பாரதியின் உத்வேக வார்த்தைகள்! #MorningMotivation

புதிய ஆத்திச்சூடியில் மகாகவி பாரதி சொல்லும் உத்வேக வார்த்தைகள் இவை.. காலையை உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும் தொடங்குங்கள்.

1. புதியன விரும்பு :
        நாம் எல்லோருடைய மனதிலுமே ஆழமாக பதிய வைக்கப்பட்டிருக்கும் ஒரு விஷயம் 'விதிகளை மீறக்கூடாது' போக்குவரத்திலும் அறம் சார்ந்த விஷயங்களிலும் விதிகளை மீறக்கூடாது என்பது சரிதான். ஆனால் எல்லா இடங்களிலும் யாரோ ஒருவரால் கட்டமைக்கப்பட்டிருக்கும் சக்ஸஸ் ஃபார்முலா என சொல்லப்படுபவைகளைத் தானே தினம் தினம் கடை பிடிக்கிறோம். இந்த வழக்கத்துக்கு ஒரு சின்ன புள்ளி வைப்போம். உங்கள் ஒவ்வொரு நாளையும் புதுமையான விஷயங்களோடு தொடங்குங்கள். ஒரு வேலையை இப்படித்தான் செய்ய வேண்டும் என்பது போன்ற பழமையான கருத்துகளை உடைத்தெறிந்து விட்டுப் புது புதுக் கோணங்களில் அணுகும்பொழுது உங்கள் வெற்றிகளை தீர்மானிப்பது நீங்களாக இருப்பீர்கள். எளிதாக சொல்ல வேண்டுமானால் நம்ம சக்ஸஸ் ஃபார்முலாவை நாம தான் எழுதுவோம்.

2. செய்வது துணிந்து செய் :
       ஒரு செயலை செய்யத் துவங்கும் முன் நிறைய யோசிப்பீர்களா? யோசிக்கலாம் தவறேயில்லை. ஆனால் நன்றாக யோசித்து செய்யத் துவங்கிய செயலை எந்த தயக்கமும் குழப்பங்களும் இல்லாமல் செய்து முடிக்க வேண்டும் என்கிறார் பாரதி. எப்பொழுதுமே ஒரு செயலை செய்யத் துவங்குகையில் நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் இருந்து நிறைய எதிர்ப்புகளும் விமர்சனங்களும் வரும் தான். அவ்வளவு ஏன் உங்களுக்கே கூடவும் நிறைய குழப்பங்கள் வரும். அப்படி மனத்தை தடுமாற செய்யாமல் எடுத்துக் கொண்ட காரியத்தை தைரியமாக செய்து முடிக்கப் பழகுவோம்.    

3. நேர்படப் பேசு :

        அகத்தின் அழகு முகத்தில் மட்டுமல்ல உங்கள் வார்த்தைகளிலும் வெளிப்படும். உங்களிடமிருந்து வெளிப்படும் ஒவ்வொரு வார்த்தையும் நீங்கள் யார் என்பதை காட்டுவதோடு உங்கள் மன நிலையை வெளிப்படுத்துவதாகவும் இருக்கும். ஒவ்வொரு சொல்லும் நேரம் போன்று திரும்பப் பெற முடியாதது. உங்கள் எதிரில் இருப்பவர் யாராக இருப்பினும் நேர்மையாகவும் உங்கள் கருத்தை நேருக்கு நேராக வேளிப்படுத்தக் கூடியவராகவும் இருங்கள். எப்பொழுதும் பிறரை பற்றிய எதிர்மறை கருத்துகளை இன்னொருவருடன் பகிர்ந்து கொள்வதை தவிருங்கள்.    

4. பெரிதினும் பெரிது கேள் :
       உங்களிடம் ஒரு சின்ன கேள்வி. பொறுமையாக யோசித்து பதில் சொல்லுங்கள்.  

' உங்களுக்கு இருக்கும் பெரிய ஆசை என்ன? ' 
' யோசிச்சிங்களா? ' 

நிறைய ஆசைகள் முட்டி மோதி இருக்குமே? 
ஒன்றும் பிரச்சினையில்லை நிதானமாக ஒரு முடிவுக்கு வாருங்கள்.  இப்படி உங்கள் ஆசைகளை பற்றி யோசிக்க தொடங்கியதும் வரிசைகட்டி நின்றவைகளில் எத்தனை விஷயங்கள் உங்களுக்கானவை. எத்தனை உங்களை சுற்றியிருப்பவர்களுக்கானவை? பதிலைச் சொல்ல வேண்டாம். உங்களின் பெரும்பாலான ஆசைகளைப் போலவே அது உங்களுக்கானதானது தான். உங்கள் கனவுகள் பெரிதாக இருக்க வேண்டும் எனச் சொல்லும் பாரதி அவை உங்களை சுற்றியிருப்பவர்களின் உரிமைகளுக்கானதாகவும் இருக்க வேண்டுமென்கிறார். அவை எளிதாக கிடைக்காத பொழுது அதற்காக கடின உழைப்பை கொடுத்துப் பெற வேண்டுமென்கிறார்.

 

 

பெரிதினும் பெரிது கேளுங்கள்..!!

தொகுப்பு : க. பாலாஜி

Don't miss this

Do you like the story?

Please Appreciate the Author by clapping!