வெளியிடப்பட்ட நேரம்: 19:08 (22/09/2016)

கடைசி தொடர்பு:11:46 (23/09/2016)

அம்மாவின் கனவை நினைவேற்ற, பேக்கரி நடத்தும் 8 வயது சிறுவன்

"ரெண்டு பப்ஸ் கொடுங்கண்ணா?" என்று பேக்கரிக்குள் நுழையும்போதே குரல் கொடுப்பதுதான் நமது வழக்கம். அங்கு இருப்பவருக்கு நம்மை விட வயதில் அதிகமா, குறைவா என்றெல்லாம் யோசிப்பதில்லை. ஆனால் அமெரிக்காவின் கலிஃபோரினியாவில் உள்ள ஒரு பேக்கரிக்குச் செல்பவர்களை க்யூட்டான சின்னஞ்சிறு குரல் வரவேற்கிறது.

அந்தக் குரல் எட்டு வயது ஜலென் பெய்லிக்கு உடையது. வீட்டிலேயே கல்வி கற்றுவரும் ஜலென், சமீபத்தில் அம்மாவின் உதவியுடன்  பேக்கரியைத் தொடங்கி தானே உணவுப் பொருட்களையும் தயாரித்து விற்கும் செய்திதான் நகரின் முக்கியப் பேச்சே. 'ஜலென்ஸ் பேக்கரி' என்ற பெயரில் தொடங்கியிருக்கும் தன் கடைக்குத் தேவையான கேக்ஸ், குக்கீஸ், சாக்லெட்ஸ், சிப்ஸ் எனப் பலவகை உணவுப் பொருட்களை, தானே தயரித்துவிடுகிறார்.

விளையாடியே நேரத்தை கழிக்கும் பருவத்தில் ஜலெனுக்கு எப்படி வந்த ஐடியா?

'' நாங்கள் வாடகை வீட்டிலேயே வசித்துவருகிறோம். அம்மாவுக்கு எப்படியாவது சொந்த வீடு வாங்கவேன்டும் என்பதுதான் கனவு. வீடு வாங்க நிறைய பணம் வேண்டும் இல்லையா? அதனால்தான் இப்போதிலிருந்தே அதற்கான முயற்சியைத் தொடங்கிவிட்டேன். நிச்சயம் அம்மாவின் கனவை நிறைவேற்றுவேன்'' எனச் சொல்லி வியக்க வைக்கிறார் ஜலென்,

நிறைய வேலைகள் இருக்க பேக்கரியைத் தொடங்கியது ஏன் என்று அவரின் அம்மா ஷர்ஹோன்டா மஹனிடம் (Sharhonda Mahan) கேட்டால்,

''சிறுவயதில் இருந்தே ஜலெனுக்கு சமையல் என்றால் பிடிக்கும். அதனால் கடந்த இரண்டு வருடங்களாக பட்டர் பிஸ்கெட்ஸ், பிரெட், கேக்ஸ், சிப்ஸ் போன்ற பேக்கரி ஐட்டம்ஸ்களைத் தயார் செய்வதைக் கற்றுகொடுத்து வந்தேன். அதைச் சுலபமாக கற்றுக்கொண்ட ஜெலன், தானாகவே தயாரிக்கும் அளவுக்கு நம்பிக்கை வந்ததும் பேக்கரி கடையை ஆரம்பிக்க தீர்மானித்தோம்'' என்கிறார்.

 

உணவுப் பொருட்களைத் தயாரிப்பது சின்ன பையன் தானே என்று லேசாக எடைப் போட்டு விடாதீர்கள். ஜலென் தயாரிக்கும்  பேக்கரி ஐட்டம்ஸ் தரமானதாகவும் ருசியாகவும் இருப்பதால் ஜலென்ஸ் பேக்கரிக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதுடன், சுகாதாரத் துறையும் பாராட்டி, அனுமதி வழங்கியுள்ளது.

jalensbakery.com என்ற பெயரில் இணையதளத்தையும் தொடங்கியுள்ளார் ஜலென். அதிலும் ஆர்டர்கள் குவிகின்றன. அவற்றை டெலிவரி செய்ய அம்மா உதவுகிறார். ஜலென்ஸ் பேக்கரி என்ற பெயர்கொண்ட டி-ஷர்ட்களை விற்று வருவது கூடுதலான விஷயம்.

ஜலெனின் முயற்சிகள் வெற்றி பெறட்டும்.

-என்.மல்லிகார்ஜுனா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்