வெளியிடப்பட்ட நேரம்: 11:07 (02/10/2016)

கடைசி தொடர்பு:17:27 (07/02/2018)

'ஏன் காமராஜர் வழியை பின்பற்ற வேண்டும்...?' காமராஜர் நினைவு தினம் சிறப்பு பகிர்வு

Kamarajar With Children

‘‘சுதந்திரம் என்றால் பயமில்லாது வாழ்வதுதான். பயமில்லாது வாழ நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்’’ என்றவர் பெருந்தலைவர் காமராஜர். அதற்குத் தகுந்தாற்போல் வாழ்ந்துகாட்டியவர் அவர். அவருடைய நினைவு தினம் இன்று. இந்திய நாட்டில் பெரும் தேசியத் தலைவர்களாகத் திகழ்ந்தவர்களில் பெரும்பான்மையினர், பட்டம் பெற்றவர்களாவும் வழக்குரைஞர்களாகவும் இருந்து அரசியலில் குதித்தவர்கள். ஆனால், காமராஜர் மட்டும்தான் சாதாரண கல்வியறிவு பெற்றிருந்தும் பாரதத்தின் பெருந்தலைவர்களில் ஒருவராக உயர்ந்து மக்களுக்கு வழிகாட்டியவர். 


எதிர்த்தவர்களையே தன்னுடன் சேர்த்துக்கொண்டவர் !

‘‘அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் சண்டையிடும்போது அது மக்களுக்குக் கோழிச்சண்டையைப் பார்ப்பதுபோல் வேடிக்கையளிப்பதாக உள்ளது. ஆகவே, வீண் சண்டைகளை, சர்ச்சைகளை அரசியல்வாதிகள் தவிர்க்க வேண்டும்’’ என்றார் காமராஜர். ஆனால், எந்த அரசியல்வாதிகள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்? அரசியலில் தன்னை எதிர்த்தவர்களையே தன்னுடன் சேர்த்துக்கொண்டவர் அவர். 1953-54-ம் ஆண்டில் தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட இருந்த நேரத்தில் முதல்வர் பதவிக்கு சி.சுப்பிரமணியமும் போட்டியிட்டார். முதல்வர் பதவிக்கு சுப்பிரமணியம் பெயரை பக்தவத்சலமே முன்மொழிந்தார். தேர்தலில் காமராஜர் வெற்றிபெற்றார். இதனால் சுப்பிரமணியமும், பக்தவத்சலமும் திகைத்துப்போனார்கள். தனது செயலுக்காக காமராஜரிடம் வருத்தம் தெரிவித்துக்கொண்டார் பக்தவத்சலம். இந்த நிலையில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சுப்பிரமணியத்தையும், அவரை ஆதரித்த பக்தவத்சலத்தையும் மந்திரி சபையில் சேர்த்துக்கொண்டார். இதுபற்றி சிலர் காமராஜரிடம் கேட்டபோது, ‘‘என்னை எதிர்த்தவர்கள் என்பது ஒருபக்கம் இருக்கட்டும். ஏற்கெனவே மந்திரிகளாய் பதவி வகித்து அனுபவம் பெற்றிருக்கும் அவர்கள் சேவை, நாட்டுக்குப் பயன்பட வேண்டாமா’’ என்று பதிலளித்தார்.


அவ்வாறு செய்யாதது அவர்கள் தவறு !

காமராஜர் பயின்ற பள்ளியில் ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு பிரசாதம் வழங்கப்படும். பிரசாதம் விநியோகிக்கப்படும்போது மாணவர்கள் முண்டியடித்துக்கொண்டு சென்று, ஒரு தடவைக்கு இரண்டு தடவையாகப் பிரசாதத்தைக் கைநிறையப் பெற்றுக்கொள்வார்கள். பிரசாதத்துக்காக அந்த மாதிரி முண்டியடித்துக்கொண்டு செல்வது காமராஜருக்குப் பிடிக்கவில்லை. ஆகவே, ஒரு மூலையில் ஒதுங்கி நின்றார். கடைசியாக மிச்சமிருந்த பிரசாதத்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றார். ‘‘எல்லோரும் நிறைய பிரசாதம் வாங்கிக்கொண்டு செல்லும்போது, நீ மட்டும் குறைவாக வாங்கிவந்தது ஏன்’’ என வீட்டில் உள்ளவர்கள் கேட்டனர். ‘‘மற்ற மாணவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு சென்று பிரசாதம் வாங்க எனக்கு விருப்பமில்லை. பள்ளியில் எல்லா மாணவர்களிடமும் ஐந்து காசு வசூலித்தவர்கள், ஒரே மாதிரியாகப் பிரசாதம் வழங்கியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது அவர்கள் தவறு’’ என்றார் காமராஜர். அரசியல் தவிர அனைத்து சிக்கலான பிரச்னைகளையும் எளிதாகச் சமாளிக்கும் ஆற்றல் பெற்றவர் காமராஜர். 

Kamarajar with Periyar


எந்த அவசியமும் இல்லை!

காமராஜர் சிறையில் இருந்த காலத்தில் விருதுநகர் நகராட்சியின் தலைவராக அவரையே உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தனர். காமராஜர், விடுதலை பெற்றபின் அவரிடம் இதுபற்றிச் சொல்லி நகராட்சி அலுவலகத்துக்கு அழைத்துவந்தார்கள். அங்கு வந்த அவர், நடந்திருக்கும் வேலைகள் பற்றிச் சம்பந்தப்பட்டவரிடமும், கோப்புகள் மூலமும் அறிந்துகொண்டார். பின்னர் அவர், ‘‘இங்கே நான் தலைவராக இல்லாமலேயே எல்லாப் பணிகளும் ஒழுங்காக நடந்திருக்கின்றன. எனவே, நான் இங்கே இருந்து பணியாற்ற எந்த அவசியமும் இல்லை’’ என்று சொல்லிவிட்டு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு விடைபெற்றார் காமராஜர்.

ஒருமுறை தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது காமராஜர் மேடையில் அமர்ந்திருந்தார். அப்போது பேச்சாளர் ஒருவர், ‘‘காங்கிரஸ் ஆட்சிக்கு வருமானால், உழுபவனுக்கு நிலம் சொந்தமாகும்’’ என்றார். அடுத்துப் பேசிய காமராஜர், ‘‘நடக்கிறதைச் சொல்லணும்... நம்புகிறதைச் சொல்லணும். உழுபவனுக்கு நிலம் சொந்தமாகணுமின்னு சொல்றீங்க. சரி… காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், அப்படியே தந்துவிடுவதா வச்சுக்குவோம். அப்புறம் நெல் அறுக்கிறவன், அறுக்கிறவங்களுக்கே நெல் சொந்தம் என்பான். அதை அரைக்கிறவன், அரைக்கிறவனுக்கே அரிசி சொந்தமின்னு சொல்வான்’’ என்று காமராஜர் சொன்னதும், அந்தப் பேச்சாளர் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் அசந்துபோனார்கள்.

தான் கற்ற கல்வியுடன் 6 ஆண்டுகள் முதல்வராக இருந்து தமிழகத்தைத் தலைநிமிரச் செய்தவர். தமிழ் மொழிக்கு அங்கீகாரம் அளித்தவர்; கல்விக்கூடங்களைத் திறந்துவைத்து மதிய உணவு அளித்தவர்; தொழிற்சாலைகளைப் பெருக்கியவர்; அதனால்தான் இந்திய காங்கிரஸையே வழிநடத்தும் வலிமைமிக்க மனிதராக உயர்ந்தார். 

Kamarajar Old Photoவாழ்வதற்குப் பாதை தேடுகிறேன் !

ஒரு சமயம் காமராஜர் முதல்வராக இருந்தபோது சுற்றுப்பயணம் செய்தார். அப்போது, ‘‘இந்தக் கிராமத்திலே ஏன் பள்ளிக்கூடம் திறக்கப்படவில்லை’’ என்றார் காமராஜர். அதற்கு முதலமைச்சரின் உதவியாளர், ‘‘இந்தக் கட்சிக்காரர்கள் நம் கட்சிக்கு ஓட்டு போடவில்லை. அதனால்தான் பள்ளிக்கூடம் திறக்கப்படவில்லை’’ என்றார். ‘‘இது ஜனநாயக நாடு. மக்கள், தங்கள் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடலாம். அது, அவர்களின் ஜனநாயக உரிமை. அதனால் அரசாங்கம் எல்லோருக்கும் பொதுவானது. உடனே இந்தக் கிராமத்தில் பள்ளிக்கூடம் திறக்கச் செய்யுங்கள்” என்றார் காமராஜர். அதேபோல், மற்றொரு கிராமத்துக்குச் சென்ற காமராஜரிடம்.. அந்த ஊர்த் தலைவர்கள், ‘‘ஐயா! எங்களுக்குச் சுடுகாட்டுக்குச் செல்வதற்குப் பாதை அமைத்துத் தந்திட வேண்டும்’’ என்றார்கள். காமராஜர் இதைக்கேட்டுச் சிரித்துக்கொண்டே, ‘‘நான் நன்றாக வாழ்வதற்குப் பாதை தேடுகிறேன். நீங்கள் செத்தவனுக்குப் பாதை கேட்கிறீர்கள்” என்றார்.

மக்கள் ஏற்கவில்லை என்பதுதான் உண்மை!

1971-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் இந்திரா காங்கிஸ் அமோக வெற்றி பெற்றது. காமராஜர் சார்ந்திருந்த பழைய காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருந்தது. தொண்டர்கள் காமராஜரிடம் சென்று, ‘‘ஐயா! அவர்கள் வெற்றிக்குக் காரணம் ‘ரஷ்ய மை’ வைத்து ஏமாற்றிவிட்டார்கள். வாக்குச்சீட்டில் ரஷ்ய மையைத் தடவிவிட்டார்கள்’’ என்று கூறினார்கள். அதற்கு காமராஜர், ‘‘ஜனநாயகத்திலே நம்பிக்கை உள்ளவர்களின் பேச்சா இது? நாம் தேர்தலிலே தோற்றதற்குக் காரணம் ‘மை’ என்கிறீர்களே! அதுவா உண்மை? இல்லை. நம்மை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை’’ என்று பதில் சொன்னதோடு தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தைக் கொண்டிருந்தவர் காமராஜர்.

Kamarajar with Anna

அமெரிக்கா அதிபர் நிக்ஸனைச் சந்திக்கவில்லை !

நாகர்கோவில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக காமராஜர் இருந்த சமயம், தி.மு.க ஆட்சி தமிழகத்தில் நடந்துகொண்டு இருந்தது. அப்போது, அமெரிக்க அதிபர் நிக்ஸன் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் வந்திருந்தார். அவர் பெருந்தலைவர் காமராஜரைச் சந்திக்க விரும்பினார். புதுடெல்லியிலிருந்து தேதி மற்றும் நேரம் கேட்டுத் தகவல் வந்திருந்தது. இதைக் காமராஜரிடம் கூறினார்கள். ‘‘பார்க்க முடியாது’’ என்று மறுத்துவிட்டார் காமராஜர். ஏன் இப்படிச் சொல்கிறார்? வந்து பார்க்க விரும்புவதோ அமெரிக்க அதிபர். குழப்பமடைந்தார்கள் கூடியிருந்தவர்கள். அவர்களைப் பார்த்துக் காமராஜர் சொன்னார். ‘‘அண்ணாதுரை அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது, அவர் அமெரிக்கா அதிபர் நிக்ஸனைச் சந்திக்க விரும்பினார். பார்க்க மறுத்துவிட்டாராம் நிக்ஸன். அப்படிப்பட்டவரை நான் ஏன் பார்க்க வேண்டும்’’ என்றார் காமராஜர். அண்ணாதுரை, மாற்றுக் கட்சிக்காரர் என்றபோதும் அவருக்கு அமெரிக்க அதிபர் சந்திக்கச் சந்தர்ப்பம் கொடுக்காததற்கு இதன்மூலம் தன் ஆதங்கத்தையும், தமிழன் என்ற தன்மானத்தையும் காத்து பெருமை சேர்த்தவர் காமராஜர்.

ஒருசமயம் காமராஜரும் நேருவும் தென்மாவட்டத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொள்ள காரில் விருதுநகர் வழியாகச் சென்றுகொண்டு இருந்தனர். அப்போது, ஒரு மூதாட்டி சாலை ஓரமாகப் பொதுமக்களோடு நின்று அவர்கள் செல்வதைக் கவனித்துக்கொண்டிருந்தார். அப்போது நேரு... தன் அருகே இருந்த காமராஜரிடம், ‘‘அங்கே சாலை ஓரமாக நிற்கும் மூதாட்டியைப் பற்றித் தெரியுமா’’ என்று கேட்டார். உடனே காமராஜர், ‘‘அது, என் தாய்தான்’’ என்றார். உடனே நேரு, காரை ரிவர்ஸில் எடுக்கச்சொன்னதுடன், காரில் இருந்து இறங்கி காமராஜரின் தாயாரின் கையைப் பிடித்து, ‘‘அந்த அற்புத மனிதரைப் பெற்ற தாயார் நீங்கள்தானா’’ என்று பாசத்துடன் கேட்டார். இதை அங்கு கூடியிருந்தவர்கள் கண்டு பரவசம் அடைந்து ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
 

kamarajar funeral


எனக்கு அந்தப் படிப்பு தேவையில்லை !

காமராஜர் சுருக்கமாகப் பேசினாலும் நறுக்கென்று பேசக் கூடியவர். ‘‘ஆகட்டும், பார்க்கலாமின்னேன்’’ என்றுதான் சொல்வார். ஆனால், அந்தச் செயலையே சாதித்துக் காட்டியிருப்பார். அவர் அதிகம் படிக்காதவர் என்று அடிக்கடி விமர்சிக்கப்பட்டது. அதற்கு காமராஜர் ஒரு கூட்டத்தில் பேசியபோது இப்படிப் பதிலளித்தார். ‘‘நான் படிக்காதவன் என்கிறார்கள். அது, உண்மைதான். ஆனாலும், நான் இன்னொரு படிப்பைப் படித்தவன். தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் இங்கே நகரங்களாகவும், சிற்றூர்களாகவும், கிராமங்களாகவும் எத்தனை ஊர்கள் இருக்கின்றன என்பது எனக்குத் தெரியும். வெறும் ஊர்களை மட்டுமல்லாமல், ஒவ்வோர் ஊரிலும் எவ்வளவு மக்கள் வாழ்கிறார்கள்; எந்தெந்த ஊர்களில் என்னென்ன தொழில்கள் நடக்கின்றன; எந்தெந்த ஊர்களில் என்னென்ன மாதிரி மக்கள் வாழ்க்கைத் தரம் இருக்கிறது என்பதெல்லாம் எனக்கு ஓரளவு தெரியும். எந்தெந்த ஊர்களுக்கு என்னென்ன தேவை என்பதைப் பற்றியும் அறிவேன். மேலும் எந்தெந்த ஊர்களில் விவசாயம் நல்லபடியாக நடக்கின்றன என்பதும் தெரியும். இன்னும் ஏரி, குளங்கள் வசதியும், சாலை வசதியும் தேவைப்படுகிற ஊர்களைப் பற்றியும் அறிவேன். அதுபோல ஒவ்வோர் ஊரிலும் கல்வி வசதியும், சுகாதார வசதியும் எப்படி உள்ளன என்பதையும் அறிவேன். இதுபோல இந்தியாவைப் பற்றியும் ஓரளவு எனக்குத் தெரியும். இந்தப் படிப்பைத் தவிர, ஒரு வரைபடத்தில் குறுக்கு, நெடுக்காகப் போடப்பட்ட கோடுகளை அறிந்துகொள்வதே பூகோளம் என்றால், அந்தப் பூகோளத்தை அறிந்துகொள்வதுதான் படிப்பு என்றால், எனக்கு அந்தப் படிப்பு எல்லாம் தேவையில்லை’’ என்றார் காமராஜர். அதனால்தான் முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன், ‘‘ஆறாவதுவரை படித்தவர்தானே என்ற அலட்சியத்துடன் முதல்வர் காமராஜரின் அறைக்குள் அலட்சியமாக நுழைவார்கள் அதிகாரிகள். வெளியே வரும்போது அவர்களின் வால், கால்சட்டைக்குள் மடக்கிச் சொருகப்பட்டு இருக்கும்’’ என்று புகழ்ந்திருக்கிறார். 

‘‘ஒன்றைச் செய்ய விரும்புகிறபோது அதைச் செய்வதற்காகவே இருக்கிறோம் என எண்ண வேண்டும்’’ என்று எண்ணிய காமராஜரின் வழியை நாமும் கடைப்பிடிப்போமே!


- ஜெ.பிரகாஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்