வெளியிடப்பட்ட நேரம்: 13:53 (15/09/2016)

கடைசி தொடர்பு:14:55 (15/09/2016)

அண்ணாவிடம் இரண்டு ரூபாய் கேட்ட எம்.பி.! #HBDAnna

 

‘‘வாசிக்கும் திறன்தான் ஒரு மனிதரை அறிவுடையவராக அடையாளம் காட்டும்’’ என்றவர் அண்ணா. எழுத்து, பேச்சு, அரசியல், நடிப்பு எனப் பன்முகம் கொண்ட அவர், 1909-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் நாள் நடராஜன் - பங்காரு தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். தனது பள்ளிப் படிப்பை சென்னை பச்சையப்பா உயர்நிலைப் பள்ளியில் தொடங்கினார்.

ஆங்கிலம் பேச மறுத்த அண்ணா!

அண்ணா, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, விடுமுறையில் அவர் பாட்டி வீட்டுக்குச் சென்றார். அப்போது அவருடைய பாட்டி, ஆங்கிலம் பேசுமாறு சொல்ல, ‘‘அதற்கு ஆங்கிலம் பேசினால் உனக்கென்ன புரியும்? நாம் இப்போது பேசிக்கொண்டுதானே இருக்கிறோம்’’ என்று மறுத்துவிட்டார். போலியாக, தேவையில்லாமல் ஆங்கிலம் பேசுவதில் அண்ணாவுக்கு உடன்பாடில்லை. ஆனால், இன்று பல பேர் தங்களுக்கு ஆங்கிலம் தெரியாவிட்டாலும், அது தெரிந்தமாதிரி காட்டிக்கொள்கிறார்கள். அண்ணா, சில பொதுக்கூட்டங்களுக்குக் காலதாமதமாகச் செல்வதுண்டு. இதுகுறித்து ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு அண்ணா, ‘‘முன்கூட்டியே வந்தால், அடுத்தவரைப் பேசவிடாமல் செய்துவிடுகிறார்கள். அதனால்தான் ஊருக்கு வெளியில் நின்று அனைவரது பேச்சையும் கேட்டுவிட்டு கடைசியில் வருகிறேன்’’ என்றாராம். இன்று அப்படியா நடக்கிறது? சில தலைவர்கள் வரும்வரை கூட்டம் ஆரம்பிக்கப்படாமலேயே இருக்கிறது. ஆரம்பித்தாலும் தலைவர் பேசி முடித்துவிட்டவுடன் கலைந்துவிடுகிறது கூட்டம்.

அதேபோல் தேர்தல் நேரத்தில் ஒரு கூட்டத்துக்குப் பேசச் சென்றிருக்கிறார் அண்ணா. ஆனால், அந்தக் கூட்டத்துக்குச் சென்றபோது காலதாமதமாகிவிட்டது. கட்சித் தொண்டர்கள் நித்திரையில் ஆழ்ந்திருந்தனர். அப்போது மைக் பிடித்த அண்ணா, மாதமோ சித்திரை... மணியோ பத்தரை... உங்களைத் தழுவுவதோ நித்திரை... மறக்காது எமக்கு இடுவீர் முத்திரை!’’ என்று பேச்சைத் தொடங்கித் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

இரண்டு ரூபாய் கேட்ட எம்.பி.!

 

அறிஞர் அண்ணா எம்.பி-யாக இருந்தபோது, தன் சக எம்.பி-க்களுடன் நாடாளுமன்ற அவை வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது ஒரு எம்.பி. அவரிடம், ‘‘நீங்கள் எனக்கு இரண்டு ரூபாய் தரவேண்டும்’’ என்று கேட்க, அதற்கு அண்ணா, ‘‘நான் உங்களிடம் எப்போது கடன் வாங்கினேன். எனக்கு ஞாபகத்தில் இல்லையே?’’ எனச் சொல்ல... அதற்கு அந்த எம்.பி., ‘‘நான் ஒருமுறை சென்னை வந்திருந்தபோது உங்களுடைய பேச்சைக் கேட்க விரும்பி இரண்டு ரூபாய் கொடுத்து ஒரு டிக்கெட் வாங்கினேன். ஆனால், நீங்கள் அந்தக் கூட்டத்துக்கு வரவேயில்லை. அந்த இரண்டு ரூபாயைத்தான் இப்போது கேட்கிறேன்’’ என்றார் புன்னகையுடன்


உடனே அண்ணா, ‘‘அதுவா விஷயம்? நான் மீண்டும் ஒருமுறை சென்னையில் பேச இருக்கிறேன். அப்போது நீங்கள் வந்தீர்கள் என்றால், உங்களுக்காக நானே ஒரு டிக்கெட் எடுத்துக் கொடுத்துவிடுகிறேன்’’ என்று சொல்லிவிட்டுச் சிரிக்க... அங்கிருந்த அனைவருமே சிரித்துவிட்டனர்.

‘‘அந்தக் குறையைப் போக்கிவிடுவீர்கள்!’’

ஒருமுறை சட்டமன்றத்தில், ஆளும் காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு அண்ணா மிக சாதுர்யமாகப் பதிலளித்ததைக் கண்டு ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியே வியந்துபோனது. அவர்கள், அண்ணாவை நோக்கி... ‘‘அண்ணாதுரையால் நல்ல எதிர்க் கட்சியாக இயங்கத் தெரியவில்லை’’ என்றனர். அதற்கு அண்ணா, ‘‘நீங்கள் எதிர்க் கட்சி சரியில்லை என்று அடிக்கடிச் சொல்லிக்கொண்டிருப்பதைப் பார்த்தால்... விரைவில் நீங்களே, அந்தக் குறையைப் போக்கிவிடுவீர்கள் என்று எண்ணுகிறேன். நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது உள்ள இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன்’’ என்றாராம். ஆனால், இன்று சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிக்குப் பேச வாய்ப்பு அளிக்கப்படுவது இல்லை என்பது வேதனையாக இருக்கிறது.

 

‘‘நாட்கள் எண்ணப்படுகின்றன!’’

சட்டமன்றத்தில் எதிர்க் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர், அண்ணாவைப் பார்த்து... ‘‘உங்களுடைய (ஆட்சியின்) நாட்கள் எண்ணப்படுகின்றன’’ என்று சொன்னதும், அதற்கு அண்ணா, ‘‘என்னுடைய ஒவ்வோர் அடியும் அளந்துவைக்கப்படுகிறது’’ என்று நயம்பட பதில் சொன்னார். இதையே இன்றைய உறுப்பினர்கள் யாராவது சொல்லி இருந்தால் அவர் காணாமலே போயிருப்பார். அந்த அளவுக்கு மிகவும் சாதுர்யமாகப் பதில் சொன்னவர் அண்ணா.

எம்.ஜி.ஆர் கொடுத்த புலிக்குட்டி!

சட்டமன்றத்தில் ஒருமுறை எதிர்க் கட்சித் தலைவராய் இருந்த கருத்திருமன், ‘‘அண்ணாவிடம், கொட்டைப் பாக்குக்கு விலை கேட்டால், பட்டுக்கோட்டைக்கு வழி சொல்கிறார்’’ என்றாராம் நக்கலாய். அதற்கு அண்ணா, ‘‘கொட்டைப் பாக்குக்கு பட்டுக்கோட்டையில் விலை குறைவு என்பதை எதிர்க் கட்சித் தலைவர் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்று விளக்கம் கொடுக்க அவையில் சிரிப்பலை எழுந்தது. அதேபோல் வேறொரு சட்டமன்ற நிகழ்வில், ‘‘நான் கொடுத்த ஆண் புலிக்குட்டியை மிருகக் காட்சி சாலையில் சரியாகக் கவனிப்பதில்லை. ஆனால், எம்.ஜி.ஆர் கொடுத்த பெண் புலிக்குட்டி நன்றாக வளர்க்கப்படுகிறது. ஏன் இந்த ஓர வஞ்சனை?’’ என்று கேட்டிருக்கிறார் உறுப்பினர் விநாயகம். அதற்கு அண்ணா, ‘‘சம்பந்திகள் இருவரும் உட்கார்ந்து பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள்’’ என்று பதில் சொல்ல... புகார் கூறியவர் உட்பட அனைவரும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர்.

அண்ணாவின் காரை சோதனையிட்ட அதிகாரி!

தமிழக முதலமைச்சராக அண்ணா பொறுப்பேற்ற காலகட்டத்தில், வெளிமாநிலங்களுக்கு அரிசி செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. அந்தச் சமயத்தில், ஒருநாள் அண்ணா விருத்தாசலம் கூட்டத்தை முடித்துவிட்டுத் திரும்பிகொண்டிருந்தபோது, வழியில் சோதனைச்சாவடியில் அவரது கார் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. காரின் டிக்கியில் மாலைகள், கைத்தறி ஆடைகள், வாழ்த்து மடல்கள் இருந்தன. அவற்றைப் பார்த்த பிறகுதான் சோதனை செய்த அலுவலருக்கு வண்டியில் வந்திருப்பது யார் என்று தெரிந்தது. உடனே அவர் அண்ணாவின் அருகில் சென்று, ‘‘தெரியாமல் நடந்துவிட்டது. என்னை மன்னித்துவிடுங்கள்’’ என்றார். ஆனால், அண்ணா அவர் உதவியாளரிடம், ‘‘இந்த அலுவலரின் பெயரைக் குறித்துக்கொள்ளுங்கள்’’ என்றாராம். அந்த அலுவலர் தனக்கு ஏதோ நடந்துவிடப் போகிறது எனப் பயந்து அழாத குறையாகக் கெஞ்சியுள்ளார். அதற்கு அண்ணா, ‘‘நாங்கள் போடும் சட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப்போன்ற அதிகாரியின் கையில்தான் இருக்கிறது. இன்று நேரில் உங்கள் செயலைப் பார்த்தேன். உங்களைப்போன்றவர்கள்தான் உயர் பதவிக்கு வரவேண்டும். அதற்காகத்தான் உங்கள் பெயரைக் கேட்டேன்’’ என்றாராம். அத்துடன் அவருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டது. இன்றைய காலத்தில் சாதாரண கவுன்சிலர் கார்களையே சோதனையிட விரும்பாத அதிகாரிகள், அமைச்சர்கள், முதல்வரின் காரையா சோதனையிடப் போகிறார்கள்? அந்த அளவுக்குத் துணிச்சல்மிக்க அதிகாரிகள்தான் இருக்கிறார்களா?

‘‘கண்டனத்தைத் தாங்கிக்கொள்ளும் திடமனம் இல்லை என்றால், கடமையை நிறைவேற்ற முடியாது’’ என்றார் அண்ணா. ஆம்... உண்மைதான். இன்று எவரும் கடமையை நிறைவேற்றுகிறார்களோ இல்லையோ, கண்டனத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.
 

- அபிரா

நீங்க எப்படி பீல் பண்றீங்க