடல் என்று நீ கேட்கலாம்...காரணம் இருக்கிறது கவிஞனே. என்றோ மரித்தவர்களுக்கே நினைவு நாள். உனக்கு இன்று நினைவு நாள் என்கிறார்கள். ஆனால், வாழ்ந்து கொண்டிருப்பவனுக்கு எப்படி நினைவு நாள்? நீ மரித்திருந்தால்தானே மீண்டும் நினைப்பதற்கு.

இன்னும், இன்னும் உன்மத்தமாய் உன்னையே நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம் பாரதி. உன்னைப் பற்றி பேசி உற்சாகம் அடைந்தவர்களும் நாங்கள்தான். உன்னால் பயனடைந்தவர்களும் நாங்கள்தான். ஏதோ ஒரு மூலையில், எந்நாளும் வார்த்தைகளாய் உச்சரிக்கப்படும் உன் வரலாறு, எத்தனையோ பேருக்கு பரிசுகளாகவும், பாராட்டுகளாவும் உருமாறி நினைவடுக்கில் உன்னை நிலையாய் வசிக்க வைத்திருக்கிறது. ஆனால், நீ கண்ட பாரதம், இன்று பார்த்தீனியச் செடிகளுக்குள் மூழ்கிக் கிடக்கிறது. 

கண்ணம்மாவையும், கண்ணனையும், பாஞ்சாலியையும் உன்னைத் தவிர யாரேனும் வார்த்தைகளுக்குள் வண்ணமயமாய் அடக்கியிருக்க முடியுமா? ஆனால், அவையெல்லாம் வெற்றுப் பாடல் வரிகளாய் மட்டுமே இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறது பாரதி. இங்கே கண்ணம்மாக்கள் கதறக் கதற கசக்கி எறியப்படுகின்றார்கள். காப்பதற்கு கையில் புடவையுடன் உன் கண்ணன் வருவதே இல்லை.   

காதலும் சரி, கண்ணீரும் சரி, கண்டுணர்ந்த விடுதலையும் சரி உன் பாடல்களுக்குள்தான் உயிர் பெற்றுக் கிடந்தன. ‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்...வெந்து தணிந்தது காடு’ என்று நீ வெட்டியெறிந்த சாதிய களைகள் மட்டும் இன்று, வெவ்வேறு வடிவங்களில் வளர்ந்து கொண்டே இருக்கிறது. களையெடுக்கத்தான் ’மனிதர்கள்’ இல்லையே என்ன செய்வது.

‘மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்...காத்திருப்பேனோ டீ இதுபார் கன்னத்து முத்தமொன்று’ என்றெல்லாம் எளிதாக இங்கு காதலைக் கைகொள்ள முடியாது. ஏனெனில், ஆத்திரம் கொண்டோரின் சாத்திரமும், சாதியமும் ஆணவக் கொலையாய் அந்தக் காதலையே வேறறுத்துவிடும். 

அதென்னவோ, இதைச் சொன்னால் என்னை தேசத்துரோகி என்பார்கள். எனினும், சொல்லித்தானே ஆகவேண்டும் உன்னிடம். நீ வாங்கிக் கொடுத்த சுதந்திரம், விவசாயியின் இடுப்பில் மிஞ்சிய கோவணத்துண்டாய் காற்றில் பறக்கிறது பாரதி. ’தேடி நித்தம் சோறு தின்று’ என்று நீ இன்று இருந்திருந்தால் பாடியிருக்கவே முடியாது. பசியாற்ற விவசாயி பத்திரமாய் இருந்தால்தானே? அவனுக்கு வாய்த்ததெல்லாம் கொடியின் மீதக் கயிறு மட்டும்தான். 

நல்லவேளை...30 வருடங்கள் மட்டுமே இந்த மண்ணில் உன் உடலின் வாழ்க்கை. இன்னும் கூடக் கொஞ்சம் வாழ்ந்திருந்தாய் என்றால், உன்னையும் ஒரு மூலையில், ஒதுக்கப்பட்டக் கலைஞனாய் கண்டெடுத்திருக்க வேண்டியிருந்திருக்கும். இப்போதெல்லாம், கல்விக்கு வயதானால் தள்ளி வைத்துவிடுகிறார்கள்.  

பார் போற்றும் மக்களில் பாதிப் பேர் இன்று ‘பார்’களில்தான் குடியிருக்கிறார்கள் தெரியுமா? இன்றைக்கு நீ இருந்து மீசையை முறுக்கிக் கொண்டிருந்தால், உனக்கும் ஒரு சாதிய முத்திரையைக் குத்தியிருப்பார்கள் இங்கு. சரஸ்வதிக்கு கூட சாதிய அடையாளம் வேண்டும், பள்ளிக்குள் அவள் கால் வைக்க.  இந்த நாட்டில் சாம்பலில் இருந்து பீனிக்ஸ் மட்டுமல்ல, பெருச்சாளி கூட உயிர்த்தெழாது பாரதி. 

‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்றாய்.... உன் உயிர் உலாவிய திருவல்லிக்கேணியில் தினசரி வாழ்க்கைக்கே திரவியம் இல்லாமல் தவிக்கும் இளைஞர்கள் எத்தனையெத்தனைப் பேர் தெரியுமா? கொழுத்தவன் வாழ்கிறான்...இளைத்தவன் இல்லாமையால் தேய்கிறான்...இதுதான் இந்த பாரதத்தின் தலையெழுத்து பாரதி... உன்னை மிதித்த ஒற்றை யானையின் பாவத்தாலோ என்னவோ, கொத்துக் கொத்தாய் கொன்று குவிக்கப்படுகிறது அந்த உடல் பெருத்த ஜீவன்.  உயிர்விடும் போதும் உனக்காக அழுதிருக்கும் கண்டிப்பாய்....

உலகம் போற்றிய கவிஞனே...உன்னிடம் வேண்டிக் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்....‘பார் அது தீயில் நிரம்பட்டும்’ பாரதி....அது பசி, பட்டினி, பஞ்சம், பாகுபாடு, பல்லுயிர்க் கொலை, பாலியல் கொடுமைகளை அழிக்கும் பற்றியெரியும் தீயாய் பரவட்டும்...’தீ வளர்த்திடுவோம்...பெருந்தீ வளர்த்திடுவோம்’ பாரதி...உன் கனவுகள் இனியேனும் மெய்ப்படட்டும்....அதுவரை உன்னை இந்த உலகம், ‘பாரதீ’ என்றே அழைக்கட்டும்!

-பா.விஜயலட்சுமி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement