Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையை கிடுகிடுக்கச் செய்த எமகாதக ‘எம்டன்’!

சென்னையின் தூக்கம் தொலைத்த எமகாதக ‘எம்டன்’ - அது என்ன நிகழ்வு தெரியுமா?

’எம்டன் வந்துட்டான்’ என்று கிராமப்புறங்களில் சொலவடை ஒன்று உண்டு. தந்திரசாலிகளைத், திறமைசாலிகளை, அதிகமாகக் கோபப்படுபவர்களை, எதிர்பாராத நேரத்தில் உட்புகுந்து சண்டையைக் கிளப்பிவிட்டு பூகம்பத்தை உண்டாக்குபவர்களை இந்தப் பெயரைச் சொல்லி செல்லமாக அழைப்பார்கள் கிராமத்துப் பெரியவர்கள். அந்த வார்த்தை எதிலிருந்து பிறந்தது என்று யாரேனும் யோசித்திருப்பீர்களா?

’எம்டன்’ என்றால் எமதர்மனின் சுருக்கம் என்று கதையடித்து விடுபவர்களும் உண்டு. ஆனால், உண்மையில் எம்டன் என்பது ஒரு வேற்றுமொழிப் பெயர்.  இன்னும் சொல்லப்போனால், சென்னையை போர் பயத்தில் தத்தளிக்க வைத்து, ஆட்டிவைத்த ஜெர்மானியக் கப்பல் ஒன்றின் பெயர்தான் ‘எம்டன்’. எனினும், எம்டனையும் எமன் என்றே அழைக்கலாம். அந்தக் கப்பல் செய்த வேலைகள் அப்படிப்பட்டவை. 

அது 1914 ஆம் ஆண்டு...உலகப்போர் மும்முரமாக தொடங்கி நடந்துகொண்டிருந்த சமயம். மூன்று மாதங்கள் போரின் நிழலிலேயே கரைந்து விட்டது. இதையெல்லாம் அறியாத சென்னையோ ஆங்கிலேயரின் பிடியில் சிக்கிக் கொண்டிருந்தது. இரவின் பிடியில் சலனமற்று தூங்கிக் கொண்டிருந்தது அன்றைய மதராஸ்...இன்றைய சென்னை. அன்று செப்டம்பர் 22 ஆம் தேதி. இரவின் இருளைக் கிழித்துக் கொண்டு, சென்னை உயர்நீதிமன்றக் கட்டிடத்தின் மீது அமைந்திருந்த கலங்கரை விளக்கம் மட்டும் மெல்லிய ஒளியை சுற்றுமுற்றும் பாய்ச்சிக் கொண்டிருந்தது. 

மின்சார பயன்பாடு இல்லாத காலமது என்பதால் சிம்னி விளக்கின் ஒளியில் சென்னைவாசிகள் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். இரவு சரியாக 9.30 மணியளவில் அந்த எமகாதக எம்டன், கலங்கரை விளக்கத்தின் ஒளியில் மெதுவாக வங்காள விரிகுடாவில், 2,250 நாட்டிகல் தொலைவில் முற்றுகையிட்டு நின்றது. ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட எதிரி நாட்டுப் போர்க்கப்பல்களை மூழ்கடித்து, நீருக்கு இரையாக்கியிருந்தது எம்டன். 20க்கும் மேற்பட்ட பீரங்கிகள் பொருத்தப்பட்டிருந்த எம்டனின் கேப்டன், போர்த்திறனிலும், தொழில்நுட்பங்களிலும் சிறந்து விளங்கிய வான்முல்லர். 

தமிழகத்தையே ஆட்டிப் படைத்த ஆங்கிலேயர்களின் கண்களில் அந்த நள்ளிரவில் விரலை விட்டு ஆட்டத் தொடங்கியது எம்டன். எம்டனில் இருந்து கணநேரத்தில் புறப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பீரங்கிக் குண்டுகள் மதராஸின் மீது மழையாய்ப் பொழிந்தது. இரவு உணவில் லயித்திருந்த பிரிட்டிஷ் கடற்படை அதிகாரிகள் சுதாரிப்பதற்குள் இந்த தாக்குதல் சூடு பிடித்தது. 

கண்ணிமைக்கும் நேரத்தில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் வீழ்ந்து வெடித்தது எம்டன் ஏவிய குண்டுகள். சென்னையின் பல இடங்கள் தீயின் நாக்குகள் தழுவிய நிலையில் கொழுந்து விட்டு எரிந்தன. ஆங்கிலேயருக்குச் சொந்தமான பர்மியக் கம்பெனி எண்ணெய்க் கப்பல்கள் தீக்கிரையாகி கடலினுள் அமிழ்ந்தன. ஆங்கிலேயர்களுடன், சென்னை மக்களும் அன்று தூக்கத்தைத் தொலைத்தனர். 

அதே ஆண்டு, நவம்பர் மாதம் 9ம் தேதி, ஆஸ்திரேலிய கப்பலான ‘சிட்னி’ தன்னுடைய வலுவான பீரங்கிகளால் தாக்கி மூழ்கடித்தது. பிரிட்டிஷ் கடற்படைக் கப்பல்களின் பாதுகாப்பையும் மீறி, ஆங்கிலேயர்கள் எதிர்ப்பார்த்திருக்காத தருணத்தில் தாக்குதல் நடத்திய எம்டனின் துணிச்சலும், தந்திரமும் அந்தக் கப்பல் சென்றபிறகும் கூட அதன் பெயரை தமிழகத்தில் நிலைத்திருக்க வைத்தது. இன்றுடன், எம்டன் கப்பல் சென்னையைத் தாக்கி 102 வருடங்கள் ஆகிறது. இனி எங்கேனும் ‘எம்டன்’ என்கிற வார்த்தையைக் கேட்டால் இந்த வரலாறு உங்களுக்கு ஞாபகம் வரும்தானே?!

-பா.விஜயலட்சுமி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement