வெளியிடப்பட்ட நேரம்: 11:34 (17/09/2016)

கடைசி தொடர்பு:13:24 (19/09/2016)

'பொன்னியின் செல்வனை மொழிபெயர்க்கும் 13 வயது நாவலாசிரியை!

ஆர்த்தி சுந்தரம்... அரபு நாட்டில் வாழும் தமிழ்ப் பெண். தன் 13வது வயதில் 'ஆர்ட் ஆஃப் நோயிங் யுவர் பிளண்டர்ஸ் டூ நேச்சர்(Art of Knowing Your Blenders To Nature)' என்ற புத்தகம் எழுதியவர், இப்போது தன் 21வது வயதில் 'தி காட்ஸ் ஆஃப் டைம்(The Gods of Time)' என்ற நாவல் எழுதியுள்ளார்.

''கும்பகோணம் பக்கத்துல ஒரு கிராமத்துலதான் பிறந்தேன். அப்பாவுக்கு சௌதி அரேபியால் வேலை கிடைக்க, நான், அம்மா, அப்பானு எங்களோட சின்னக் குடும்பம் அங்கேயே செட்டில் ஆகிட்டோம். எனக்கு அப்போ மூணு வயசு. பள்ளிப் படிப்பு முழுக்க அங்க முடிச்சிட்டு, கல்லூரிப் படிப்புக்கு சென்னை வந்தேன். இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில் ஐடி  முடிச்சிட்டு, இப்போ 'யங் இண்டியா ஃபெலோஷிப்'ல் பிஜி டிப்ளோமா கோர்ஸ் படிக்க டெல்லி வந்திருக்கேன்!"

''எழுத்தில் ஆர்வம் வந்தது எப்படி?"

''நான் அபுதாபியில் பள்ளிப் படிப்பை தொடங்கினப்போ, ஆங்கிலத்தில் மற்ற மாணவர்களைவிட கொஞ்சம் பின்தங்கி இருந்தேன். அதனால அம்மா எனக்கு சிறப்புப் பயிற்சி கொடுத்தாங்க. கொஞ்ச நாள்ல பேச்சுப்போட்டி, எழுத்துப்போட்டினு க்ளாஸ் ஸ்டார் ஆனேன். நான் படிக்கிற சிறுகதை, நாவல்கள்ல முடிவு எனக்குப் பிடித்தமானதா இல்லைன்னா, என் எண்ணத்துக்கு அதை மாத்தி எழுதுவேன். அப்படித்தான் எனக்கு எழுத்து மேல ஆர்வம் வந்தது”

''உங்கள் புத்தகங்கள் பற்றி?"

'''ஆர்ட் ஆஃப்ட் நோயிங் யுவர் பிளண்டர்ஸ் டூ நேச்சர்' புத்தகத்தை என்னுடைய 13வது வயதில் எழுதினேன். அழிந்து வரும் இயற்கை வளங்கள் பற்றியும், அதை மக்கள் எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதைப் பற்றியும் உரைநடை வடிவில் பேசும் புத்தகம் அது. அப்புறம் சுற்றுச்சூழலை கருவா வெச்சு சில சிறுகதைகள் எழுதினேன்.  ஐக்கிய அரபு நாடுகளில் அதுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. குறிப்பா, 'லயன்ஸ் மெயில் பாக்ஸ்' என்னும் சிறுகதை, துபாயில் நாடகமாக ஆக்கப்பட்டது. அப்படி நான் எழுதின மற்றொரு சிறுகதையின் கருவையே நாவலா விவரிச்சு எழுதினதுதான், சமீபத்தில் வெளியாகியிருக்கிற  'த காட்ஸ் ஆஃப் டைம்' ''

''தமிழில் எழுதுவீர்களா?"

''தமிழ்ல நல்லா பேசுவேன். ஓரளவுக்கு வாசிக்கவும், எழுதவும் தெரியும். 'பொன்னியின் செல்வன்' நாவலை என் பாணியில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்பது என் ஆசை. மூன்று பாகம் வரை எழுதிட்டேன். ஆனா மொழிபெயர்ப்புக்கு இரு மொழிகளிலும் தெளிவான புரிதல் தேவை. அதனால் தமிழை இன்னும் முழுமையா கத்துக்கிட்டுதான் அந்த வேலையைச் செய்யணும்னு இருக்கேன்.''

''படிப்பு, எழுத்து... எப்படி சமாளிக்கிறீர்கள்?''

''செகண்ட் இயர், தேர்ட் இயர்ல ரொம்ப சிரமமாதான் இருந்தது. ஆனா எந்தக் காரணத்துக்காகவும் எழுத்தை விட்டுத்தரக் கூடாதுனு உறுதியா இருந்தேன். அது போலதான் படிப்பையும். இப்போ ரெண்டையும் பேலன்ஸ் பண்ணக் கத்துக்கிட்டேன்.''

''பிடித்த எழுத்தாளர்கள்..?"

''ஜே.கே. ரௌலிங், சார்லஸ் டிக்கன்ஸ், லூயிஸா மே அல்காட்."

''10 வருடங்களுக்குப் பின் ஆர்த்தியின் அடையாளம் என்னவாக இருக்கும்?"

''ஐடி படிச்சிருக்கிறதால கம்ப்யூட்டரை ஹக் பண்ணிட்டுதான் எதிர்காலத்தைக் கடக்கணும். இருந்தாலும், அது வேலை. என் அடையாளமா என் எழுத்துதான் இருக்கும். ஃபிக்‌ஷன், நான் ஃபிக்‌ஷன்னு நிறைய ஐடியாக்கள் இருக்கு. பெண்களின் சுயமுன்னேற்றத்தில் என் எழுத்தும் சிறு துளியா பங்களிக்க விரும்புறேன்.'' 


- எஸ்.எம். கோமதி
(மாணவப் பத்திரிகையாளர்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்