Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்த சின்ன சின்ன விஷயங்களுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்களேன்...! #MorningMotivation

எவ்வளவு வேலைகள் இருந்தாலும் சில விஷயங்களில் நாம் கவனம் செலுத்தியே ஆக வேண்டும். அப்படி மூன்று விஷயங்கள் உங்களுக்காக...

1. செயல் : 
அலுவலகத்திலோ வீட்டிலோ தினசரி வேலைகள் போக தினம் புதிதாக ஏதாவது முயற்சி செய்து பார்த்திருக்கிறீர்களா? அட அதுக்கெல்லாம் எங்கங்க நேரம் இருக்கு. காலையில அலாரம் அடிச்சுதலருந்து இரவு அடுத்த நாளுக்கான அலாரம் செட் பண்ற வரைக்கும் ஒவ்வொரு நாளுமே இப்படித்தான் போகுது என புலம்புவர்களே அதிகம். இன்று கொஞ்சம் அந்த எண்ணத்தை குறைத்துக்கொள்ளுங்கள். புதுசா கெத்தா ஸ்டைலா நிறைய விஷயம் பண்ணலாம். வழக்கமாக உங்களைத் தவிர ஊரையே எழுப்பிவிட்டு உங்களை எழுப்பும் அலாரத்துக்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்களேன். நாளை என்ன நேரத்துக்கு எழ வேண்டும் என்பதை இன்று இரவே உங்கள் மூளைக்கு ஒரு சின்ன மெசேஜ் தட்டி விட்டு உறங்க செல்லுங்கள். முதல் இரண்டு மூன்று நாட்கள் கொஞ்சம் சொதப்பலாம். ஆனால் அதற்குப்பிறகு தினம் அலாரம் இல்லாமலே நினைத்த நேரத்துக்கு எழ ஆரம்பிக்கும்போது காலையிலேயே நல்ல மனநிலையோடு செயல்பட துவங்குவீர்கள். அலுவலகத்துக்கு, கல்லூரிக்கு என நீங்கள் தினம் தினம் செல்லும் வழி தவிர்த்து புதிய வழியில் செல்வது, புதிய நண்பர்களுடன் உணவருந்த செல்வது என சின்ன சின்ன விஷயங்களிலும் ஒரு குட்டி மாற்றத்தை ஏற்படுத்துங்கள். சில நாட்களிலேயே உங்களுக்கான இடத்திலிருந்து வேற லெவலுக்கு உயர ஆரம்பித்திருப்பீர்கள்.

2. உணவு :
நீங்கள் எந்த வேலை செய்வபராக இருந்தாலும் சரி. உங்கள் வேலைக்கும் தினசரி பணிகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தில் உணவுக்கு கொடுக்கவில்லையென்றால் முன்னெடுக்கும் எந்த வேலையிலும் உங்கள் கவனத்தையும் முழுமையான ஆற்றலையும் செலுத்த முடியாது. இரவு உணவை முடித்துவிட்டு உறங்க சென்று ஏறத்தாழ சுமார் 10 மணி நேரத்துக்கு பிறகு தான் காலை உணவை எடுத்துக் கொள்கிறோம். அந்த நேரத்தில் காலை உணவை தவிர்த்துவிட்டு டீ/காபி மட்டும் அருந்திவிட்டு செல்வது சரியானதல்ல. இதே போல ஒவ்வொரு நாளின் மதிய உணவுக்கும் நல்ல ஊட்டச்சத்துடன் கூடிய உணவை சாப்பிட எடுத்துக் கொள்ளவேண்டும். ஒரு சிலருக்கு சாப்பிட்டவுடன் குட்டித் தூக்கம் போடும் நல்ல பழக்கமிருக்கும். பெரும்பாலானோர் அதைத் தவறென்றே நினைத்திருப்போம். சாப்பிட்டவுடன் அரக்கப் பறக்க ஓடி வேலையில் முழ்கி விடாமல் கொஞ்சம் உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு கொடுங்கள். தினமும் இரவு உணவை சரியான நேரத்தில் எடுத்துக் கொண்டு உறங்க செல்வதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளையும் சோர்வில்லாமல் கடந்திட உணவு நல்லது வேண்டும்!


3. பேச்சு : 

"உங்களுக்கு பேசத் தெரியுமா?"

- இப்படி யாராச்சும் உங்ககிட்ட கேட்டா என்ன செய்விங்க. "யாரை பாத்து என்ன கேள்வி கேட்ட, என்ன பார்த்த எப்படி தெரியுது. நான் எவ்ளோ நல்லா பேசுவேன் தெரியுமா? ஸ்கூல் பேச்சுபோட்டில முதல் பரிசெல்லாம் வாங்கியிருக்கேன்" என அந்த இடத்தில் ஒரு சின்ன பட்டிமன்றமே நடத்தி விடுவோம். இப்படி ஒவ்வொரு விஷயத்திலேயும் நீண்ட விளக்கம் அளித்துக் கொண்டிருக்கும் பொழுது நம் நேரத்தை வீணாக்குவதோடு அல்லாமல் நம்மை சுற்றி இருப்பவர்களின் நேரத்தையும் மறைமுகமாக வீணாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பது தான் உண்மை. நம் வாழ்க்கையில் பெரும்பாலான நேரத்தை பேச்சுக்காகவும் பிறருடனான தகவல் பரிமாற்றங்களுக்காகவே செலவழிக்கிறோம். 

நன்றாக யோசித்துப் பாருங்கள் உங்களை சுற்றி இருப்பவர்களிடம் பேசாமலோ, ஒரு சின்ன உதவியை எதிர்பார்க்காமலோ ஒருவரால் இருந்து விட முடியுமா? நிச்சயமாக முடியாது. ஏதாவதொரு வகையில் பேச்சின் மூலமாகவோ,உடல் அசைவுகளின் மூலமாகவோ தகவல் பரிமாற்றத்தை செய்து கொண்டு தான் இருக்கிறோம். வாட்ஸாப்பில் ஒரு மெசேஜ் தட்டி விடுவது கூட தகவல் பரிமாற்றம் தானே. பேச்சும், தகவல் தொடர்பும் ஒரு தனிக்கலை. ஆனால் பெரும்பாலான நேரங்களில் இந்த கலை பலருக்கு கைகூடுவதே இல்லை என்பதுதான் உண்மை. நாம் பேசும் ஒவ்வொரு சொல்லும் நம்மை அடையாளப்படுத்தக் கூடியவை. எப்பொழுதும் நல்ல விதமான சொற்களையே தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். அது உங்களைச் சுற்றி இருப்பவர்களை உற்சாகப்படுத்துவதோடு உங்களையும் நல்ல மனநிலையில் வைத்திருக்கும். ஒரு நாளை இனிமையாய் வைத்துக் கொள்வதற்கு நல்ல மனநிலை தானே முக்கியம்...! 


- க. பாலாஜி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement