Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அப்படி என்னதான் நடக்கிறது ஆன்லைன் ரம்மியில்? - கலங்கடிக்கும் பின்னணி!

‘ஒண்ணு வெச்சா ரெண்டு.. ரெண்டு வெச்சா நாலு’ கணக்காக, நாளொரு விளம்பரமும் பொழுதொரு அறிவிப்புமாக நம்மைச் சீட்டு விளையாட அழைத்துக் கொண்டிருக்கின்றன பல இணைய தளங்கள். ரம்மி சர்க்கிள், ஜங்கிள் ரம்மி, க்ளாஸிக் ரம்மி, ரம்மி மில்லியனர் என்று தொடங்கி பலரும் இதை ஒரு மிகப்பெரிய வியாபாரமாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

பிரகாஷ்ராஜ், ராணா போன்ற பிரபலங்கள் தோன்றும் விளம்பரங்கள் இழுப்பது ஒருபுறம் என்றால், ‘நான் ஒரு லட்சம் ஜெயித்தேன்.. நான் 50000 ஜெயித்தேன்’ என்று ஷமீர், குல்கர்னி என யாராரோ இன்னொரு புறம் நம்மை ஈர்க்கப் பாடுபடுகிறார்கள்.

இந்த ஆன் லைன் விளையாட்டுகள், பாதுகாப்பானதா என்பதைவிட தேவையா என்று பார்க்க வேண்டியதாய் இருக்கிறது. மக்களை ஈஸியாக இழுக்கிற, வலையில் விழவைக்கிற ஆட்டங்களில் ரம்மிக்கு முதலிடம் தரலாம். உள்ளே செல்பவர்கள், தொடர்ந்து விளையாடிக்கொண்டே இருக்கலாம் என்பதால், ஒருமுறை தோற்றாலும் அடுத்தமுறை ஜெயிக்கிற ஆசையில் விளையாடிக்கொண்டேதான் இருப்பார்கள்.

இந்தத் தளங்களில், விளையாடி வரும் சிலரைத்தொடர்பு கொண்டோம். அவர்கள் சொல்கிற விஷயமெல்லாம் கொஞ்சம் கிலி ஏற்படுத்தத்தான் செய்கின்றன.

“ஒரு தடவை விளையாடிட்டீங்கன்னா.... அப்பறம் அது உங்களை உள்ள இழுத்துடும். ரம்மி ஒரு மிகப்பெரிய அடிக்‌ஷன். என் தம்பி ஃப்ரெண்ட் விளையாடிட்டிருந்தப் பார்த்து திட்டின நானே ஒரு நாள் அதில் அப்படி என்னதான் இருக்கிறதென பார்ப்போமே என இணைந்தேன். ஒரு கட்டத்துல, ஆஃபீஸ் லீவு போட்டுட்டு விளையாடும் அளவுக்குப் போய்விட்டது” என்கிறார் திருச்சியைச் சேர்ந்த மூர்த்தி.

”நேரத்தை ரொம்பவும் சாப்பிடும்” என்று பயமுறுத்துகிறார் போரூரைச் சேர்ந்த பொறியாளர் ஆதிமூலகிருஷ்ணன். “ஒரு முழு ஞாயிற்றுக்கிழமையும் இதுல உட்கார்ந்தேன் நான். அதுக்கு முந்தின நாள்தான் ஐநூறு ரூபா ஜெயிச்சிருந்தேன். அந்த உற்சாகம்! போகிற காசை விட, இதுக்கு செலவழிக்கற நேரம்தான் ரொம்பவே பயமுறுத்த ஆரம்பிச்சது. அடுத்த நாளே அன் இன்ஸ்டால் பண்ணிட்டேன்” என்கிறார் இவர்.

‘உங்க அக்கவுண்ட்ல பணம் போட்டவுடனே வர்ற முதல் கேம், நல்லா ஜெயிக்கிறாப்பல வரும். ஆர்வத்துல தொடர்ந்து விளையாடினிங்கன்னா அப்புறம் நாமம்தான்! ஆனா ஒண்ணு, ஜெயிச்ச காசை ரிக்வஸ்ட் கொடுத்தா, ரெண்டு நாளில் நம்ப வங்கிக் கணக்குக்கு போட்டுவிட்டுடுறாங்க’ இப்படிச் சொல்கிறார் பேர்லாம் வேண்டாங்க எனும் நண்பர். 

இந்த விளையாட்டில் உங்களுடன் விளையாடுவது யார் என்பது உங்களுக்குத் தெரியாது. நாம் தொடர்பு கொண்ட பலரும் ஒப்புக்கொள்கிற விஷயம் ஒன்று உள்ளது. ’ஏதாவது ஒரு ஆட்டத்தில், நீங்க நூறோ, இருநூறோ ஜெயிச்சீங்கன்னா தொடர்ந்து வர்ற பல ஆட்டங்கள்ல ஜெயிக்கவே முடியாது. 99% அப்படித்தான் அமையும். விளையாட வேண்டாம்னு கார்டை ஸ்கூட் (டிராப்) பண்ற மாதிரி சேரவே சேராத கார்டுகள் வந்தாலும் பரவால்லை, மூணு ஜோக்கர், நிறைய ரம்மி சான்ஸ்னு கார்டு வரும். ஒரு கார்டு வந்தா முடிஞ்சுடும் என்பது மாதிரி இருக்கும். ஆனா கூட விளையாடற அஞ்சாறு பேருக்கு கார்டு போய்ட்டு வர்றதுக்குள்ள ஹார்ட் அட்டாக் வர்ற அளவுக்கு டென்ஷனாகும். எத்தனை ரவுண்ட் போனாலும் உங்களுக்கான அந்த ஒரு கார்டு வரவே வராது. மொத்தப் பணமும் போய்விடும்’ என்கிறார்கள். அது அப்படி ப்ரோக்ராம் செய்யப்பட்டிருக்கலாம், விளையாடும் ஐந்தில் நிச்சயம் ஒன்றோ, இரண்டோ கம்ப்யூட்டரால் இயக்கப்படும் ப்ரோக்ராமோ என்கிற சந்தேகம் எங்களுக்கு அழுத்தமாக உண்டு என்கிறார்கள் இவர்கள். இன்னும் கூட பல டிரிக்கியான அமைப்புகள் உள்ளன என்றும் சந்தேகிக்கிறார்கள். நீங்கள் வெறுமனே ரம்மியில் தேர்ந்த நபராக மட்டும் இருந்தால் உங்கள் பணம் கோவிந்தா ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம்!

இதில் பல வகையான விளையாட்டுகள் உண்டு.

*இரண்டு பேர் கொண்ட டேபிள், மற்றும் ஆறு பேர் விளையாடும் டேபிள் என நம் விருப்பத்துக்கேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்ட வகை ரம்மிகளும் உள்ளன. நாக்கவுட் வகை, பாயிண்ட்ஸ் வகை, 101 பாயிண்ட்ஸ், டீல்ஸ் வகை என நமக்குப் பிடித்த வகையில் விளையாட முடியும்.

*ஒரு பாய்ண்டுக்கு ஐந்து பைசா முதல், 50 ரூபாய், 100 ரூபாய் வரை வைத்து விளையாடலாம். ஒரு கேமில் ஜெயித்தாலும் தோற்றாலும் நிறுத்திவிட்டு வெளியே வந்துவிடலாம்.

*Pool Rummy. இரண்டு பேர் அல்லது ஆறு பேர் சேர்ந்து விளையாடலாம். ஆளுக்கு நூறு ரூபாய் என்றால் ஜெயிக்கறவருக்கு 500 ரூபாய்க்கு மேல் கிடைக்கும்.

*அத்தனை விளையாட்டுகளிலுமே, யார் ஜெயித்தாலும் குறிப்பிட்ட சதவீத தொகை  ‘கம்பேனி’க்குப் போய்விடுகிறது.

* டோர்னமெண்ட் என்றொரு வகை இருக்கிறது. 8 மணிக்கு டோர்னமெண்ட் என்றால், இரண்டு மூன்று மணிநேரங்களுக்கு முன்னதாக ரெஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும். ஐயாயிரம் பேர் எல்லாம் கூட விளையாடுவார்கள். ஒவ்வொரு ரவுண்டாக ஆட்கள் வெளியேறி கடைசி டேபிளில் ஆறு பேர் விளையாடுவார்கள். அதில் ஜெயிக்கறவர் ஒரு பெரிய தொகையை ஜெயிக்க முடியும். இதில்தான் ஆயிரங்களில் கட்டணமும், லட்சங்களில் பரிசுத்தொகையும் இருக்கிறது. இதில் ஜெயிப்பவர்கள்தான் விளம்பரங்களில் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறார்கள். 

*புதிய ஆட்களைக் கவரவும், தோத்தாக்குளிகளை ஆறுதல் படுத்தவும் சில டோர்னமண்ட்களில் இலவச அனுமதியும் உண்டு. இது வாரத்துக்கு ஒன்றிரண்டு கேம்கள் நடக்கும். கூட்டம் பிய்ச்சுக்கும்!

*இதுபோக, புதியவர்கள் பழக டிரையல் கேம்களும் உண்டு. இதற்கு பணம் எதுவும் இல்லை. ஒப்புக்கு சப்பாணியாக விளையாடி, வார்ம் அப் செய்துகொள்ளலாம். 

இதில் சூட்சுமம் அல்லது சூழ்ச்சி என்னவென்றால், இந்தத் தளங்களை நிர்வகிக்கறவர்களே Blog உருவாக்கி ரம்மி விளையாட சிறந்த தளம் இதுதான். இதில் நிறைய பணம் சம்பாதிக்கலாம், அதில் நிச்சயம் பணம் சம்பாதிக்க முடியும் என்கிற ரீதியில் வாசகர்கள் எழுதியதுபோல எழுதிக் கொள்கிறார்கள்.  எல்லா வகை கேம்களும், புதியவர்கள் கூட எளிதாக புரிந்துகொள்ளும்படி, எளிதாக விளையாடும்படி யூஸர் ப்ஃரெண்ட்லியாக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ரொம்பவே கவர்ச்சியாகத்தான் இருக்கும்! உள்ளே போனால், டவுசர் தப்புவது கஷ்டம்தான்! 

அரண்மனைக்கிளி ராஜ்கிரண் போல டவுசர் ஸ்ட்ராங்காக இருந்தால் இறங்கி விளையாடிப்பாருங்கள்!!

கேமிங் என்பது சட்டத்தால் சரிவர நடைமுறைப்படுத்தப்படாததால்,  இதைத் தடை செய்யச் சொல்லி ராமதாஸ் போன்றவர்கள் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். சட்டத்திலிருக்கும் ஒன்றிரண்டு ஓட்டைகளை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு இப்படியான விளையாட்டுக்களை உருவாக்கியிருக்கிறார்கள் என்று சொல்பவர்களுக்கு மத்தியில், ‘அதெல்லாம் கரெக்டாதான் இருக்கும்’ என்று நினைப்பவர்களும் உண்டு. அதற்காக இந்த கேம் டெவலப்பர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தால், ம்ஹும்! அவ்வளவு ஈஸியாக இல்லை அது. இந்த விளையாட்டின் மெக்கானிசம் குறித்து அதை நடத்துபவர்கள் விரிவாக விளக்கமளிக்க முன்வந்தால், அதைப் பிரசுரிக்கத் தயாராகவே இருக்கிறோம்!

-பரிசல் கிருஷ்ணா

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement